தலைமைச் செயலகம், சட்டமன்றம், சட்டமன்ற உறுப்பினர் விடுதி போன்ற நிரந்தரக் கட்டுமானங்களை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத பொருத்தமான மாற்று இடங்களில் அமைக்க பல வாய்ப்புகள் சென்னை மாநகரத்திற்குள்ளேயே இருக்கும்போது, பிடிவாதமாக மீனவர் குடியிருப்புகளை அப்புறப்படுத்திவிட்டு அங்கே அமைப்பது ஜனநாயகப் பண்பாகாது.
இந்த விவகாரத்தில் சிபிஎம் மக்களின் நலனில் இருந்தே கோரிக்கைகளை முன்வைக்கிறது. தவெக அரசு மட்டுமன்றி வேறு எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இதே நியாயமான கோரிக்கையைத்தான் எழுப்பியிருப்போம். கடந்த கால தி.மு.க ஆட்சியில் பல்லாவரம் அனகாபுத்தூர் வீடுகள் இடிப்பு, சீனிவாசபுரம் மற்றும் கே.பி. பார்க் மக்கள் பிரச்னை, சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் மற்றும் 12 மணி நேர வேலை நேரச் சட்ட மசோதாவிற்கு எதிரான போராட்டம் வரை பல்வேறு மக்கள் போராட்டங்களை சிபிஎம் முன்னின்று நடத்தியது.

ஆனால், கோரிக்கையின் நியாயத்தை விவாதிக்காமல் “அன்று ஏன் போராடவில்லை, இன்று ஏன் போராடுகிறீர்கள்’ என்று கேட்பது பிரச்னையை திசைதிருப்பும் தந்திரம். தற்போதைய த.வெ.க அரசின் அணுகுமுறை ஜனநாயகப்பூர்வமாக இல்லை. பல முக்கிய முடிவுகளை தன்னிச்சையாக அறிவிக்காமல், தோழமை மற்றும் எதிர்க்கட்சிகளுடன் கலந்தாலோசித்து ஒருமித்த கருத்தை உருவாக்குவதே ஒரு நல்ல அரசுக்கு அழகு. தவெக அரசுக்கு அளித்து வரும் ஆதரவு தொடரும் அதேவேளையில், அரசின் தவறான கொள்கைகளை இடித்துரைத்து சுட்டிக்காட்டும் கடமையையும் சிபிஎம் தொடர்ந்து செய்யும்.” என்றார்.