அ.தி.மு.க, தி.மு.க,த.வெ.க ஆட்சிகளில் பவர்புல் பதவி – யார் இந்த அருண் ஐ.பி.எஸ்? – who is arun IPS

Spread the love

அ.தி.மு.க ஆட்சியில் சென்னை கூடுதல் கமிஷனராக பணியாற்றிய அருண் ஐ.பி.எஸ், தி.மு.க ஆட்சியில் சென்னை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார். எப்படி இந்த மேஜிக் நடக்கிறது என தெரியாமல் சக ஐ.பி.எஸ் அதிகாரிகள் குழம்பிக் கொண்டிருக்க… த.வெ.க ஆட்சியிலும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கிறார் அருண் ஐ.பி.எஸ்.

அருண் ஐ.பி.எஸ் பின்னணி குறித்து சக ஐ.பி.எஸ் அதிகாரிகளிடம் விசாரித்தோம்.

“சேலத்தைச் சேர்ந்த அருண், இன்ஜினீயரிங் பட்டதாரி. யுபிஎஸ்சி தேர்வில் 1998-ல் தேர்ச்சி பெற்று தமிழக கேடர் ஐ.பி.எஸ் அதிகாரியானார். இவர் ஏ.எஸ்.பியாக நெல்லை மாவட்டம் நாங்குநேரி, தூத்துக்குடியில் பணியாற்றினார்.

பின்னர் பதவி உயர்வு பெற்று கரூர் மாவட்ட எஸ்.பி-யானார். அதன்பிறகு கன்னியாகுமரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் எஸ்.பி-யாக பணியாற்றிய அருண், சென்னை அண்ணாநகர் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி எஸ்.பியாக பணியாற்றினார். அப்போது வழக்கறிஞர் கே.கே.சாமி என்பவரை வழக்கு ஒன்றில் கைது செய்து அவரிடம் நடத்திய விசாரணை விவகாரம் நீதிமன்றம், மனித உரிமை ஆணையம் வரை சென்றது. அந்த வழக்கில் கே.கே.சாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்த பிறகும் இதுவரை அருண் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் நிலுவையிலிருக்கிறது.

அ.தி.மு.க ஆட்சியில் ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை அருண் ஐ.பி.எஸ்ஸிக்கு எந்தவித முக்கிய பதவிகளும் கொடுக்கப்படவில்லை. ஜெயலலிதாவின் மறைவுக்குப்பிறகு முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருந்த சமயத்தில் சென்னை போக்குவரத்து பிரிவு, வடக்கு கூடுதல் கமிஷனரானார் அருண்.

அ.தி.மு.க ஆட்சியில் பவர்ஃபுல் பதவியிலிருந்த அருண், அடுத்து தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் மேலிட செல்வாக்கு மூலம் காவல்துறையில் முக்கிய பதவிகளில் அடுத்தடுத்து நியமிக்கப்பட்டார். குறிப்பாக சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி, சிவில் சப்ளை ஏ.டி.ஜி.பி, ஆவடி போலீஸ் கமிஷனர், சென்னை போலீஸ் கமிஷனர் ஆகிய பதவிகளில் நியமிக்கப்பட்டார். இது அப்போது ஆச்சர்யமாக பார்க்கப்பட்டது.

சென்னை போலீஸ் கமிஷனராக அருண் பணியாற்றிய காலக்கட்டத்தில் ஏழு என்கவுன்ட்டர்கள் நடத்தப்பட்டன. அந்த என்கவுன்ட்டர் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் ஒன்றும் தொடரப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குன்றத்தூரைச் சேர்ந்த ரௌடி திருவேங்கடத்தை கஸ்டடியில் எடுத்து விசாரித்த போது என்கவுன்ட்டர் நடந்தது. நீதிமன்ற காவலில் இருந்த திருவேங்கடம் என்கவுன்ட்டர் செய்யப்பட்டதும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சி.பி.ஐ விசாரணை கோரி அவரின் மனைவி பொற்கொடி தரப்பில் வழக்கும் அருணுக்கு சிக்கலை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *