ஆக்கிரமிப்பை அகற்றாத மும்பை மாநகராட்சி; கமிஷனரின் சம்பளத்தை நிறுத்தி வைத்து சுப்ரீம் கோர்ட் அதிரடி | Supreme Court halts salary of Mumbai Municipal Commissioner for failing to remove illegal encroachments

Spread the love

மும்பை புறநகர் பகுதியில் உள்ள போரிவலி என்ற இடத்தில் மாநகராட்சி பஸ் நிறுத்ததிற்காக ஒதுக்கப்பட்டு இருந்த இடத்தில் ஆக்கிரமிப்புகள் இருந்தன. அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டு இருந்தது.

அதன் பிறகு கடந்த ஜூலை மாதம் இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது சட்டவிரோத ஆக்கிரமிப்பை அகற்ற மும்பை மாநகராட்சிக்கு சுப்ரீம் கோர்ட் 3 மாதம் அவகாசம் கொடுத்தது. பல முறை இதற்காகக் காலக்கெடு வழங்கப்பட்டபோதிலும் மும்பை மாநகராட்சி சட்டவிரோத ஆக்கிரமிப்பை இடிப்பதில் தாமதம் செய்து வந்தது.

இவ்வழக்கு மீண்டும் தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனோஜ் மிஸ்ரா, 2025ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவைச் செயல்படுத்த மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவித்தார்.

மாநகராட்சி தலைமை அலுவலகம்

மாநகராட்சி தலைமை அலுவலகம்

மும்பை மாநகராட்சி சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ஆர். பி. பட், ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, அவர்களை நேரில் அழைத்து விசாரித்த பின்னரே ஆக்கிரமிப்பை அகற்றுவது குறித்த முடிவை எடுக்க வேண்டும் என்று சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதைச் சுட்டிக்காட்டினார்.

இந்த உத்தரவுதான் ஆக்கிரமிப்பை அகற்ற தாமதப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார். இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு வழங்கப்பட்ட உத்தரவுகளைச் செயல்படுத்தத் தவறியதற்காக, மாநகராட்சி ஆணையர் அஸ்வினி பிடேவுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியதுடன், அவரது ஊதியத்தை நிறுத்தி வைக்குமாறும், 5 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்துமாறும் உத்தரவிட்டுள்ளது.

மேலும், ஆக்கிரமிப்பாளர்களுடன் மாநகராட்சி நிர்வாகம் கைகோர்த்துச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டி, மிகக் கடுமையான கருத்துகளையும் தெரிவித்தனர். சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற 30 நாட்கள் அவகாசம் கொடுக்கும்படி மாநகராட்சி தரப்பில் கேட்கப்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *