ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு தினமும் ஏராளமான மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மின்சார ரயில்கள் மூலம் ஆவடி, அம்பத்தூர், பெரம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் பெண்கள், கல்லூரி மாணவ – மாணவியர், கூலித்தொழிலாளர்கள் என பலத்தரப்பினரும் பயணிக்கின்றனர்.
இந்த நிலையில், ரயில்களில் பயணம் செய்யும் நபர்கள் சிலர் கழிவறை மற்றும் படிக்கட்டில் அமர்ந்து கொண்டு மது குடிப்பது, புகைப்பது என அட்டூழியம் செய்வதும் தொடர்க்கதையாகியிருக்கிறது.

நேற்று முன்தினம், அரக்கோணத்தில் இருந்து சென்னை புறப்பட்ட மின்சார ரயிலில் 2 நபர்கள் படிக்கட்டு அருகே அமர்ந்தபடி மது பாட்டில்களை கையில் வைத்துக்கொண்டு மது குடித்தனர். சக பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்தபடி, அவர்களிடம் `இங்கு இப்படி மது அருந்தலாமா?’ என்று கேட்டபோது, அவரிடம் அவர்கள் வாக்குவாதம் செய்தனர்.
இந்த காட்சிகளை அந்த பயணி, சமூக வலைதளங்களிலும் பகிர்ந்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இதுபோன்ற அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.