‘நாங்கதான் உண்மையான சர்வைவர்ஸ்’ – அலப்பறை செய்த ரெட் டீம்
வழக்கம் போலவே இந்த வாரமும் வீக்லி டாஸ்க்தான் ஹைலைட். ‘Survival Battle’ என்று இந்த டாஸ்க்கிற்கு தலைப்பிட்டது, பிக் பாஸ் ஆட்டத்தின் மையக்கருத்தாக்கத்தின் பிரதிபலிப்பு. வீடு இரண்டு அணியாகப் பிரிக்கப்பட்டது. நீலம் மற்றும் சிவப்பு. டாஸ்க் ஆரம்பிப்பதற்கு முன்பே இரு அணிகளும் அடித்துக் கொண்டார்கள். உணவு பதுக்கல்கள் நடந்தன.
ஒரு சமூகம் இனத்தால், மொழியால், நிறத்தால், மதத்தால் பிரியும் போது அவர்களிடையே தன்னிச்சையான பகைமை உருவாகி விடுகிறது. உதாரணத்திற்கு இந்தியர்களான நாம், ஓர் அண்டை நாட்டின் பெயர் சொல்லப்படும் போதே உஷ்ணமாகி விடுகிறோம். கண்ணுக்குத் தெரியாத நபர்களின் மீது எரிச்சல் வந்து விடுகிறது. இதற்குப் பின்னால் ஏராளமான அரசியல் காரணங்களும் பிரித்தாளும் சூழ்ச்சிகளும் இருக்கின்றன. ஒரு சிறிய கலவரம் ஏற்பட்டால் கூட அது உடனே பற்றிக் கொண்டு உயிர்பலிகள் நிகழ்கின்றன. அதுவரை பழகிய பக்கத்து வீட்டுக்காரரின் மீது தன்னிச்சையான வன்மம் வந்து விடுகிறது.
பிக் பாஸ் வீட்டில் நிகழ்ந்ததும் ஏறத்தாழ இதுவே. நாம் ஒரு கேம் ஷோவிற்குள் இருக்கிறோம், இந்த ஆட்டத்தின் சூழ்ச்சிகளுக்கு எளிதில் பலியாகிறோம் என்கிற தன்னுணர்வு எந்தவொரு போட்டியாளர்களிடமும் இல்லை. நிதானமான தருணங்களில் சிலர் மட்டுமே இதை உணர்கிறார்கள். அது வரை நண்பர்களாக பழகிக் கொண்டிருந்தவர்கள், அணியாகப் பிரிந்தவுடன் பரம்பரை விரோதிகள் போல மோதிக் கொள்கிறார்கள்.
வாசனின் ‘இரை கவர்தல்’ அட்டகாசங்கள்
இந்த சர்வைவல் போரில் பெரும்பாலான டாஸ்க்குகளில் நீல அணி வெற்றி பெற்றாலும் உண்மையாக ஸ்கோர் செய்தது சிவப்பு அணிதான். குறிப்பாக ‘நிரை கவர்தல்’ என்கிற பெயரில் இரை கவர்ந்த வாசனின் லூட்டிகளை எதிரணியால் சமாளிக்க முடியாமல் திணறினார்கள்.
‘நம்ம டீம் சமைச்சு சாப்பிட முடியாதுன்னுதானே பிக் பாஸ் சொல்றாரு. அவங்க சமைச்சத எடுத்து சாப்பிடுவோம், என்ன இப்ப?” என்று விதிகளுக்குள் இருந்த ஓட்டையை முதலில் கண்டுபிடித்தவர் வாசன்தான். இத்தகைய விதிமீறலை முனியம்மாள்தான் வழக்கமாக செய்வார். இந்த வாரத்தில் இத்தகைய அழிச்சாட்டியங்களை அதிக அளவில் ஜாலியாக செய்தது வாசன்தான். ‘கேம் புரியல’ என்று சொல்லப்பட்டவர், வைரம் திருடிய டாஸ்க்கில் வென்றது, ஒரு முறை மட்டுமே நிகழ்ந்த அதிசயமாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அடுத்த வாரத்திலேயே ஆட்டத்தின் சூட்சுமங்களை தன்னால் புரிந்து கொண்டு ஜாலியாக ஆடி பார்வையாளர்களைக் கவர்ந்தது சிறப்பு.
வாசனின் ‘இரை கவர்தல்’ அட்டகாசத்தைப் பார்த்தவுடன்தான் சிவப்பு அணியில் உள்ள மற்றவர்களுக்கும் துணிச்சல் வந்தது. ‘இவரை எப்படி சமாளிக்கறதுன்னே தெரியல’ என்று நீல அணியே அலுத்துக் கொள்ளுமளவிற்கு வாசனின் அட்டகாசங்கள் தொடர்ந்தன.
வாசனும் மற்றவர்களும் உணவு எடுத்தது விதி மீறல் இல்லையா என்றால் ஆம். ஆனால் சர்வைவலுக்கான போட்டியில் நாகரிக உலகின் விதிகள் செல்லுபடியாகாது. ‘பசி வந்தால் பத்தும் பறக்கும்’ என்கிற பழமொழி போல பசிக்கு முன்னால் எந்தவொரு விதியும் பறந்து விடும்.
குற்றங்களுக்கு கடுமையான தண்டனை தருவதை விடவும், குற்றங்கள் எவ்வாறு உருவாகின்றன என்கிற காரணங்களைக் கண்டுபிடிப்பதும் அவற்றை சரி செய்வதுமே உண்மையான சமூக மாற்றம். பசுமைப் பிரதேசங்களில் இருப்பவர்கள் செல்வந்தவர்களாகவும் வறண்ட பிரதேசங்களில் இருப்பவர்கள் வறுமையானவர்களாகவும் இருப்பது நில அமைப்பால் விளையும் கொடுமை.
உணவு விளைவிக்க முடியாத பஞ்ச சூழல்களில் இருப்பவர்கள், வளமையானவர்களிடம் இருந்து கவர்வது இயல்பாக உருவாகிய விதிமீறல். இந்த நோக்கில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தையே ‘குற்றப் பரம்பரை’ என்று முத்திரை குத்தியது பிரிட்டிஷ் அரசாங்கம். இதற்காகவே பிரத்யேகமான சட்டங்கள் கடுமையாக உருவாக்கப்பட்டன. வட இந்தியாவில் துவங்கிய இந்தக் கொடுமை தென்னிந்தியாவிற்கும் பரவியது.
பிக் பாஸ் வீட்டில் நிகழ்ந்த உணவுப் போராட்டத்தை இந்த அடிப்படையில்தான் பார்க்க வேண்டும். ஏற்கெனவே கலகங்களை உருவாக்கும் முனியம்மாள், பசி தாங்க முடியாமல் உணவுப் பறிமுதல்களில் ஈடுபட்டார். அவை தடுக்கப்படும் போது சுயபச்சாதாபத்தால் தனிமையில் அழுதார்.