சென்னை அம்பத்தூர், இந்திரா நகரைச் சேர்ந்தவர் சின்னா. ஆட்டோ டிரைவர். இவரின் மனைவி வைதேகி (34). இந்தத் தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். வைதேகியும் சின்னாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். கடந்த சில மாதங்களாக வைதேகி, இன்ஸ்டாகிராமில் அதிக நேரம் செலவழித்து வந்திருக்கிறார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் கணவரைப் பிரிந்த வைதேகி, பட்டாபிராமில் உள்ள அம்மா வீட்டுக்குச் சென்றுவிட்டார். அதனால் மனைவி வைதேகியை சமதானம் செய்த சின்னா, அவரை அம்பத்தூருக்கு ஆட்டோவில் அழைத்து வந்தார். சம்பவத்தன்று இரவு இருவரும் அம்பத்தூர் மேனாம்பேடு பகுதிக்கு ஆட்டோவில் சென்றனர். அப்போது ஆட்டோவை வைதேகி ஓட்ட, பின் இருக்கையில் சின்னா அமர்ந்திருந்தார்.

ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் ஆட்டோ சென்று கொண்டிருந்தது. அப்போது கணவன் மனைவிக்கு இடையே வழக்கம்போல சண்டை ஏற்பட்டது. அப்போது சின்னா, நீ இனிமேல் இன்ஸ்டாகிராமில் யாருடனும் பேசக் கூடாது என்று வைதேகியை கண்டித்திருக்கிறார். அதற்கு வைதேகி, நீங்களும் இனிமேல் மது குடிக்கக் கூடாது என்று கூறியிருக்கிறார். இதில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ஆட்டோவை ஓட்டிக் கொண்டே வைதேகி, சின்னாவுடன் சண்டை போட்டிருக்கிறார். ஒருகட்டத்தில் ஆத்திரம் தலைக்கேற, சின்னா, மனைவி வைதேகியின் தலைமுடியைப் பிடித்து இழுத்திருக்கிறார். அதனால் வைதேகி நிலைகுலைந்து ஆட்டோவை நிறுத்தியிருக்கிறார். உடனே மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த சின்னா, வைதேகியின் பின்பக்க கழுத்தை அறுத்திருக்கிறார். இதில் ரத்தம் ஆட்டோ முழுவதும் சிதறியிருக்கிறது. உடனே சின்னாவின் பிடியிலிருந்து தப்பித்த வைதேகி, ஆட்டோவை விட்டு இறங்கி சாலையில் ஓடியிருக்கிறார். ஆனால் ரத்தம் அதிகளவில் வெளியேறியதால் கீழே விழுந்த வைதேகி துடிதுடித்து அங்கேயே உயிரிழந்தார். இதையடுத்து ஆட்டோவை எடுத்துக் கொண்டு சின்னா தப்பி ஓடிவிட்டார்.