ஆண்கள் ஷார்ட்ஸ் அணிவதால் அசௌகர்ய சூழல் – ஜப்பான் அலுவலகங்களில் பெண்கள் போடும் சண்டை; பின்னணி என்ன?

Spread the love

ஜப்பானிய அலுவலகங்கள் என்றாலே, கச்சிதமான கோட், சூட், டை அணிந்த ஆண்கள்தான் நினைவுக்கு வருவார்கள். ஆனால், உலகளாவிய பருவநிலை மாற்றத்தின் காரணமாக இந்த ஆண்டு கோடைக்காலத்தில் டோக்கியோவில் மிகக் கடுமையான வெப்பம் பதிவாகிவருகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு, டோக்கியோ பெருநகர அரசு `Cool Biz’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன்படி, அலுவலக ஊழியர்கள் தங்களது சூட்டைத் தணிக்கும் வகையில் சூட், டை-யைத் தவிர்த்துவிட்டு, டி-ஷர்ட்கள், ஸ்னீக்கர்கள், அரைக்கால் சட்டைகள் (Shorts) அணிந்து வேலைக்கு வரலாம் எனப் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், ஷார்ட்ஸ் அணிந்து வரும் சுதந்திரம், அலுவலகங்களில் ஒரு புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ஷார்ட்ஸ் - ஜப்பான்
ஷார்ட்ஸ் – ஜப்பான்

ஷார்ட்ஸ் அணிந்து வரும் ஆண்களின் கால்களில் உள்ள ரோமங்களைப் பார்ப்பது தங்களுக்கு மிகுந்த அசௌகரியத்தை ஏற்படுத்துவதாக சில பெண் ஊழியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இணையத்தில் இதனை சுனேஹரா (Sunehara) என்று அழைக்கின்றனர்.

ஜப்பானிய மொழியில் ‘சுனே’ (Sune) என்றால் காலின் கீழ்ப்பகுதி என்றும், ‘ஹரா’ என்பது Harassment என்பதன் சுருக்கமாகவும் பயன்படுத்தப்படுகிறது. அதாவது, கால் முடி தொல்லை (Leg hair harassment) என்று இதற்கு அர்த்தம்.

இந்த விவகாரத்தில் பெண்கள் முன்வைக்கும் முக்கியப் பிரச்னை பாகுபாடு. ஆண்கள் தளர்வான ஷார்ட்ஸ் அணிந்து வர அனுமதிக்கப்படும் அதே வேளையில், பெண்கள் தங்கள் கால்கள் வெளியே தெரிந்தால் கட்டாயம் ‘டைட்ஸ்’ அணிய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இன்னும் ஜப்பானிய அலுவலகங்களில் நிலவுகிறது.

எந்தவொரு கட்டுப்பாடும் இன்றி ஆண்கள் தங்கள் முடி அடர்ந்த கால்களுடன் அலுவலகத்தில் வலம் வருவது தொழில்முறைக்கு ஏற்றதாக இல்லை என்று அவர்கள் கருதுகின்றனர்.

ஷார்ட்ஸ் - ஜப்பான்
ஷார்ட்ஸ் – ஜப்பான்

இது தொடர்பாக ‘கொரில்லா கிளினிக்’ என்ற நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில், ஜப்பானியர்களின் மனநிலை அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது:

53.5% பேர் – கோடையில் ஆண்கள் அலுவலகத்திற்கு அரைக்கால் சட்டை அணிந்து வருவதை எதிர்க்கின்றனர்.

46.5% பேர் – இந்த புதிய பரிந்துரைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த சர்ச்சை குறித்து டோக்கியோ பெருநகர அரசின் சுற்றுச்சூழல் துறை அதிகாரி கூறுகையில், “கடுமையான வெப்பத்தில் மக்களுக்கு அதிக ஆடைத் தேர்வுகளை வழங்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்; என்ன அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது அல்ல. அணியும் உடை மற்றவர்களுக்கு முகம் சுளிக்க வைப்பதாக இல்லாதவரை, இதில் எந்தப் பிரச்னையும் இருக்கக் கூடாது” என்று விளக்கமளித்துள்ளார்.

இதற்குத் தீர்வு காண, நிறுவனங்கள் சில நடைமுறை சாத்தியமான முடிவுகளை எடுக்கலாம்:

1. இருபாலருக்கும் சௌகரியமான மற்றும் சமமான ஆடை விதிகளை உருவாக்க வேண்டும்.

ஷார்ட்ஸ் - ஜப்பான்
ஷார்ட்ஸ் – ஜப்பான்

2. அரைக்கால் சட்டைகள் தொழில்முறைக்கு ஏற்றதாக இல்லை என நினைத்தால், அதற்குப் பதிலாக வெப்பத்தைத் தாங்கக்கூடிய பருத்தி, லினன் துணியிலான உடைகளைப் பரிந்துரைக்கலாம்.

3. அரைக்கால் சட்டை அணிவதை முற்றிலுமாகத் தடை செய்யாமல், முழங்கால் வரை இருக்கும் ‘பெர்முடா ஷார்ட்ஸ்’ போன்ற ஆடைகளை அணிய என விதிமுறைகளை வகுக்கலாம்.

4. முடி அகற்றுவது என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் என்றாலும், அலுவலகச் சூழலில் மற்றவர்களுக்கு முகம் சுளிக்காத வகையில் தங்களை நேர்த்தியாகப் பராமரித்துக் கொள்ளச் சொல்லி மென்மையாக அறிவுறுத்தலாம்.

5. நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுடன் வெளிப்படையாகப் பேசி, இருபாலருக்கும் சங்கடம் தராத, அதே சமயம் கோடையைச் சமாளிக்கக் கூடிய ஆடை நடைமுறைகளை அவர்களின் சம்மதத்தோடு உருவாக்கலாம்.

ஷார்ட்ஸ் - ஜப்பான்
ஷார்ட்ஸ் – ஜப்பான்

பல ஆண்டுகளாக ஆழமாக வேரூன்றிய ஒரு கார்ப்பரேட் கலாசாரத்தை ஒரே நாளில் மாற்றுவது கடினம். எனினும், ஒருவரின் சுதந்திரம் மற்றவருக்கு அசௌகரியத்தைத் தராத வகையில், பரஸ்பர புரிதலுடன் கூடிய நெகிழ்வான விதிமுறைகளை உருவாக்குவதே இதற்குச் சிறந்த தீர்வாக அமையும்.

இந்த சர்ச்சை, வெறும் ஆடை தொடர்பான விஷயம் மட்டுமல்ல; இது அலுவலகங்களில் நிலவும் பாலின எதிர்பார்ப்புகள், தொழில்முறை குறித்த பார்வைகள் எவ்வாறு காலத்திற்கு ஏற்ப மாற வேண்டும் என்பதை உணர்த்தும் ஒரு நிகழ்வாக மாறியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *