ஆட்சி கவிழ்ப்பா? ஸ்டாலின் – எடப்பாடி சிண்டிகேட்..! – Kumudam

Spread the love

‘ஆறு மாதங்களுக்கு த.வெ.க. அரசை விமர்சிக்கமாட்டேன்’ என்று சொன்ன ஸ்டாலின், திடீரென தற்போது, ‘மூன்று மாதங்கள்கூட த.வெ.க. ஆட்சி தாங்காது’ என்கிறார். எடப்பாடியோ, ‘இரண்டு இரவல் கால்களும் நகர்ந்தால், த.வெ.க. நாற்காலி தானாக சாயும்’ என்று ‘பொடி’ வைக்கிறார். தமிழக அரசியல் வரலாற்றிலேயே அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் ஒரே கருத்தை முன்வைக்கும் வெகு அரிய சந்தர்ப்பங்களுள் இதுவும் ஒன்று. விசாரித்தால், ‘த.வெ.க. அரசு அமையக்கூடாது என்பதற்காக ஒன்றுசேர துணிந்தவர்கள், அமைந்த அரசைக் கலைக்க ஒன்றுகூட மாட்டார்களா?’ என்று நமட்டுச் சிரிப்பு சிரிக்கிறார்கள். ஆம், த.வெ.க. அரசை கவிழ்க்கும் வேலைகளில் இருபெரும் திராவிடக் கட்சிகள் வேகமெடுத்திருப்பதாக கசியும் தகவல்கள்தான் தமிழக அரசியலின் லேட்டஸ்ட் ஸ்கூப் நியூஸ்!

இதுகுறித்து தமிழக அரசியல் களத்தை உன்னிப்பாக கவனித்துவரும் மூத்த அரசியல் பார்வையாளர் ஒருவரிடம் பேசினோம். “கடந்த சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி ஆட்சியைப் பிடித்திருந்தால் மு.கஸ்டாலினோ, ஸ்டாலின் ஆட்சியைப் பிடித்திருந்தால் எடப்பாடியோ இந்தளவுக்கு பெரிதாக விரக்தி அடைந்திருக்க மாட்டார்கள். ‘இந்த ஐந்தாண்டுகள் உங்களுக்கு என்றால், அடுத்த ஐந்தாண்டுகள் எங்களுக்கு என கடந்து போயிருப்பார்கள். அப்படித்தான் இத்தனை காலமும் போனது. ஆனால், திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்து அதுவும் கட்சி தொடங்கிய இரண்டரை ஆண்டுகளிலேயே விஜய் ஆட்சியைப் பிடித்ததை இரு கட்சிகளின் தலைமைகளால் ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லை
பிடித்தாட்டும் ஈகோ!
ஆட்சி அதிகாரம், பதவி, செல்வாக்கு, சம்பாத்தியம் இவை எல்லாம் தாண்டி ‘இப்போது புதிதாக ஒரு கட்சி ஆட்சிக்கு வந்துவிட்டதே. அதுவும் நாம் இவரெல்லாம் எதிரியா என்று துச்சமாக மதித்த ஒருவர் முதல்வராகிவிட்டாரே’ என்று அழிக்க முடியாத ‘ஈகோ’ இருபெரும் திராவிடக் கட்சிகளின் தலைமைகளை இன்றுவரை தூங்கவிட மறுக்கிறது. எனவேதான், தேர்தல் முடிவுகள் வெளியான அன்றைய தினம் தவெக தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்றபோதும், விஜய்யை ஆட்சியமைக்க விடக்கூடாது என்ற நகர்வுகளை இரு திராவிடக் கட்சிகளுமே மேற்கொண்டன. அ.தி.மு.க. தரப்பிலிருந்து திமுகவில் முக்கியப் புள்ளியை சந்தித்தவர்கள், விஜய்க்கு பெரும்பான்மை இல்லை. அவரை ஆட்சியமைக்க விட்டால் நம் இரு தரப்புக்கும் தான் பாதிப்பு, நம் தரப்பில் நிலுவையில் உள்ள வழக்குகள் தூசு தட்டப்பட்டால் நிலைமை இன்னும் மோசமாசிவிடும். எனவே, நாம் இணைந்து ஆட்சியமைப்போம் சீனியாரிட்டிபடி ’எடப்பாடி முதல்வர், உதயநிதி துணை முதல்வர்’ என்ற யோசனை முன்மொழிந்ததாக சொல்லப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையில்தான் திருமாவுக்கு ஒரு சீட்டு கூடுதலாக தர மறுத்த திமுககூட திருமாவை முதல்வராக்கும் மூவ்களை எல்லாம் முன்வைத்தது.
