“ஆதவ் அர்ஜுனா நிழல் முதலமைச்சர் போல் செயல்படுகிறார்..!" – கே.பி.முனுசாமி விமர்சனம்

Spread the love

“தேர்தல்களில் தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் ராகுல் காந்தியை யாரும் விமர்சிப்பது இல்லை. ஆனால், சாதாரண விவசாயியாக இருந்து பொதுச் செயலாளராக உயர்ந்த எடப்பாடி பழனிசாமியை மட்டும் விமர்சிக்கிறார்கள்” என்று அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி பேசியுள்ளார்.

ஆதவ் அர்ஜுனா – கே.பி.முனுசாமி

தருமபுரியில் நடந்த அதிமுக நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர், செய்தியாளர்களிடம் பேசும்போது,

“அதிமுக குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் கட்சியில் அதிக அளவில் சேர்ந்து வருகிறார்கள். எனவே இனிமேல் அதிமுக-வில் இளைஞர் பட்டாளம் பெருக்கெடுப்பார்கள்.

நிர்வாகத் திறன் இல்லாத தவெக ஆட்சியில் அனைத்து நிலை அதிகாரிகளும் ஊழியர்களும என்ன செய்வது என்று தெரியாமல் கடந்த ஐந்து மாதங்களாக மெத்தனமாக இருக்கிறார்கள். இதே அதிகாரிகள் மூலமாகத்தான் அதிமுக ஆட்சியில் சிறந்த நிர்வாகத்தை வழங்கினோம். இப்போது நிகழ்வதுபோல் மின்வெட்டு இல்லாமல்… உற்பத்தி செய்த உபரி மின்சாரத்தை வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்தோம்.

அதிமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கரை வேட்டி கட்டிய லட்சக்கணக்கான தொண்டர்கள் இந்த இயக்கத்தை வழி நடத்துகிறார்கள். அதனால், அதிமுக-விலிருந்து சென்றவர்கள் மீண்டும் வந்துதான் இந்த இயக்கம் பலமடைய வேண்டும் என்பதில்லை. அவர்களைப் பற்றி பேச வேண்டியதும் இல்லை.

ஆதவ் அர்ஜுனா இப்போது நிழல் முதலமைச்சர்போல் செயல்படுகிறார். அது முறையல்ல. அதிமுக-வை விமர்சிக்க அவருக்கு அருகதை இல்லை.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி பல்வேறு தேர்தல்களில் தோல்விகளைச் சந்தித்து வருகிறது. அரசியல் பாரம்பர்யம் மிக்க குடும்பத்திலிருந்து அவர் வந்ததால் அவரை யாரும் விமர்சிப்பது இல்லை. ஆனால் சாதாரண விவசாயியாக இருந்து அதிமுக-வின் பொதுச் செயலாளராக உயர்ந்த எடப்பாடி பழனிசாமியை மட்டும் விமர்சிக்கிறார்கள். வெற்றி தோல்விக்கு தலைமை மட்டுமே காரணம் இல்லை, அரசியல் சூழ்நிலையும் காரணம்.

அ.தி.மு.க, தி.மு.க ஆகிய இரண்டு திராவிட கட்சிகளை அவ்வளவு சீக்கிரம் அழிக்க முடியாது. விஜய் கட்சி விரைவில் காணாமல் போய்விடும்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *