அம்மன் கோயில்களுக்குப் படையெடுக்கும் விஜய்! பெண்கள் ஓட்டா, கொங்கு கணக்கா? பின்னணியில் அரசியல் ஸ்கெட்ச்? – Kumudam

Spread the love

தமிழ்நாடு அரசியலில் முதலமைச்சர் விஜய் எதைச் செய்தாலும், அதற்குப் பின்னால் என்ன கணக்கு இருக்கிறது என்று அலச ஆரம்பித்துவிடுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள். அந்த வரிசையில், இப்போது அவரது கோயில் பயணங்களும் பேசுபொருளாகியிருக்கின்றன.

குறிப்பாக, அடுத்தடுத்து அம்மன் கோயில்களில் விஜய் வழிபாடு நடத்துவது ஏன்? பெண்களின் வாக்குகளை ஈர்க்கும் முயற்சியா? கொங்கு மண்டலத்தில் செல்வாக்கை அதிகரிக்கும் திட்டமா? அல்லது அரசியலுக்கு அப்பாற்பட்ட தனிப்பட்ட நம்பிக்கையா? இப்படிப் பல கேள்விகள் அரசியல் களத்தில் ரவுண்டு கட்டுகின்றன.

கோயில் பயணம்… தொடரும் பட்டியல்!

தேர்தல் பிரச்சாரத்தின்போது திருச்செந்தூர் முருகன் கோயிலில் வழிபாடு நடத்திய விஜய், மகாராஷ்டிராவின் ஷீரடி சாய்பாபா கோயிலுக்கும் சென்றார். தேவாலயத்திலும் பிரார்த்தனை செய்தார். அதாவது, வெவ்வேறு மத நம்பிக்கைகள் சார்ந்த வழிபாட்டுத் தலங்களுக்கும் அவர் சென்றிருக்கிறார்.

முதலமைச்சரான பிறகு கர்நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலில் வழிபட்டு, அம்மனுக்கு 1.6 கிலோ எடையுள்ள வெள்ளி வாளைக் காணிக்கையாகச் செலுத்தினார். 

தொடர்ந்து மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலும் தரிசனம் செய்தார். சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடியுடன் இணைந்து வழிபாட்டிலும் பங்கேற்றார்.

இந்த வரிசையில், தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது மூலனூர் வஞ்சியம்மன் கோயிலில் விஜய் வழிபட்டார். அடுத்ததாக, ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள கனக துர்கை அம்மன் கோயிலுக்குச் செல்லவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையெல்லாம் பார்த்துவிட்டுத்தான், ‘விஜய்யின் அடுத்தடுத்து அம்மன் கோயில் விசிட்களுக்கு ஏதாவது அரசியல் காரணமாக இருக்கிறதா?’ என்று கேள்வி எழுப்புகிறார்கள் விமர்சகர்கள்.

பெண்கள் ஓட்டு… அம்மன் சென்டிமென்ட்டா?

தமிழ்நாட்டுத் தேர்தல் களத்தில் பெண்களின் வாக்குகள் எவ்வளவு முக்கியம் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கட்டணமில்லா இலவசப் பேருந்துப் பயணம், மகளிர் உரிமைத்தொகை, பல்வேறு நலத்திட்டங்கள் எனப் பெண்களின் ஆதரவைப் பெற அரசியல் கட்சிகள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றன.

இந்தச் சூழலில், விஜய் அடுத்தடுத்து அம்மன் கோயில்களுக்குச் செல்வது பெண்களின் ஆதரவை ஈர்க்கும் உத்தியா என்ற விவாதம் கிளம்பியிருக்கிறது.

பல குடும்பங்களில் அம்மன் வழிபாடு என்பது வெறும் கோயில் தரிசனம் மட்டுமல்ல, குடும்ப நம்பிக்கை, குலதெய்வ வழிபாடு, தலைமுறைத் தொடர்பு எனப் பல அம்சங்களோடு பின்னிப் பிணைந்திருக்கிறது. இதனால், விஜய்யின் அம்மன் கோயில் பயணங்களை அரசியல் கண்ணோட்டத்தில் சிலர் அணுகுகிறார்கள்.

ஆனால், அம்மன் கோயிலுக்குச் சென்றாலே பெண்களின் வாக்குகள் கிடைத்துவிடுமா? வழிபாட்டுக்கும் வாக்குப்பதிவுக்கும் இடையே அப்படியொரு நேரடிக் கணக்கைப் போட்டுவிட முடியுமா? என்பதும் கவனிக்க வேண்டிய கேள்விதான்.

பெரியார் கொள்கை ஒரு பக்கம்… கோயில் தரிசனம் மறுபக்கம்!

விஜய்யின் அரசியல் பேச்சுகளில் பெரியார் கொள்கைகள் இடம்பெறும் நிலையில், அவரது கோயில் பயணங்களை முன்வைத்து விமர்சனங்களும் எழுகின்றன.

‘பெரியார் கொள்கைகளைப் பேசும் விஜய், தொடர்ந்து கோயில்களுக்கும் செல்வது முரண்பாடா?’ என்பதுதான் ஒரு தரப்பினரின் கேள்வி. வெற்றிவேல் வீரவேல் முழக்கம், கிருஷ்ண ஜெயந்தி தொடர்பான கருத்துகள், கோயில் வழிபாடுகள் என விஜய்யின் வெவ்வேறு செயல்பாடுகளையும் ஒருசேர வைத்துப் பார்க்க வேண்டும் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.

அதேநேரத்தில், அரசியல் கொள்கையும் தனிப்பட்ட மத நம்பிக்கையும் ஒன்றாகத்தான் இருக்க வேண்டுமா என்ற எதிர்க்கேள்வியும் எழுகிறது. பெரியார் கொள்கைகளை ஆதரிப்பவர் கோயிலுக்குச் செல்லக் கூடாது என்று வரையறுக்க முடியுமா என்பதும் விவாதத்துக்குரிய விஷயம்தான்.

9,000 குடும்பங்களின் குலதெய்வம்… கொங்கு கணக்கா?

இந்த நிலையில், தாராபுரம் பிரச்சாரத்தின்போது மூலனூர் வஞ்சியம்மன் கோயிலுக்குச் சென்ற விஜய்யின் பயணம், கொங்கு மண்டல அரசியலோடும் இணைத்துப் பேசப்படுகிறது.

அந்தக் கோயில் சுமார் 9,000 குடும்பங்களின் குலதெய்வமாக விளங்குவதாக அமைச்சர் ரமேஷ் தெரிவித்திருந்தார். மேலும், முதலமைச்சர் கோயிலுக்கு வந்து சென்றதை அரசியலாக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.,
 
இதையடுத்து, குறிப்பிட்ட சமூகத்தினரிடையே செல்வாக்கை வளர்க்கும் நோக்கத்தில்தான் விஜய் அந்தக் கோயிலுக்குச் சென்றாரா என்ற கேள்வியைச் சிலர் முன்வைக்கின்றனர். 

பாஜகவின் தேர்தல் உத்திகளைப் போலவே, சாதி மற்றும் சமூக ஆதரவு தொடர்பான கணக்குகளைத் தவெகவும் கையாள்கிறதா என்ற விவாதமும் இந்தச் சூழலில் எழுகிறது.

என்னவாக இருந்தாலும், இவற்றையெல்லாம் கண்டுக் கொள்ளாத விஜய்யின் கோயில் தரிசனம் தொடர்கிறது… அதற்குப் பின்னால் அரசியல் கணக்கு இருக்கிறதா என்ற விவாதமும் தொடர்கிறது. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *