இந்நிலையில் தங்களுக்கு குடைச்சல் கொடுக்கும் தி.மு.கவுக்கு செக் வைக்கவும், அ.தி.மு.க தரப்பை அமைதிபடுத்தவும் த.வெ.க தலைமை திட்டம் வகுத்து வருகிறது. இதற்காக புதிய யுக்தியை அவர்கள் கையில் எடுத்துள்ளார்கள்.
இதுகுறித்து த.வெ.க-வுக்கு நெருக்கமான வட்டாரங்களில் பேசும் போது “த.வெ.க -வை தனிமைப்படுத்த வேண்டும் என தேர்தலுக்கு முன்பாகவே அ.தி.மு.கவும், தி.மு.க வும் பல திட்டங்களை வகுத்தன. அதெல்லாம் எங்களுக்கு பெரும் நெருக்கடியாக இருந்தது உண்மை.
ஆட்சிக்கு நாங்கள் வரக்கூடாது என பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்துள்ள அ.தி.மு.க-வை தி.மு.க நாடியிருக்கிறது. ஆனால், எங்களை பி.ஜே.பி பி டீம் என தொடர்ந்து விமர்ச்சிக்கிறார்கள். இந்த யுக்தியை முதலில் காலி செய்ய உள்ளோம்.

ஆதவ் அர்ஜுனா இந்த யுக்தியை செயல்படுத்த ஆரம்பித்துள்ளார். விரைவில் அ.தி.மு.க-வும், தி.மு.க-வும் எந்த வகையில் கைகோர்த்து செயல்பட்டார்கள் என்பதை தொடர்ந்து நாங்கள் வெளியிடுவோம். இதற்காக யாரிடம் பேசினார்கள், மே-8ம் தேதி நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் உள்ளிட்ட அனைத்தயும் நாங்கள் ஆதரங்களாக மக்கள் முன்னிலையில் வைக்க போகிறோம்.
இதுவரை அ.தி.மு.க -வுடன் கூட்டணி குறித்து தி.மு.க எந்த கருத்தும் சொல்லவில்லை. அ.தி.மு.கவில் மட்டுமே, அது வெடித்துள்ளது. விரைவில் தி.மு.கவிலும் இந்த பஞ்சாயத்து கிளம்பும். இரண்டு கட்சிகளும் தங்கள் தேவைக்கு எதைவேண்டுமானாலும் செய்வார்கள் என்பதை மக்கள் மன்றத்தில் நாங்கள் எடுத்து வைத்தாலே, இனி இவர்கள் இருவரும் ஆட்சியை பிடிக்கும் கனவை நினைத்து கூட பார்க்க முடியாது. இனி அடுத்தடுத்த நாட்களில் எங்களிடமிருந்து வரும் ஆக்ஷன்கள் இதை செயலாக்கும்” என்கிறார்கள்.
இதனிடையே தனியார் ஊடகத்துக்கு பேட்டி அளித்த விசிக தலைவர் தொல்.திருமாவளவன், திமுக அதிமுக இணைந்து ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கை நடந்ததாகவும் தன்னை முதல்வராக்கும் முயற்சிகள் நடைபெற்றதாகவும் தெரிவித்துள்ள கருத்து முக்கியமானது.