விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கோவையிலிருந்து தன் தொண்டர்களுடன் முகநூல் லைவ் மூலம் உரையாடினார். அந்த உரையில், “அரசியல் நெருக்கடியை உணர்ந்துதான் தவெக அரசுக்கு நம் ஆதரவை வழங்கியிருக்கிறோம். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்றக் கூட்டணியில் இருந்திருக்கிறோம். எனவே, நம் முடிவுகள் குறித்து விமர்சனம் எழுவது இயல்பு, அதை தவிர்க்க முடியாது. இதில் வருந்தவோ, அல்லது ஆத்திரப்படவோ கூடாது.
அதிமுக – பாஜக கூட்டணி வெற்றிப்பெறக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். அதை வெற்றிகரமாக முறியடித்தோம். இஸ்லாமிய, கிறிஸ்த வாக்குகளை பெருமளவில் தவெக பிரிக்கும். இதனால் திமுக ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழக்கும் என்ற கணிப்பு நம்மிடம் இருந்தது.
நானும் தமிழ்நாடு அரசியலில் தீவிரமாக இயங்க வேண்டும் என தேர்தலில் போட்டியிடவும் முடிவு செய்தேன். ஆனால், தேர்தல் முடிவு எதிர்பார்க்காத வகையில் அமைந்தது. அதன் பிறகே தீவிர ஆலோசனைக்குப்பிறகு வெளியிலிருந்து ஆதரவு என்ற நிலைப்பாட்டுக்கு வந்தோம். இதற்கு இடையில்தான் என் மீது பேரம் பேசுகிறார், துணை முதல்வராக கேட்கிறார், முதல்வராக முயற்சிக்கிறார் என்றெல்லாம் அவதூறுகளை அள்ளி வீசினார்கள். கரூரில் 41 பேர் இறந்தபோது ஆதவ் அர்ஜுனாவை தொடர்புகொண்டு பேசி, நடந்தவைகள் குறித்து விசாரித்து, ஆறுதல் கூறினேன். விஜய்யிடன் மனம் தளரவேண்டாம் எனக் கூறச்சொன்னேன்.