”தனியார் வங்கியில் 300 எனில், பொதுத்துறை வங்கிகளில் 3000 வாடிக்கையாளர்கள்” – வங்கி ஊழியர்கள் சங்கம்

Spread the love

வங்கி ஊழியர்கள், வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை என்ற ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். வேலைப்பளு காரணமாக மாதத்தின் அனைத்து சனிக்கிழமையும் விடுமுறை அளிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இவை நிறைவேற்றப்படாததை கண்டித்து சில தினங்களுக்கு முன்பு நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். அப்போது வாரத்தில் 5 நாட்கள் வேலை முறை ஒப்பந்தத்தை உடனே அமல்படுத்த வேண்டும், பணிக்கொடை உச்சவரம்பை அதிகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெங்கடாசலம்

இந்நிலையில், அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெங்கடாசலம் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “கடந்த 11ம் தேதி 8 லட்சம் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் ஒரு நாள் வேலைநிறுத்தம் மேற்கொண்டோம். ​எங்களுடைய கோரிக்கைகளை ஒன்றிய அரசாங்கம் ஏற்க மறுப்பதால் இந்த போராட்டத்தை முன்னெடுத்தோம். வங்கிகளில் இன்றைக்கு வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இதனால் வேலைப்பளு கூடுதலாகி விட்டது. ஆகவே அதற்கு தகுந்த மாதிரி வங்கி ஊழியர்களுக்கு ஓய்வு தேவைப்படுகின்றது. ​தற்போது மாதத்தில் இண்டு சனிக்கிழமை வங்கிகள் விடுமுறை, இரண்டு சனிக்கிழமை வங்கிகள் செயல்படுகிறது. நாங்கள் தொடர்ந்து வேலை செய்கிறோம்.

இதை மாற்றி, நான்கு சனிக்கிழமையும் விடுமுறை வேண்டும் என்று கேட்கிறோம். அதற்கு அரசு தரப்பில் அப்படியென்றால் மற்ற நாட்களில் வாடிக்கையாளர் சேவை நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்றனர். அதை ஏற்றுக்கொண்டு திங்கள் முதல் வெள்ளி வரை கூடுதலாக 40 நிமிடம் வாடிக்கையாளர் சேவைக்காக பணி செய்வதற்கு ஒப்புக்கொண்டோம். இந்த அடிப்படையில் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு அதை அமல்படுத்த 2024ல் ஒன்றிய அரசாங்கத்தின் பரிந்துரைக்கு அனுப்பட்டது. ஆனால் ஒன்றிய அரசு இதை ஏற்றுக்கொள்ளாமல் நிலுவையிலேயே வைத்துள்ளது. இதன் காரணமாக ஊழியர்களுக்கு மிகப்பெரிய ஆதங்கம் ஏற்பட்டுள்ளது.

வங்கி வாடிக்கையாளர்கள்

எங்களது கோரிக்கையை நிறைவேற்ற சொன்னால் ‘கவனிக்கிறோம் கவனிக்கிறோம்’னு சொல்கிறார்களே ஒழிய அமல்படுத்தவில்லை. இதனால் ஊழியர்கள் பல நெருக்கடியில் வேலை செய்து வருகின்றனர். அப்படி என்றால் சட்டரீதியாக போட்ட ஒப்பந்தத்திற்கு என்ன மதிப்பு?. ரிசர்வ் வங்கி, LIC உள்ளிட்ட மற்ற நிதி நிறுவனங்கள் எல்லாவற்றுக்குமே சனி, ஞாயிறு விடுமுறைதான். நாங்க, தவறான ஒன்றை கேட்கல. விடுமுறைக்காக கூடுதல் நேரம் வேலை செய்யறோம்னு சொல்லிட்டோம். ஆனாலும் அமல்படுத்தாததால் ஊழியர்கள் மத்தியில் பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயம் ஆக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு திட்டம் இருக்கு. பொதுத்துறை வங்கிகள் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்படுத்த வேண்டும். இதற்காக எங்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் நாங்கள் போராட்டத்துக்கு தள்ளப்படுவோம். போராட்டத்தில் ஈடுபடும் எங்களை பொதுமக்கள் தவறாக நினைக்கலாம். பொதுத்துறை வங்கிகளில் அடிக்கடி போராட்டம் நடக்குது, ஆகவே தனியார் வங்கிகளுக்கு சென்று விடலாம் அல்லது வங்கியையே தனியார் மயம் ஆக்கி விடலாம் என்று மக்களை தூண்டிவிடக்கூடிய ஒரு சதி திட்டமாக கூட இதனை நாங்க பார்க்கிறோம்.

