வந்தே மாதரம் பாடலை அரசு விழாக்களில் கட்டாயமாக்குவதை எதிர்த்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது…
“மதச்சார்பின்மைக்கு எதிரான, ‘வந்தே மாதரம்’ பாடலை அரசு விழாக்களில் கட்டாயமாக்குவதா? ஒன்றிய அரசின் எதேச்சதிகாரப் போக்கைக் கண்டிக்காது தவெக அரசு அமைதி காப்பதா?
அரசின் நிகழ்ச்சிகளில் ‘வந்தே மாதரம்’ பாடல் கட்டாயமாகப் பாடப்பட வேண்டுமென ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
இது மதச்சார்பின்மையை அடிநாதமாகக் கொண்டு, பன்மைத்துவத்தை நாட்டின் அடையாளமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்திய நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்துக்கு முற்றிலும் எதிரானதாகும். அதனை வன்மையாக எதிர்க்கிறேன்.
1882 ஆம் ஆண்டு பங்கிம் சந்திர சட்டர்ஜியால் எழுதப்பட்டு வெளியிடப்பட்ட “ஆனந்தமடம்’ புதினத்தின் மூலம் புகழ்பெற்ற ‘வந்தே மாதரம்’ பாடல் நாட்டுப்பற்றை வலியுறுத்துவது எனக் கூறப்பட்டாலும், அப்பாடலில் இந்து மதத்தின் கடவுளர்களைப் பற்றிய வரிகள் இருப்பதால், எல்லா சமயத்தவரும் அதனை ஏற்க முடியாது என்பதைக் கருதியே, அப்பாடல் நாட்டுப்பண்ணாக அறிவிக்கப்படாது தவிர்க்கப்பட்டது.
அப்படியிருக்கையில், அதனை அரசு நிகழ்ச்சிகளில் கட்டாயமாக்கித் திணிப்பது இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு ஊறுவிளைவிக்கும் கொடுஞ்செயலாகும்.