ஆடி வந்தாலே அம்மன் கோயில் வழிபாடு, கூழ் ஊற்றுதல், முளைப்பாரி, ஆடிப்பெருக்கு, இவைதான் நம் நினைவுக்கு வரும். ஆனால் சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி, கரூர் உள்ளிட்ட கொங்கு மண்டல கிராமங்களில் ஆடி முதல் நாளை வரவேற்கும் ஒரு தனித்துவமான மரபு இருக்கிறது.
அதுதான் “தேங்காய் சுடும் நோன்பு!’
மாலை சூரியன் மறையத் தொடங்கும் நேரம்.
வீட்டின் வாசலில் சிறு நெருப்பு மூட்டப்படும். குச்சியில் குத்தப்பட்ட தேங்காய்கள் மெதுவாக நெருப்பில் சுடப்படும். நெருப்பில் வெந்த தேங்காயின் மணம் ஊர் முழுக்க வீச, குழந்தைகள் அதைச் சுற்றி ஆர்வமாக நிற்க, பெரியவர்கள் பூஜைக்குத் தயாராவார்கள்.
தமிழகத்தின் பல பகுதிகளுக்குத் தெரியாத இந்த மணம், கொங்கு மண்ணின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்று.
மகாபாரதப் போரும் தேங்காய் சுடுதலும்.!
மேலோட்டமாகப் பார்த்தால், இது ஒரு சமையல் முறை போலத் தோன்றும். ஆனால், இது ஒரு வழிபாடு. தமிழ் மாதங்களில் ஆடி ஒரு திருப்புமுனை தென்மேற்குப் பருவமழை தொடங்கும் காலம், விவசாயப் பணிகளுக்கான ஆயத்தக் காலம். எனவே, இயற்கை வளமாகவும், குடும்பம் நலமாகவும், விளைச்சல் சிறப்பாகவும் இருக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு இந்த வழிபாடு நடத்தப்படுகிறது.
மகாபாரதப் போருடன் தொடர்பு இருக்கிறதா?
கொங்கு நாட்டுப்புற நம்பிக்கையின்படி, மகாபாரதப் போர் ஆடி மாதம் முதல் நாளில் தொடங்கி, பதினெட்டாம் நாளில் முடிந்ததாக ஒரு வாய்மொழிக் கதை உண்டு. தர்மம் வெல்ல வேண்டும் என்ற எண்ணத்தில், மக்கள் விநாயகருக்குத் தேங்காயைச் சுட்டுப் படைத்ததாக அந்தப் பகுதி மக்கள் நம்புகின்றனர். இது வரலாற்றில் இடம்பெறாவிட்டாலும், தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் ஓர் அழகான நாட்டுப்புறக் கதை.