வரலாற்றுச் சின்னமாக அழகுற காட்சியளிக்கும் எல்லீஸ் மதகுகள் (16 கண் பாலம்) கட்டுமானம் | அணை ஓசை 27

Spread the love

வரலாற்றுச் சின்னமாக அழகுற அமைந்த மேட்டூர் அணையின் அழகியலை தனித்துவமாக பறைசாற்றும் ஓர் இடத்திற்கு நாம் இப்போது வந்துள்ளோம்! 16 கண் பாலம் என்று வழக்கில் கூறப்படும் 16 மதகுகளை கொண்ட உபரி நீர் வெளியேறும் அமைப்பின் பாலத்தின் மீதுதான் நாம் இப்போது நின்று கொண்டிருக்கிறோம். இது குறித்து தொடரின் முற்பகுதியில் சுருக்கமாக நாம் கண்டது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

இங்கிருந்து அணையின் நீர்த் தேக்கத்தை காணும் போது எதிரில் இருப்பது கடலா? என்ற சந்தேகம் அனைவருக்கும் ஏற்படும். ஆம்! பரந்து விரிந்த தண்ணீரின் எல்லைகள் உங்கள் கண்களை விட்டு அகல மறுக்கும்.

உபரி நீர் வெளியேற்றத்திற்கு ஆரம்ப காலத்தில் காவிரி ஆற்றின் இடது கரையில் கர்னல் எல்லீஸ், (Royal Engineer) அப்போதைய மெட்ராஸ் மாகாண பொதுப்பணித்துறை சூப்பரின்டெண்டன்ட் இன்ஜினியராக இருந்தவர் வடிவமைத்த இடம். பின்னாளில் அணையின் இடம், மாறுதலுக்கு உட்பட்டாலும் சுமார் ஒரு மைல் தூரம் ஆற்றின் வடக்கு நோக்கி தள்ளப்பட்டு கட்ட ஆரம்பித்து இருந்தாலும் இந்த உபரி நீர் வெளியேற்ற இடம் மாறவில்லை.

மேட்டூர் அணை பூங்காவில் உள்ள கர்னல் எல்லீஸ் நினைவுச் சிலை

மேட்டூர் அணை பூங்காவில் உள்ள கர்னல் எல்லீஸ் நினைவுச் சிலை

இந்த இடம் அணையின் இடது புற வாக்கில் மலைப் பகுதியை சார்ந்து கணக்கிலடங்கா உபரி நீரையும் வெளியேற்றும் விதமான அமைப்பில் நீர் பாதை அமைந்து தொட்டில் பட்டி என்ற கிராமம் ஓரமாக பாய்ந்து மூன்று மைல் தூரம் கடந்து சென்று மீண்டும் காவிரி ஆற்றில் கலந்து விடுமாறு அமைப்பைப் பெற்றிருந்தது. சிற்சில இடங்களில் அமைந்திருந்த பெரிய குன்றுகளைத் தவிர நீரோட்டத்திற்கு தகுந்த வாகு (அமைப்பு) இங்கே இருந்தது.

உபரி நீர் வழிந்தோடத்தக்க அளவில் மதகுகளுக்கு ஏற்றவாறு மதகுகளின் அடிமட்ட அளவு + 770 அடி MSL என்ற அளவுக்கு குறைவாக வரும்படி அந்த நீர் பாதை சரி செய்யப்பட்டது. இந்த உபரி நீர் மதகுகள் அமைக்கும் பணி நடந்த இடத்தில் கீழ்கண்ட முக்கிய நான்கு வித பணிகள் நடைபெற்றன.

1. உபரி நீர் வெளியேற்றத்துக்கு தேவையான அளவு அங்கிருந்த மலையை வெட்டி உயரத்தை குறைப்பது. ஆம், மலையை வெட்டினார்கள்!

2. மதகுகளின் கதவுகளை ஏற்றி இறக்குவதற்கு தக்க அளவில் இந்த வெளியேற்றப் பகுதியில் தூண்களை அமைத்து அதில் கதவுகளை பொருத்தி இவற்றுக்கு மேலாக பாலம் அமைப்பது.

3. 60 அடிக்கு 20 அடி அளவிலான கதவுகளைப் பொருத்தி அதை இயக்கும் வகையில் வேலை மேடையை நிர்மாணிப்பது.

4. மதகுகளின் கீழ்புறம் கற்களை வைத்து நீளவாக்கில் சுவர் எழுப்பி, நீருக்கு கவசம் போல வழிந்தோடும் அமைப்பை நிறுவுதல்.

ஆரம்ப கால திட்டமிட்டபடி 40 அடி அகலத்தில் 25 அடி உயர நீர் வெளியேறும் பாதைகள் அமைக்கவும் அதற்காக 1,71,99,000 யூனிட் அளவுக்கு கற்களும், மண்ணும் வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என்றும் இதற்கான செலவு ரூபாய் 9,12,000/- பிடிக்கும் என்றும் உத்தேசமாக மதிப்பிடப்பட்டிருந்தது.

எல்லீஸ் பாலம்- ஆரம்பக் கட்டுமானம்

எல்லீஸ் பாலம்- ஆரம்பக் கட்டுமானம்

ஆனால், 60 அடி அகலத்தில் 16 வெளியேறும் பாதைகள் என்று மாற்றியமைக்கப்பட்டு வெட்டி எடுத்த கல் மற்றும் மணல் குவியல்கள் 1,50,00,000 யூனிட்டுகளாக குறைந்து செலவு மீதமானது! மொத்தம் 10,71,000/- ரூபாய்க்கு வேலை ஆணை பிறப்பிக்கப்பட்டு இருந்தும், இதற்கான மொத்த செலவு ரூபாய் 4 லட்சத்திற்கும் குறைவானதாகவே ஆனது! இதில் வெட்டி எடுக்கப்பட்ட ஏராளமான கற்கள் கட்டிட வேலைக்கு பயன்படுத்தப்பட்டன.

மேலும் ஆரம்ப காலத்தில் “கர்னல் எல்லீஸ்” வினாடிக்கு 1,20,080 கன அடி என்ற அளவில் உபரிநீர் வெளியேற்றத்துக்கு இந்த அமைப்பை வடிவமைத்திருந்தாலும், அதிகபட்ச அளவாக விநாடிக்கு 2,50,000 கன அடி வெளியேற்றுத்தைத் தாங்கும் அளவுக்கு இறுதி வடிவம் தரப்பட்டது. ஆனால், 1924-ல் ஏற்பட்ட வெள்ளம் இந்த மதிப்பீடுகளை மாற்றி அமைக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தை தந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். காரணம், 1924-ல் , விநாடிக்கு 4,56,000 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம் பதிவானதால், இந்த எல்லீஸ் மதகுகளின் அமைப்பை மேலே குறிப்பிட்ட படி மாற்றி 60 அடி அகலம் 20 அடி உயரம் என்ற கதவுகள் 16 எண்ணிக்கையில் இறுதி செய்யப்பட்டு கட்டப்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *