கோயம்பேடு பகுதியில் இருந்து காரில் பயணித்துக் கொண்டிருந்த அமீனும் அவரது நண்பரும் கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகே சென்றபோது எதிர்திசையில் வந்த மற்றொரு வாகனத்துடன் கார் மோதியதாக தகவல் வெளியாகியுள்ளது. மோதல் காரணமாக இரு வாகனங்களும் சேதமடைந்த நிலையில், அதில் பயணித்தவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அமீன், அவரது நண்பர் மற்றும் மற்றொரு வாகனத்தின் ஓட்டுநர் ஆகியோர் காயங்களுடன் உயிர் தப்பினர்.
விபத்து குறித்து தகவல் வெளியானதும், ஏ.ஆர்.ரகுமானின் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், அமீனுக்கு பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்ற தகவல் வெளியாகியிருப்பது நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப்பயணத்தைப் பின்பற்றி சிறு வயதிலேயே பாடகராக அறிமுகமானவர் அமீன். தனது தந்தையின் இசையில் பல்வேறு பாடல்களை பாடியுள்ள அவர், ‘ஓ காதல் கண்மணி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மௌலா யா சல்லி வசல்லிம்’ பாடல் மூலம் பரவலான கவனத்தைப் பெற்றார்.
அதன்பிறகு பல்வேறு இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ள அமீன், திரைப்படப் பாடல்களுடன் தனிப்பட்ட இசைப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், சென்னையில் அவர் பயணித்த கார் விபத்தில் சிக்கியிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.

