ஆடிப்போன ஐரோப்பா.. நெதர்லாந்து ஆம்ஸ்டர்டாம் மைக்ரோசாப்ட் டேட்டா சென்டரில்.. அத்துமீறி பெரிய சம்பவம் | Protesters broke into a Microsoft data center site in Amsterdam, hanging anti-AI banners

Spread the love

International

oi-Velmurugan P

ஆம்ஸ்டர்டாம் : நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள மைக்ரோசாஃப்ட் டேட்டா சென்டர் மைய வளாகத்திற்குள் போராட்டக்காரர்கள் அத்துமீறி புகுந்து, ஏஐக்கு எதிரான பதாகைகளைத் தொங்கவிட்டனர். அத்துடன் ஏஐக்கு எதிரான வாசகங்களை ஸ்ப்ரே பெயிண்ட் மூலம் வரைந்தனர். போராட்டக்காரர்களில் ஒருவரான சாம் வான் டெர் பீக் கூறும் போது “இந்த முழு ஏஐ உள்கட்டமைப்பையும்” எதிர்ப்பதாகவும், தரவு மையங்கள் “நமது உலகத்தை அழித்துக்கொண்டிருக்கின்றன” என்றும் ஆவேசமாக கூறினார்.

ஏஐ மனித குலத்திற்கு எதிரானதாகவும், அதன் தரவு மையங்கள் தண்ணீர் பற்றாக்குறையை ஏற்படுத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த டேட்டா சென்டர்கள் எங்கே அமைந்தாலும் கடுமையான போராட்டங்கள் வெடிக்கின்றன. அந்த வகையில் நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாமில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் புதிய டேட்டா சென்டர் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்துக்குள் ,இன்று காலை போராட்டக்காரர்கள் அத்துமீறி நுழைந்துள்ளனர்.

Microsoft data center

சுமார் 100 பேர் கட்டுமானத் தளத்துக்குள் நுழைந்துள்ளனர். அவர்களில் சிலர் கிரேனில் ஏறி, ஏஐ தொழில்நுட்பத்துக்கு எதிரான பதாகைகளை வைத்திருக்கிறார்கள்.
மேலும், கட்டுமானத் தளத்தில் “Microsoft powers genocide” (இனப்படுகொலைக்கு மைக்ரோசாஃப்ட் துணைபோகிறது) என்ற வாசகம் அடங்கிய பதாகையையும் போராட்டக்காரர்கள் வைத்தனர். “மைக்ரோசாஃப்ட் வெளியேற வேண்டும்” என்றும், “பாலஸ்தீனத்தை விடுதலை செய்ய வேண்டும்” என்றும் முழக்கமிட்டனர்.

ஆம்ஸ்டர்டாமில் புதிய டேட்டா சென்டர் அமைப்பதற்கு எதிரான இந்தப் போராட்டம், நகர நிர்வாகம் 2030ஆம் ஆண்டு வரை புதிய டேட்டா சென்டர்களுக்கு தடை விதித்துள்ள நிலையில் நடந்துள்ளது. 2023ஆம் ஆண்டு இறுதியில் தற்காலிகத் தடை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தத் தடை அமல்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்தப் புதிய டேட்டா சென்டரில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மட்டுமே தனது சேவைகளைப் பயன்படுத்த உள்ளது. இந்தத் திட்டம் 2016ஆம் ஆண்டிலேயே திட்டமிடப்பட்டு, தடை விதிக்கப்படுவதற்கு முன்பே முன்னெடுக்கப்பட்டு வந்ததது ஆகும்.

ஆம்ஸ்டர்டாமில் மைக்ரோசாஃப்ட் டேட்டா சென்டர் கட்டுமானத் தளத்தில் நடைபெற்ற போராட்டம், ஐரோப்பா முழுவதும் டேட்டா சென்டர்களுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களின் தொடர்ச்சியாக அமைந்திருக்கிறது. கடந்த செவ்வாய்க்கிழமை டப்ளினில் உள்ள மைக்ரோசாஃப்ட் டேட்டா சென்டருக்கு வெளியே போராட்டக்காரர்கள் இஸ்ரேல் ராணுவ சோதனைச் சாவடியைப் போன்ற ஒரு மாதிரி அமைப்பை உருவாக்கி போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

கடும் எதிர்ப்பு காரணமாக கடந்த மாதம் பிரிட்டனின் மிகப்பெரிய டேட்டா சென்டர் திட்டத்திலிருந்து மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பின்வாங்கியது. அந்தத் திட்டத்துக்கான இடத்துக்கு 2030ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் மின்சாரம் வழங்க முடியும் என்று அந்நாட்டின் மின்சாரக் கட்டமைப்பு அதிகாரிகள் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. மேலும், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் 50ஆம் ஆண்டு விழா கொண்டாட்டத்தின்போதும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதலில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதாகக் கூறி அவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *