ஆந்திரப் பிரதேசம் அனந்தபூரில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் கொடூரச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
இதுவரை கிடைத்துள்ள தகவலின்படி, ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ராப்தாடு ஜே.பி. உயர்நிலைப் பள்ளியில் வகுப்பறைக்குள் புகுந்து பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
இந்தச் சம்பவம் ஆசிரியர் வகுப்பறைக்குள் பாடம் எடுத்துக்கொண்டிருந்தபோது நடந்திருக்கிறது.
இந்தச் சம்பவத்தில் தாக்குதலுக்குச் சங்கிலி ரம்பம் (chainsaw) பயன்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. போலீசார் குற்றவாளியைத் தேடி வருகின்றனர்.
மாணவிக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவம் குறித்து ஆந்திராவின் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தனது எக்ஸ் பக்கத்தில், “ராப்தாடு ஜே.பி. உயர்நிலைப் பள்ளியில், வகுப்பறைக்குள்ளேயே பத்தாம் வகுப்பு மாணவி மீது நடத்தப்பட்ட இந்தக் கொடூரத் தாக்குதல் எனக்கு ஆழ்ந்த அதிர்ச்சியையும், விவரிக்க முடியாத கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிக்கூடத்திற்குள் புகுந்து நமது பெண் குழந்தைகளை இலக்கு வைக்கும் தாக்குதல்தாரிகளுக்கு நமது சமூகத்தில் எள்ளளவும் இடமில்லை.
பாதிக்கப்பட்ட மாணவியின் உடல்நலம் குறித்து நான் தொடர்ந்து தெரிந்துகொண்டு வருகிறேன். அவருக்கு உயர்தர முன்னுரிமை சிகிச்சை அளிக்குமாறு மருத்துவக் குழுவிற்கு உத்தரவிட்டுள்ளேன்.
இந்தக் கொடூர மிருகத்தைத் தேடிக் கண்டுபிடித்து, மிகக் கடுமையான சட்டத் தண்டனையை விரைந்து வழங்கிடக் காவல்துறையினருக்கு ஆணை பிறப்பித்துள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்.