இப்படியான பேச்சுவார்த்தைகள் நடந்ததை சி.பி.ஐ. கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் பேபி தொடங்கி, வி.சி.க. தலைவர் திருமாவளவன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, அதிமுக மாஜி அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்ட பலரும் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். இருந்தபோதிலும். ‘இப்படியாக வரும் தகவல்கள் பொய்’ என்று அ.தி.மு.க தரப்பிலிருந்தும் தி.மு.க தரப்பிலிருந்தும் இரண்டாம் கட்டத் தலைவர்கள் மறுத்தபோதிலும் ஸ்டாலினோ, எடப்பாடியோ இதை முற்றிலுமாகவும் உறுதியாகவும் அதிகாரப்பூர்வமாகவும் மறுக்கவில்லை. இப்படியாக தவெக ஆட்சிக்கே வரக்கூடாது என மெனக்கெட்டவர்கள், தவெக ஆட்சி அமைத்ததை மட்டும் எப்படி சகித்துக்கொள்வார்கள்? ஆட்சியைக் கவிழ்க்க திட்டமிடமாட்டார்களா என்ன? அதைத்தான் இப்போது செய்யத் தொடங்கியிருக்கிறார்கள்.
எந்த எல்லைக்கும் செல்லத் தயார்!
அதாவது, இப்போதைய விஜய்யின் ஆட்சி இந்த ஐந்தாண்டுகள் நீடித்தால், அடுத்த ஐந்தாண்டுகளும் நம் கைக்கு வராது என்பது திமுக, அதிமுக போடும் கணக்கு உள்ளாட்சித் தேர்தல் தொடங்கி வாரியங்கள் வரை எந்த ஓர் அதிகாரத்தையும் அவர்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாது. சுருக்கமாக சொல்லப்போனால், இரு கட்சிகளின் அரசியல் எதிர்காலமே அஸ்தமனமாகிவிடும் என்று நினைக்கிறார்கள்.
அதனால்தான் இரு தரப்பிலும் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. எந்த எல்லைக்கு சென்றாவது ஆட்சியைக் கலைத்தே ஆகவேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இதற்காக பலதரப்பட்ட தொழிலதிபர்களிடம் பேசுபவர்கள், ‘தவெக ஆட்சி இல்லாமல், திராவிடக் கட்சிகளின் ஆட்சி அமைய வேண்டும் என்றால் நீங்கள் சில பல பொருளாதார கவனிப்புகளை நாங்கள் சொல்லும் சிலருக்கு செய்யவேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் உங்களை நாங்கள் கவனித்துக்கொள்கிறோம்’ என சரிக்கட்டி வருவதாகவும் சொல்லப்படுகிறது.
இதுபோக, கூடுதலாக எவ்வளவு ஸ்வீட் பாக்ஸ்கள் செலவானாலும் பரவாயில்லை என்ற முடிவுக்கு இரு தரப்பும் வந்துவிட்டதாகவும் தெரிகிறது. அதாவது. ‘தவெகவிடம் தற்போது 107 எம்.எல்.ஏக்கள்தான் உள்ளனர். சொற்பமான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவில்தான் மைனாரிட்டி அரசு நடக்கிறது. இந்த நேரத்தில் த.வெ.க தரப்பிலிருந்து குறைந்தது 10 எம்.எல்.ஏக்களை தூக்கிவிட்டால், எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்ய வைத்துவிட்டால், ஆட்சியைக் கவிழ்த்துவிடலாம்! என இரண்டு திராவிடக் கட்சிகளின் தரப்பிலும் பேசி முடிவெடுக்கப்பட்டிருக்கிறது என சொல்லப்படுகிறது. காங்கிரஸ் தற்போது, தவெக கூட்டணியில் அங்கம் வகிப்பதால், டெல்லி பா.ஜ.க. மேலிடமும் இந்த முயற்சிக்கு கிரீன் சிக்னல் கொடுக்கும் எனவும் நம்பப்படுகிறது. எனவே, முழு உத்வேகத்தோடு இதற்கான பணிகள் வேகமெடுத்திருக்கின்றன. குறிப்பாக, தி.மு.க. தரப்பில் மேலிட முக்கியப் புள்ளியும். அதிமு.க. தரப்பில் தலைமைக்கு நெருக்கமான குடும்ப உறுப்பினரும். பில்டர் ஒருவரும் இந்த வேலைகளில் தீவிரமாக இறங்கியிருப்பதாக தகவல்.
அதேசமயம், ஆளும் தரப்பிலிருந்து அவ்வளவு எளிதில் யாரையும் அமுக்கிவிட முடியாது என்பதால் சில ஃபார்முலாவையும் அவர்கள் பின்பற்றுகிறார்களாம். அதன்படி, ரசிகர் மன்றம் காலம்தொட்டு விஜய்க்காகவே பயணித்தும். தற்போது பெரிய வெளிச்சம் கிடைக்காமல் மனசஞ்சவத்தில் இருக்கும் எம்.எல்.ஏக்கள், ‘மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவர்களுக்கு எல்லாம் அமைச்சர். அடையாளம் தெரியாத யார் யாரோ அமைச்சர். நமக்கு இல்லையே என உள்ளுக்குள் புழுங்கும் எம்.எல்.ஏக்கள், ஸ்வீட் பாக்ஸ் தேவையில் இருக்கும் எளிய பின்னணி கொண்ட எம்.எல்.ஏக்கள் போன்றோரை டார்கெட் செய்திருக்கிறார்கள் என சொல்லப்படுகிறது.
லைஃப் டைம் செட்டில்மென்ட்!
இந்த எம்.எல்.ஏ.க்களிடம் சத்தமே இல்லாமல் நாகுக்காக பேகம் இவ்விரு தரப்புகளும் அவர்களின் மனநிலை மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு லைஃப் டைம் செட்டில்மென்ட் டீல் பேசுகிறதாம். நீங்கள் இன்னும் பத்தாண்டுகள் எம்.எல்.ஏ. பதவியில் இருந்தாலும், பெறமுடியாத பலனை நாங்கள் தருகிறோம். பதிலுக்கு நீங்கள் பதவி விலகினால் போதும் உங்களுக்கான எதிர்காலம் நிச்சயம் உண்டு. கவலை வேண்டாம்’ என அந்த டீல் நீள்வதாக சொல்லப்படுகிறது.
இந்த முயற்சி வெற்றி அடையுமா அல்லது தோல்வியை தழுவுமா என்பதை பற்றி திமுக, அ.தி.மு.க தரப்புகளுக்கு கவலை இல்லை. சொல்லப்போனால், ‘வந்தால் மலை. அறுந்தால் கயிறு’ என்றுதான் தீவிரமாக செயல்பட ஆரம்பித்துள்ளனர். இந்த திட்டம் சக்ஸஸ் ஆகும். நிலையை எட்டினால்.. முதற்கட்டமாக தவெக தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் கட்சி நிர்வாகிகளையும் இதே பாணியில் வளைத்துப் பிடித்து, ‘த.வெ.க. அரசு சரியில்லை’ என பொதுவெளியில் பேசவைத்து, தங்கள் கட்சிகளுக்கு கூட்டம் கூட்டமாக தாவச் செய்யவைக்கும் திட்டம் இருப்பதாக தெரிகிறது. அதன்மூலம் ‘த.வெ.க. அரசு நிர்வாகம் சரியில்லை’ என்ற தோற்றத்தை ஏற்படுத்தி, தவெக எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்யவைப்பது அல்லது டி.டி.வி தினகரன் தரப்பு அதிமு.க ஆட்சியில் தங்கள் ஆதரவை வாபஸ் பெற்றது போன்று இப்போதும் தவெக அரசுக்கு எதிராக தவெக எம்எல்ஏக்கள் அளித்த ஆதரவை வாபஸ் பெறவைப்பது என்ற முடிவில் இருக்கிறார்கள் என சொல்லப்படுகிறது.
இதற்கெல்லாம், தங்கள் கட்சிகளின் தற்போதைய நிலையும் ஒரு காரணமாக உள்ளது. அதாவது, அ.தி.மு.க.வுக்குள் அதிகாரத்தைப் பிடிக்க முடியாமல் தொடர் தோல்வியை சந்திப்பவருக்கு எதற்கு பொதுச்செயலாளர் பதவி என இபி.எஸ் குரல்வளையை நோக்கி பல்வேறு ஈட்டிகள் பாய்கின்றன. அதேபோல, குடும்ப உறுப்பினர்கள் ஆதிக்கத்தால்தான் நாம் ஆட்சி வாய்ப்பை இழந்தோம். கட்சியை மறுசீரமைப்பு செய்யும் வேலையைப் பாருங்கள். அதிகாரத்தை பரவலாக்கம் செய்யுங்கள் என பலமுனைகளில் இருந்தும் அதிருப்தி குரல்கள் தி.மு.கவில் கேட்க தொடங்கிவிட்டன.
எனவேதான், 2017க்கு பிறகு எடப்பாடி தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்கும் சூழல் பலமுறை உருவானபோதும். ‘தி.மு.க. கொல்லைப்புறம் வழியாகவோ, குதிரை பேரம் நடத்தியோ ஆட்சிக்கு வர விரும்பவில்லை. தேர்தலில் வெற்றிபெற்றே ஆட்சியைப் பிடிப்போம்’ என அன்று நிதானத்தை கடைபிடித்த திமு.க. தலைமை, இப்போது கட்சியின் எதிர்காலத்தை பற்றி யோசித்து, விஜய் ஆட்சி நீடிக்கக்கூடாது என்ற முடிவுக்கு வந்திருக்கிறது. அதன் வெளிப்பாடாகவே, ஆராசா, உதயநிதியின் பேச்சுக்களை எல்லாம் கவனிக்க வேண்டியுள்ளது’ என சொல்லி முடித்தார் விரிவாக.
இதுகுறித்து அதிமு.க செய்தித் தொடர்பாளர் கல்யாணசுந்தரத்திடம் கேட்டோம். “எங்கள் பொதுச்செயலாளர் அதிமுகவை கட்டமைக்கும் வேலைகளை செய்துகொண்டிருக்கிறார். த.வெ.க. அரசுக்கு ஆதரவு தந்த கூட்டணிக் கட்சிகளே, இப்போது அவர்களை விமர்சிக்கவும் செய்கிறார்கள். தனி மெஜாரிட்டி இல்லாமல் ஒரு ஆட்சி நடக்கும்போது அந்த ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கலையலாம் என எங்கள் பொதுச்செயலாளர் சொல்கிறார். இதற்கும், எம்.எல்.ஏக்கள் ராஜினாமா என்பதற்கும் தொடர்பு இருக்கிறதா? என்னமோ ஒரு வதந்தியை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். இந்த குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை” என்றார்.
தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியோ, அது தவறான கருத்து. அப்படி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற அவசியமே எங்களுக்கு கிடையாது. அந்த மாதிரியான வேலைகளில் நாங்கள் எந்த காலத்திலும் ஈடுபட்டது கிடையாது என்றார் அழுத்தமாக வேகமெடுக்கிறது அரசியல் ஆடு புலி ஆட்டம்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *