இதற்குப் பதிலளித்த அவரது தோழி, “நீ நலமாக இருக்கிறாய் என்று நம்புகிறேன், உன்னை நினைத்தால் கவலையாக இருக்கிறது” எனக் கூற, அதற்குத் துவிஷா சர்மா, “நான் நன்றாகத்தான் இருக்கிறேன், ஆனால் எனக்கு வீட்டின் ஞாபகம் அதிகமாக வருகிறது, உன்னையும் ரொம்ப மிஸ் பண்றேன்பா…” எனத் தெரிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் அவர் அனுப்பிய மற்றொரு செய்தியில், “நண்பா, நான் ஏதோ ஒரு வலையில் மாட்டிக்கொண்டேன். நீ மட்டும் இதில் சிக்கிக்கொள்ளாதே. என்னால் இப்போது அதிகமாகப் பேச முடியாது, சரியான நேரம் வரும்போது நானே அழைக்கிறேன்” என மெசேஜ் அனுப்பியிருக்கிறார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர், “உன்னை நினைத்து பயமாக இருக்கிறது, நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்” என்று மறுபதிவு செய்துள்ளார். இந்த நிலையில்தான் அவரின் சடலம் மீட்கப்பட்டிருக்கிறது.
மகளின் மரணத்திற்குப் நீதி கேட்டு துவிஷா சர்மாவின் குடும்பத்தினர் மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவின் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போபால் எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையின் பிணவறையில் கடந்த ஐந்து நாள்களாக துவிஷா சர்மாவின் உடல் வைக்கப்பட்டிருந்த நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மறுபிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். துவிஷா சர்மாவின் தந்தை நவநிதி சர்மா மற்றும் அவரது உறவினர் ஆஷிஷ் சர்மா ஆகியோர், போபாலுக்கு வந்த நாள் முதலே நீதிக்காக அலைக்கழிக்கப்படுவதாகக் கண்ணீருடன் குற்றம் சாட்டியுள்ளனர்.