ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி அசோக்வர்தன் ஷெட்டி, திட்டக்குழுவின் முன்னாள் உறுப்பினர் நாகநாதன் ஆகியோர் இந்தக் குழுவின் உறுப்பினர்களாக இருந்தனர். குழுவின் இடைக்காலை அறிக்கை கடந்த பிப்ரவரியில் வெளியிடப்பட்டு சட்டமன்றத்திலும் வைக்கப்பட்டது. நிதி, தேர்தல், தொகுதி மறுவரையறை, கல்வி, சட்டத்திட்டங்கள் என முக்கியமான தலைப்புகளில் தீவிரமாக ஆய்ந்து ஒன்றிய – மாநில உறவில் இருக்கும் சமகால சிக்கல்களை வகைப்படுத்தியிருந்தனர். மிகக்குறிப்பாக இந்த அறிக்கை அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. இந்தியாவின் ஏனைய மாநிலங்களும் பயன்பெறும் வகையில் இருந்தது. குழுவின் இரண்டாம் கட்ட அறிக்கையை தாக்கல் செய்ய 2027 மே மாதம் வரை நேரம் கொடுக்கப்பட்டிருந்தது.
குழுவின் செயல்பாடுகள் ஆழமாக தீவிரமானதாக இருந்ததால் மே 2027 க்குப் பிறகு இன்னும் விரிவாக மூன்றாம் கட்ட அறிக்கைக் கூட தயார் செய்ய வைக்கலாம் எனும் திட்டமும் இருந்தது. ஆனால், தவெக அரசு அமைந்தவுடன் நிலைமை மாறிவிட்டது. ஆரம்பத்தில் இவர்களும் இந்தக் கமிட்டியின் செயல்பாடுகள் அப்படியே தொடரட்டும் என்றனர். ஆனால், ஆட்சியமைந்த இரண்டு மூன்று மாதங்களிலேயே கமிட்டிக்கு வழங்க வேண்டிய ஒத்துழைப்பை அரசு வழங்கவில்லை. கமிட்டியில் பணியாற்ற ஒரு குழு இருந்தால்தானே பணியாற்ற முடியும்? இந்த அரசு பணியாட்களையே குறைத்தது.