காலியான இடங்களை நிரப்புவதிலும் சுணக்கம் காட்டப்படுகிறது. வாடிக்கையாளர்களுக்கு சேவை கொடுக்க வேண்டும் என்று அரசு சொல்கிறது. நாங்களும் அதற்காகத்தான் இருக்கிறோம். இன்றைக்கு கோடிக்கணக்கான சாதாரண மக்களுடைய வங்கி கணக்குகள், பொதுத்துறையில இருக்கு. தனியார் வங்கியில் ஒரு கிளைக்கு 300 வாடிக்கையாளர் இருக்கிறார்கள் என்றால் பொதுத்துறை வங்கிகளில் ஒரு கிளைக்கு 3,000 வாடிக்கையாளர் உள்ளனர். இதன்படி நாங்கள் கூடுதலாக வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்கிறோம். பணிக்கு தகுந்த மாதிரியாக ஆட்கள் நியமனம் செய்ய வேண்டியிருக்கிறது.

2 லட்சம் காலி பணியிடங்கள் வங்கிகளில் உள்ளது. குமாஸ்தா, கடைநிலை ஊழியர்கள் என பாதுகாப்புக்காக இருக்கக்கூடிய பணியிடங்களை நிரப்பாமல், அதை ஒப்பந்த முறையில் குறைவான ஊதியத்திற்கு பணியில் அமர்த்த முயற்சி நடக்குது. திட்டமிட்டு பொதுத்துறை வங்கிகளுக்கு எதிராக ஒன்றிய அரசு செயல்பட்டு வருகின்றது. அதை நாங்க எதிர்த்து தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம். மக்களுக்கு கூடுதலாக சேவை செய்ய வேண்டும், அதிகளவில் புதிய கிளைகள் திறக்க வேண்டும் என்கிறோம். ஆனால் தனியார் வங்கிகளுக்கு நிறைய கிளைகள் தொடங்குவதற்கு அனுமதி கொடுக்கின்றனர். ஆனால் அரசு வங்கிகளின் கிளைகளை குறைக்கின்றனர்.

அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெங்கடாசலம்

தனியார்மயம் செய்துவிட்டால், கிராமப்புற கிளைகள் எல்லாம் மூடப்படும். இதனால் பல பாதிப்புகள் ஏற்படும். மிகப்பெரிய ஆபத்து ஒன்றிய அரசால் இருக்கும் சூழலில் மக்களுக்காக நாங்க போராடிக் கொண்டிருக்கிறோம். பொதுத்துறை வங்கிகளில் ரூ.245 லட்சம் கோடி சேமிப்பு பணம் உள்ளது. அதற்கு பாதுகாப்பு பொதுத்துறை வங்கிகள்தான். மக்களும் எங்களுடைய இந்த கோரிக்கைகளையும், பிரச்சனைகளையும் புரிந்துகொண்டு எங்களுடைய போராட்டங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இன்னும் எங்களுடைய கோரிக்கை ஏற்றுக்கொள்ளாத காரணத்தினால், செப்டம்பர் 28, 29, 30 ஆகிய மூன்று நாட்கள் தொடர் வேலைநிறுத்தம் செய்வதாக அறிவிச்சிருக்கிறோம்.

22ம் தேதி சீஃப் லேபர் கமிஷனர், தொழிலாளர் நல ஆணையர் முன்பாக சமரச பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வந்துள்ளது. அதில் நிச்சயமாக நாங்க பங்குபெறுவோம். பேசி முடிப்பதுதான் எங்களுடைய திட்டம். ஆனால் அரசு பேச்சுவார்த்தையில எந்தவிதமான சுமுகமான முடிவும் எடுக்கவில்லை என்றால் அறிவித்தபடி மூன்று நாட்கள் வேலைநிறுத்தம் நடக்கும். அதையும் தொடர்ந்தும் எங்க பிரச்சனை தீர்க்கப்படவில்லை என்றால் அக்டோபர் மாதம் 26ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு தயாராகி வருகிறோம்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *