`ஆண் வாரிசு இல்லையே’ என்ற உச்சுக்கொட்டல்களைத் தகர்க்க… இதைச் செய்வோம் பெண்களே!

Spread the love

பாரம்பர்யம், மரபு, கலாசாரம் என்றெல்லாம் ஆண்களை அதிகாரமிக்கவர்களாகவும் பெண்களை அடிபணிபவர்களாகவும் மாற்றிவைக்கும் பழைமையான நடைமுறைகள் உடைத்து நொறுக்கப்பட்டு வரும் காலம் இது. அவற்றின் தொடர்ச்சியாக இதோ ஆந்திராவில் தன் அப்பாவுக்கு இறுதிச் சடங்குகள் செய்திருக்கிறார்கள் அவரின் மகள்கள்.

ஆந்திராவைச் சேர்ந்த வெங்கட் நாராயணனுக்கு மூன்று மகள்கள். அவர் உயிரிழந்த போது, ‘இறுதிச் சடங்கு செய்ய ஆண் வாரிசு இல்லையே’ என்று வழக்கம்போல் ஊர் உச்சுக்கொட்ட, மகள்கள் அதற்கு இடம்தரவில்லை. இரண்டு மகள்கள் பாடையைச் சுமக்க, மூத்த மகள் கொள்ளி வைத்தார். இந்தப் புகைப்படங்களும் செய்தியும், நாடு முழுக்க வரவேற்பை பெற்றுள்ளன. காரணம், இது ஒரு தனிப்பட்ட குடும்பத்தில் நிகழ்ந்த நிகழ்வல்ல. பல நூற்றாண்டுகளாக இங்கே நிலைத்திருக்கும் ஆணாதிக்க நியதியை உடைத்த ஒரு வரலாற்றுச் சம்பவம்.

நம் சமூகத்தைப் பொறுத்தவரை, சடங்குகள் என்பவை வெறும் நம்பிக்கை மட்டுமல்ல. அதிகாரத்தின் குறியீடும்கூட. `ஆண்தான் கொள்ளி வைக்க வேண்டும், பாடை சுமக்க வேண்டும், திதி கொடுக்க வேண்டும்’ என்ற கட்டமைப்பு, ஆண் குழந்தைக்கான முக்கியத்துவத்தை தலைமுறை தலைமுறையாக உயர்த்திப் பிடிக்கிறது. அதன் வழியாக, குடும்பத் தலைமை, சொத்துரிமை, சபை அதிகாரம் உள்ளிட்ட அனைத்திலும் ஆண்களுக்கே முதலிடம் கிடைக்கிறது.

இதன் விளைவுதான், ‘ஆண் வாரிசு வேண்டும்’ என்று பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை. இந்த நிலையை மாற்ற சடங்குகளில் இருந்தே மாற்றம் தொடங்க வேண்டும். `ஆண்தான் செய்ய வேண்டும்’ என்ற ஆதிக்கம் ஒழிக்கப்படும்போதுதான் பெண்களைப் பின்னுக்குத் தள்ளும் நிலை மாறும்.

தமிழ்நாட்டில், பல ஊர்களில் ஏராளமான பெண்கள் இந்த வழக்கத்தைத் தகர்த்து வருகிறார்கள். குறிப்பாக, சேலம் மாவட்டம், கொளத்தூரில் பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட பெண்கள், இறந்தவர்களின் உடலைக் கையாள்வதில் இருந்து, சுடுகாட்டுக்குச் சுமந்து சென்று அடக்கம் செய்வது வரை அனைத்தையும் செய்து விழிப்புணர்வு ஊட்டி வருகின்றனர்.

இவற்றின் தொடர்ச்சிதான் ‘மாமாதான் வேண்டுமா? சித்தி மடியில் வைத்தும் காது குத்தலாம்’ என்று ஜென் ஸீ சித்திகள் இன்ஸ்டாவில் பகிரும் ‘காதுகுத்து’ வீடியோக்கள். இப்படி ஒவ்வொன்றாக மாறும்போது சமூகமும் மாறும்.

ஒவ்வொரு முறையும் ஒரு பெண் கொள்ளிவைக்கும்போதும், சொத்தில் சம உரிமை கேட்கும்போதும், விசேஷங்களில் தனக்கான உரிமையை எடுத்துக்கொள்ளும்போதும் இந்த மாற்றம் ஆழமாகிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் இந்த முயற்சிகள், நாளை இயல்பானதாக மாறும். மாற்றுவோம்!

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *