ஆலய உலா! எட்டாத அதிசயம் ராஜராஜ சோழன்…எப்போதும் ஆச்சரியம் பெரிய கோயில்! – Kumudam

Spread the love

-வி.ராம்ஜி

விவசாயம், கலை, வணிகம், ஆன்மிகம், நிர்வாகம் என அனைத்திலும் மக்களை முன்வைத்து எவனொருவன் ஆட்சி செய்கிறானோ… அவனே ஆகச்சிறந்த அரசன். அவனது ஆட்சிக் காலத்தைத்தான் பொற்காலம் என்கிறோம். அப்படி பொற்கால ஆட்சியை நடத்தியவன் ராஜராஜசோழன். அவன் கட்டிய திருக்கோயிலே தஞ்சைப் பெரிய கோயில்.

சோழ தேசம் என்கிற சொற்களுக்குள் ராஜராஜ சோழனைப்போலவே ஒரு கம்பீரமும் அழகும் குடிகொண்டிருக்கும். சோழ தேசத்தை, எத்தனையோ மன்னர்கள் ஆட்சி செய்திருந்தாலும் காலத்தால் அழிக்க முடியாத, கலாச்சார, பக்தி, இலக்கிய, சிற்ப, ஓவிய நாகரிகங்களையெல்லாம் சொன்ன வகையில், தஞ்சைப் பெரிய கோயிலும் ராஜராஜசோழனும் பல்லாயிரம் ஆண்டுகள் கழித்தும் நினைவுகளில், பொக்கிஷமாய் இருப்பதுதான் கோயிலின் ஆச்சரியப் பெருமை! சரித்திர ஆச்சரியம்!

தஞ்சைத் தரணியில், கோயிலும் அதன் கட்டுமானமும் இறையுருவங்களும் அளவற்ற பக்தியுடன் சோழர்களால் கட்டப்பட்டவை. இத்தனை ஆலயங்களிலும் நேர்த்தி மிக்க பிரம்மாண்டமான ஆலயம்… தஞ்சைப் பிரகதீஸ்வரர் கோயில். 1010 ஆம் ஆண்டு கட்டப்பட்டு, இதோ… ஆயிரம் வருடங்களையெல்லாம் கடந்து, கம்பீரம் குலையாமல், கலைநயம் குலையாமல், நெல்முனையளவு கூட பொலிவு மாறாமல் தமிழின் பெருமையை, தமிழனின் மகத்துவத்தை, பக்தியின் மேன்மையை, இறைவனின் அருளாடலைச் சொல்லிக் கொண்டே இருக்கிறது!

சுந்தர சோழனுக்கும் திருக்கோவலூர் மலையமான் குலத்தில் உதித்த வானவன் மாதேவிக்கும் 2-வது மகனாகப் பிறந்தவன் ராஜராஜன். இயற்பெயர் அருண்மொழித் தேவன். தவிர இன்னும் ஏராளமான பெயர்களைக் கொண்டிருந்தாலும் ராஜராஜனுக்கு விருப்பப் பெயர் சிவபாதசேகரன். அண்ணன் ஆதித்த கரிகாலன் கொலை செய்யப்பட… இந்த நேரத்தில் சித்தப்பா மதுராந்தக உத்தமச் சோழன் அரியணைக்கு ஆசைப்பட… விட்டுக் கொடுத்தான் ராஜராஜன். விட்டுக்கொடுத்தவர்கள் கெட்டுப் போவதில்லை என்பதை உதாரணமாக்கினான். 

அக்கா குந்தவையின் அரவணைப்பில் வளர்ந்தான். நிதானம், ஆன்மிகம், நிர்வாகம், யுத்தம், கருணை ஆகிய அனைத்தையும் அவரிடம் கற்றறிந்தான். கிட்டத்தட்ட 15 ஆண்டுக் காத்திருப்பு.  (985 – 1014) அரியணை ஏறினான்; ராஜராஜன் என பெயர் பெற்றான். மாமன்னன் ராஜராஜன் என்று இன்றைக்கும் கொண்டாடுகிறோம். வாராகிதான் ராஜராஜ சோழனுக்கு இஷ்ட தெய்வம்.

இவளை வணங்கிவிட்டே, போர் தொடுக்கச் செல்வான் என்கிறார்கள் சரித்திர ஆய்வாளர்கள். வெற்றியுடன் வந்ததும் வாராகிக்கு நன்றி தெரிவிப்பான் பின்னாளில், தஞ்சைப் பெரிய கோயிலில், ஸ்ரீவாராகிக்கு தனிச்சந்நிதியே வந்தது. ஆன்மிகத்தில் பசு என்றால் ஆட்சி நிர்வாகத்தில் புலி! விவசாயப் பகுதி நிறைந்திருந்தால் ஊர்! அந்தணர்கள் வாழும் பகுதி என்றால் சபை! வணிகர்கள் வாழும் இடம் நகரம் என்றும் மாற்றினான் ராஜராஜ சோழன்.

மாமல்லபுரம் தொடங்கி கேரளம் வரை, தான் கையகப்படுத்திய ஊர்களில் இருந்தெல்லாம் பெரிய கோயிலுக்கு நிதி தந்திருக்கிறான். கோயிலில் வழிபாடுகள் குறைவின்றி நடக்க, தொண்டை தேசம் தொடங்கி ஈழம் வரையுள்ள பல கிராமங்களை, தேவதானம் எனக் குறிப்பிட்டு எழுதிக் கொடுத்திருக்கிறான். ஒவ்வொரு ஊரும் 1,44,500 கலம் நெல்மணிகளும் 2,800 கழஞ்சு தங்கமும் பெருவுடையார் கோயிலுக்கு வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கிறான். அந்த உத்தரவைக் குறிக்கும் கல்வெட்டுகள் இன்றைக்கும் இருக்கின்றன.

பெருவுடையார், ஸ்ரீபிரஹன்நாயகி மற்றும் உள்ள தெய்வங்களுக்கு, 39,925 (179 கிலோ) கழஞ்சு பொன் ஆபரணங்கள், 155-க்கும் மேற்பட்ட வெள்ளிப் பாத்திரங்கள் அனைத்தையும் கொடையாக அளித்தான் மாமன்னன் ராஜராஜன். குந்தவை நாச்சியார், 8993 (40.46 கிலோ) கழஞ்சு பூஜை பாத்திரங்களையும் 2343 கழஞ்சு நகை ஆபரணங்களையும் ஆலயத்துக்கு வழங்கினார். இதையெல்லாம் டைரி போல் கல்வெட்டுகளில் எழுதிவைத்திருக்கிறான்!

காஞ்சியம்பதியில், ராஜசிம்ம பல்லவனால் எழுப்பப்பட்ட ஸ்ரீகயிலாசநாதர் கோயிலில் மனதைப் பறிகொடுத்தான் ராஜராஜன்; ‘கச்சிப்பேட்டு பெரிய தளி’ எனப் போற்றி மகிழ்ந்தான். இந்த ஆலயத்தின் தாக்கத்தில் எழுப்பப்பட்டதுதான் தஞ்சைப் பெரிய கோயில்! இந்த ஆலயம் அமைந்துள்ள பகுதியை ‘ராஜராஜீச்சரம்’ எனக் குறிப்பிட்டுள்ளான் ராஜராஜன்.

அடுத்து வந்த ராஜேந்திர சோழன், ‘ஸ்ரீராஜராஜ ஈஸ்வரமுடையார்’ எனக் குறிப்பிடுகிறான். இதற்கும் கல்வெட்டுகள் இருக்கின்றன. கட்டுமான முன்னேற்றங்களும் மாற்றங்களும் வந்தாலும்கூட, ஆயிரம் வருடங்களைக் கடந்தும் பிரம்மாண்டம் குறையாமல் அப்படியே இருக்கிறது பெரிய கோயில். வீரசோழன் குஞ்சரமல்லனான ராஜராஜப் பெருந்தச்சன் என்பவன் இந்தக் கோயிலைக் கட்டிய கலைஞன்! இவனுக்கு பக்கபலமாக, மதுராந்தகனான நித்திவினோதப் பெருந்தச்சன், இலத்தி சடையனான கண்டராதித்தப் பெருந்தச்சன் ஆகிய இருவரும் இருந்தனர்! கோட்டைச் சுவர் வாயிலை அடுத்து உள்ள ஐந்து அடுக்கு கோபுர வாயிலுக்கு கேரளாந்தகன் நுழைவாயில் என்று பெயர். அடுத்து 3 அடுக்குகளுடன் ராஜராஜன் திருவாயிலும் அமைந்துள்ளது. இவை தவிர, தென்புறம் இரண்டும் வடபுறம் இரண்டுமாக நான்கு வாசல்கள்.

கருவறையின் விமானத்தை பெரிதாகவும், கோயில் கோபுரத்தை சிறிதாகவும் அமைத்தான் ராஜராஜன். ஆகம சாஸ்திர இலக்கணங்களைக் கடந்து ராஜராஜ சோழன் செய்த புரட்சி இது! பெரிய கோயில் கோபுரத்தைவிட பெருவுடையாரின் விமானம் பிரமாண்டம்! 216 அடி உயரத்துடன் திகழும் இந்த விமானம், ஆசியாவிலேயே மிகப் பெரிய விமானம் என அண்ணாந்து வியக்கப்படுகிறது. சிவனார் சந்நிதி கொண்டிருக்கும் அந்த விமானம், தட்சிணமேரு எனப்படுகிறது. பீடம் தொடங்கி கலசம் வரை முழுவதும் கருங்கல் கொண்டு கட்டப்பட்டது.

‘ஒரே கல்லால் வடிவமைக்கப்பட்ட விமானம்; இதன் நிழல் தரையில் விழாது’ என்றெல்லாம் இஷ்டத்துக்கு அளந்துவிடுகிறார்கள் இன்றைக்கும்! இரண்டுமே தவறு. பல கற்கள்கொண்டு கூம்பு வடிவில் அமைக்கப்பட்ட விமானம் இது. அடுத்து விமானத்தின் நிழல் தரையில் விழும். இதை நாம் இப்போதும் பார்க்கலாம்! தட்சிணமேருவாக அமைக்க எண்ணியதாலும் சிவபெருமான் மீது மாறாத பக்தி கொண்டிருந்ததாலும் பிரம்மாண்டமாக லிங்கத் திருமேனியை வடிவமைத்தான் ராஜராஜன். 13 அடி உயரத்தில் கம்பீரமாகக் காட்சி தருகிறார் பெருவுடையார். ஒரே கல்லால் ஆன லிங்கமூர்த்தம் இது.

மகுடாகம அடிப்படையில் வழிபாடு நடக்கிறது. சிவலிங்க வழிபாட்டை நவதத்துவம் என்கிறது மகுடாகமம். ‘லிங்கத் திருமேனியின் நடுவில் தூண்போலத் திகழும் பாணமானது, மூன்று வகை அமைப்புகள் கொண்டிருக்கின்றன. இது அடியில் நான்கு பட்டையாகவும் இடையே எட்டுப்பட்டையாகவும் மேல் பகுதியில் வட்டமாகவும் இருக்கும்! சதுரத் தூண் வடிவம் பிரம்மா; எட்டுப்பட்டை வடிவம் ஸ்ரீவிஷ்ணு; வட்டத்தூண் ருத்திரன், மகேசன், சதாசிவன், பரபிந்து, பரநாதம், பராசக்தி என வணங்கிவிட்டு, உச்சிக்கு வரும்போது பரசிவம் எனும் நிலையை தரிசிக்கலாம்’ என்கிறது மகுடாகமம்.

அதாவது, ‘உருவமெனத் திகழும் லிங்கமானது மறைந்து, பரவெளியான இந்தப் பிரபஞ்சமே லிங்கமெனத் திகழ்கிறது’ என்று சிலிர்க்கவைக்கிறது ஆகம தத்துவம்! இவ்வளவையும் அறிந்து உணர்ந்து சிலிர்த்துதான் கோயில் எழுப்பியிருக்கிறான், ராஜராஜன்! 216 அடி உயரம் கொண்ட விமானமே ஆகப்பெரிய சாதனை; அதிலும் பொன்வேய்ந்து அழகு பார்த்திருக்கிறான் என்கிறது கல்வெட்டு.

அப்படியென்றால், கோயில் கருவறையின் விமானம், இரவு வேளைகளில் எப்படி தகதகத்திருக்கும் என கற்பனைக்குதிரையை ஓடவிடுங்கள்.  சிவபெருமான் குடிகொண்டிருக்கும் மேரு பர்வதம் எப்படி பொன்மலையாகத் தகதகக்குமோ… அதேபோல் தட்சிணமேருவான தஞ்சைக் கோயிலும் பொன்மலையாகவே ஜொலித்தது. ஒட்டக்கூத்தனார் வியந்து பாடியிருக்கிறார். கருவூர்ப்புராணமும் ‘பொற்கிரி’ என்றே போற்றுகிறது.

இந்தக் கோயில் சிறப்புற விளங்க, 196 பணியாளர்களை நியமித்தான் மன்னன். நிலம் மற்றும் தொழில் நிமித்தமாக அதிகாரிகள், கருவூலதாரர்களாக இரண்டு அந்தணர்கள்,  ஏழு கணக்கர்கள்,  எட்டு துணை கணக்கர்கள், 178 பிரம்மச்சாரிகள் மானியக்காரர்கள் என வேலைக்கு அமர்த்தியிருக்கிறான். தவிர, 400 ஆடல் மகளிரையும் உடுக்கை, வீணை, மத்தளம் முதலான வாத்தியங்களை வாசிக்க 258 இசைக் கலைஞர்களையும் நியமித்து ஆன்மிகமும் கலையும் தழைக்கவும் கலைஞர்கள் செழிக்கவும் மிகப்பெரிய திட்டமிடலுடன் ஆட்சி செய்திருக்கிறான் மாமன்னன் ராஜராஜன்!

ஆலயத்தைத் தூய்மைப்படுத்துவது, இறைவனுக்குப் பூமாலை தொடுப்பது என ஒவ்வொன்றுக்கும் ஆட்களை நியமித்து, அவர்களுக்கு வீடு, நெல், சம்பளம் என சகல வசதிகளையும் தந்து குடியமர்த்தியிருக்கிறான். குடை தாங்கிகள், தண்ணீர் தெளிப்பவர்கள், விளக்கேற்றுபவர்கள், மடப்பள்ளியில் உணவு சமைப்பவர்கள், உணவு சமைப்பதற்கான பானையைச் செய்பவர்கள், நாவிதர்கள்… எல்லாவற்றுக்கும் மேலாக திருப்பதிகம் பாடுவதற்கு 50 ஓதுவார்கள் என தஞ்சைப் பெரிய கோயிலை மட்டும் அல்ல… அந்த நிர்வாகத்தையும் பிரம்மாண்டமாகக் கட்டமைத்த அரசன் ராஜராஜ சோழனாகத்தான் இருக்கும்!

வணிகர்கள் வியாபாரம் செய்து வளர வேண்டும் எனும் நோக்கத்தில், பெரிய கோயிலுக்குக் குறிப்பிட்ட தொகையை அளித்து, அதை வணிகர்களுக்கு வட்டிக்கு விட்டிருக்கிறான். வட்டியாக… கோயிலில் உள்ள விநாயகருக்கு தினமும் 150 வாழைப் பழங்கள் தரவேண்டும் எனச் சொல்லியிருக்கிறான். விவசாய பூமியான தஞ்சை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கற்கள் கிடைக்காது.

கோயில் திருப்பணிக்கு புதுக்கோட்டை- நார்த்தாமலையில் இருந்து கல் எடுத்து வந்ததை உறுதிப்படுத்தும் கல்வெட்டுகள் ஏதுமில்லை. தஞ்சாவூரில் இருந்து திருச்சி செல்லும் வழியில் பெரிய மலை இருந்திருக்கலாம்; அந்த மலையையே அழித்து கோயில் எழுப்பப் பயன்படுத்தியிருக்கலாம் என்பது ஆய்வாளர்கள் குத்துமதிப்பாகச் சொல்கிறார்கள். அதேநேரத்தில், நர்மதை நதிக்கரைப் பகுதியில் இருந்து கல் கொண்டு வந்ததாகச் சொல்கிறார் குடவாயில் பாலசுப்ரமணியன்.

ராஜராஜன் வைத்த பிரமாண்ட நந்தி, காலப் போக்கில் சிதைந்துவிட… (வாராகி சந்நிதிக்கு அருகில் இப்போதும் பார்க்கலாம்), பின்னர் வந்த நாயக்கர்கள்தான் இன்றைக்கு இருக்கிற நந்தியை அமைத்தார்கள்; மண்டபமும் எழுப்பினார்கள். அசைவப் பிரியரான ராஜராஜன், மாமிசத்துடன் தான் மூன்று வேளையும் சாப்பிடுவானாம். ஆனால் இதிலொரு ஆச்சரியம்… கோயில் கட்டப்பட்ட ஆறு வருடங்களும் முழு சைவத்துக்கு மாறினான். அசைவத்தை தொடக்கூட இல்லை. ஒரு தவம்போல் கோயிலைக் கட்டினான் மன்னன்.  மேலும் அவனுடைய பரந்த மனம், ஒளிவுமறைவற்ற நிர்வாகத்துக்கு சாட்சியாக, திருப்பணிக்கு நிதியுதவி செய்த அனைவர் பெயரையும் கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளான். மோர்க் கிழவி உட்பட பலரின் பெயரும் இடம் பெற்ற அந்தப் பட்டியலில் ராஜராஜ சோழனின் பெயர் கடைசியாகத்தான் இருக்கிறது.

இந்தக் கல்வெட்டையும் ஆலயத்தில் பார்க்கலாம்! . சுமார் 37,000 பேர் இழுத்தால் நகரக் கூடிய பிரம்மாண்டமான தேரினை அமைத்தான். அந்நியர் படையெடுப்பில் தேர் முழுவதும் அழிந்து விட்டதாம். தேர் இருந்ததற்கான மிச்சசொச்ச சாட்சி… தேரடி…அந்த இடத்தைக் கண்டறிந்து அங்கே அரைமணி நேரம் உட்கார்ந்துவிட்டேன்.
ஒரு டைரி போல் அனைத்தையும் கல்லில் பொறித்து, அதை இன்றைக்கும் பார்க்கிறோம்; ஓரளவேனும் படித்து தெரிந்துகொள்கிறோம். ஆனால் கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்பு வரை, தஞ்சை பெரிய கோயிலைக் கட்டியது யார் என்பதே கண்டறியப்படவில்லை என்பதே வெட்கப்பட வேண்டிய உண்மை.

‘இந்த ஆலயத்தைக் கட்டியது ராஜராஜசோழனே’ என்று ஆதாரங்களைச் சேகரித்து தேசத்துக்குத் தெரிவித்தவர்கள், நம்மை ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள்தான்! இன்னொரு சோகம்… கோயிலுக்கு வெளியேதான் அமைந்துள்ளது ராஜராஜன் சிலை! கோயில் கட்டும் முன், அஸ்திவாரம் அமைக்க குழி தோண்டி, சுமார் ஒரு வருடம்வரை விட்டு வைத்தனர்! இதனால் குழியில் உள்ள மண் சூரிய ஒளி பட்டு, பாறைக்கு நிகராக மாறிவிடுமாம். பிறகு அஸ்திவாரம் அமைத்தால், ஆண்டாண்டு காலத்துக்கும் கட்டிடம் நிமிர்ந்து நிற்கும் என்பதையும் கூகுள், சாட் ஜிபிடி இல்லாமலே கண்டறிந்து நடைமுறைப்படுத்திய காலக்கணிதன் ராஜராஜன்.

கட்டிட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து, வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்து, இப்பேர்பட்ட ஆலயத்தை தவமாய் தவமிருந்து கட்டியிருக்கிறான். திருச்சியில் இருக்கும் போதும் சென்னைக்கு வந்துவிட்ட பிறகும் எத்தனையோ முறை பெரியகோயில் சென்றிருக்கிறேன். ஏதேனும் ஓரிடத்தில் அமைதியாக அமர்ந்து, எதையோ வெறித்துப் பார்த்தபடி இருப்பேன்.

‘பொன்னியின் செல்வன்’ படித்துவிட்டு பலமுறை சென்றிருக்கிறேன். ‘உடையார்’ என்ற தலைப்பில் ராஜராஜ சோழன் குறித்து எழுதிய என் குருநாதர் பாலகுமாரன் அவர்களுடன் சென்றிருக்கிறேன். கல்வெட்டு ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களுடன் ஆலயம் சென்று, கல்வெட்டு படித்து மலைத்திருக்கிறேன். எத்தனை முறை சென்றாலும் ராஜராஜ சோழ மாமன்னன் இங்குதான் எங்கோ நின்று, சகலத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்பதான நினைப்பு மட்டும் ஒவ்வொரு முறையும் உள்ளே அசரீரி போல் சொல்லிக்கொண்டே இருக்கிறது!

சோழம் சோழம் சோழம்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *