“அறிவுசார் நக்சல்” கருத்து: ப.சிதம்பரத்தை கடுமையாக விமர்சித்த ஹிமந்த பிஸ்வா சர்மா! – Kumudam

Spread the love

டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த பின்னர், நாட்டு மக்களுக்காக உரையாற்றுகையில் பிரதமர் நரேந்திர மோடி  அதிகார மையங்களில் நக்சல் சிந்தனை கொண்ட பலர் பல ஆண்டுகளாக இருப்பதாகவும், அவர்கள் அரசின் முக்கியக் குழுக்களில் ஆலோசகர்களாக இருந்தபோது, அவர்களின் சிந்தனைகள் அரசின் கொள்கைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் கூறினார்.

மேலும், வனப்பகுதிகளில் ஆயுதமேந்திய நக்சல்களை ஒழித்துவிட்டதாகவும், ஆனால் நக்சல் சிந்தனையுடன் நாட்டில் வன்முறை மற்றும் அமைதியின்மையை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளைத் தேடுபவர்கள் இன்னும் இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். நக்சல் சிந்தனை கொண்டவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், முன்னாள் மத்திய உள்துறை அமைச்சரான ப.சிதம்பரம் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “நான் ஒரு சிந்தனை ரீதியான அறிவுசார் நக்சல் என்பதில் பெருமை கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே, சிதம்பரத்தின் இந்தக் கருத்துக்கு அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “சிதம்பரம் வெறும் ‘திமாகி நக்சல்’ அல்ல; அவர் ஒரு ‘உண்மையான நக்சல்’” என்று ஹிமந்தா பிஸ்வா சர்மா விமர்சித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், கடந்த 2008 முதல் 2012ஆம் ஆண்டு வரை ப.சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். உள்துறை அமைச்சராக இருந்த ஒருவர் தன்னை ‘அறிவுசார் நக்சலைட்’ எனக் குறிப்பிட்டிருப்பது தற்போது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *