அரசியலில் குதிக்கும் இன்பநிதி? தந்தைக்காக களமிறங்குகிறாரா? வைரலாகும் இன்ஸ்டா ஸ்டோரி.! – Kumudam

Spread the love

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து முதலமைச்சர் விஜய் ஆற்றிய உரையில், திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் அவையில் அமளியில் ஈடுபட்டதுடன், பின்னர் வெளிநடப்பும் செய்தனர்.

இந்த நிலையில், முதலமைச்சர் விஜய் சொன்ன ஒரு குட்டிக்கதை தற்போது தனிநபர் தாக்குதலாக மாறி, திமுக மற்றும் தவெக இடையே பெரும் வார்த்தை போராக மாறியுள்ளது.

அப்படி விஜய் சொன்ன குட்டிக்கதை என்னவென்றால், “ஒரு ஊரில் ஒரு பெரியவர் வெயில் அதிகமாக இருப்பதாகச் சொல்லி, கண்ணுக்கு மேலே கை வைத்துக்கொண்டு எதையோ தேடிக்கொண்டிருந்தாராம். அப்போது அருகில் இருந்த சிறுவன் என்ன தேடுகிறீர்கள் என்று கேட்க, அதற்கு அந்தப் பெரியவர், “உன் அப்பா இங்கேயேதான் இருப்பார் என்று சொன்னார்கள், அதான் தேடிக்கொண்டிருக்கிறேன்” என்றாராம். நக்கலாகவும், நையாண்டியாகவும் பேச எங்களுக்கும் தெரியும் என்பதைச் சொல்லவே இந்தக் கதையைச் சொன்னேன்என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்திருந்தார்.

முதலமைச்சர் விஜய்யின் இந்த குட்டிக்தை, முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினையும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினையும் விமர்சிப்பதாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழ, இதற்கு உதயநிதி ஸ்டாலினும் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிலடி கொடுத்திருந்தார்.

இதுதொடர்பாக உதயநிதி தனது எக்ஸ் பக்கத்தில், “குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது. செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும். ஆகவே, நடிகர் விஜய் என்பதை மறந்து, இனியாவது முதலமைச்சர் விஜயாக நடந்து கொள்ள வேண்டும்”  என்று குறிப்பிட்டு இருந்தார். இதனைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே சோஷியல் மீடியாவில் மோதல் வெடிக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், தன்னுடைய தந்தைக்கு ஆதரவாக களத்தில் குதித்துள்ளார் உதயநிதியின் மகன் இன்பநிதி. 

அதாவது, திமுக இளைஞரணி பதிவிட்டுள்ள ஒரு பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக வைத்துள்ளார். முதல்முறையாக அரசியல் கருத்தை இன்பநிதி பேசுவதாகவும், விரைவிலேயே அவரும் அரசியலில் குதிக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே, வாரிசு அரசியல் என்ற குற்றச்சாட்டு திமுக மீது வைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இன்பநிதியின் இந்த வருகை திமுகவிற்கு பாதிப்பை ஏற்படுத்துமா? அல்லது பலப்படுத்துமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *