"ஆர்எஸ்எஸ் கொள்கை; வந்தே மாதரம் விவகாரத்தில் காங்கிரஸ் அரசு ஏன் பணியவேண்டும்?" – பினராயி விஜயன்

Spread the love

சுதந்திரதின விழாவின்போது வந்தே மாதரம் பாடவேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் கேரள தலைமைச் செயலாளர் உள்ளாட்சித்துறை-க்கு அனுப்பிய கடிதத்தில் சுதந்திரதினவிழா கொண்டாட்டத்தின்போது வந்தேமாதரம் பாடுவது தொடர்பான மத்திய அரசின் அறிவுறுத்தல்களை முழுமையாக பின்பற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தார். இது விவாதத்தை கிளப்பியதை அடுத்து கவர்னர் அலுவலகம் கூறித்தான் அந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாக கூறப்பட்டது. அதை கவர்னர் மாளிகை மறுத்திருந்தது. இந்த நிலையில் அந்த சுற்றறிக்கை குறித்து விவாதம் எழுந்துள்ளது. இதுகுறித்து சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த கேரள சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் கூறுகையில், “மாநில அரசு வீண் பிடிவாதத்தைக் கைவிட்டு, வந்தே மாதரம் பாடலை முழுமையாகப் பாட வேண்டும் என்ற சுற்றறிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். தவறுகளைத் திருத்திக் கொள்ள இன்னமும் அவகாசம் உள்ளது. இந்த விவகாரத்தில் அரசு உடனடியாகத் தலையிட வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ்
ஆர்.எஸ்.எஸ்

வந்தே மாதரம் பாடலின் விஷயத்தில் நாட்டிற்குத் தெளிவான, அறிவிக்கப்பட்ட நிலைப்பாடு நீண்டகாலமாகவே உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கும் முன்பு இதே நிலைப்பாடுதான் இருந்தது. வந்தே மாதரத்தை முழுமையாகப் பாடுவது நமது மதச்சார்பின்மைக்கு உகந்தது அல்ல. இதுவே நாட்டின் தெளிவான நிலைப்பாடாகும். ஆனால், வந்தே மாதரம் முழுவதையும் பாட வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கொள்கையாகும். அதற்கு ஏன் காங்கிரஸ் அரசு பணிய வேண்டும்? ஆர்.எஸ்.எஸ் நிலைப்பாட்டை காங்கிரஸ் ஏன் கையில் எடுக்கிறது? ​கல்வித் துறையைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரவும், தங்களுக்குச் சாதகமான பொதுக் கருத்தை உருவாக்கவும் ஆர்.எஸ்.

எஸ் முயல்கிறது. பிஎம் ஸ்ரீ திட்டமும் கல்வித்துறையைக் காவிமயமாக்குவதை நோக்கமாகக் கொண்டதுதான். சி.பி.எம் தலைமையிலான எல்.டி.எஃப் ஆட்சியில் நாங்கள் இத்திட்டத்திற்கு எதிராக இருந்தோம். இத்திட்டத்துடன் முன்னகர்ந்து செல்லக்கூடாது என்றும் தீர்மானித்தோம். புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தவிர இத்திட்டத்தில் நாங்கள் வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை மத்திய அரசே தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால், தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்ததும் அதை அமல்படுத்துவதில் அவசரம் காட்டுகிறது.

பினராயி விஜயன்

நாடாளுமன்றத்தில் எம்.பி-க்கள் அப்துல் வஹாப் மற்றும் ஜெபி மேத்தர் ஆகியோரின் கேள்விகளுக்கு மத்தியக் கல்வி அமைச்சர் அளித்த பதிலின் மூலம், எங்களைப் பற்றி பரப்பப்பட்ட பொய்கள் அனைத்தும் அம்பலமாகிவிட்டன. தேர்தல் காலத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் பரஸ்பரம் செய்து கொண்ட அரசியல் ஒப்பந்தங்களுக்குக் கைமாறாகவே காங்கிரஸ் செயல்படுகிறது. இது கேரளாவைச் சீரழிக்கும் செயலாகும். கேரளாவின் தனித்துவத்தை அழிக்கவே காங்கிரஸ் துணை நிற்கிறது. ஆர்.எஸ்.எஸ் கழுகுப் பார்வையுடன் காத்துக் கொண்டிருக்கும் வேளையில், அவர்களுக்கு காங்கிரஸ் அரசுதான் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கிறது” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *