ஆளுநர் உரை: “எல்லாம் ரீல்ஸ்க்கான கண்டென்ட்; வாயைத் திறங்க CM சார்..!" – உதயநிதி ஸ்டாலின்

Spread the love

தமிழ்நாட்டின் சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடர், மாநில பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் உரையுடன் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துடன், 2-வது தேசிய கீதம் பாடப்பட்டு சட்டமன்ற கூட்டம் தொடங்கியது. ஆளுநர் உரை முடிந்ததும், பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் தலைமையில் 17 உறுப்பினர்களைக் கொண்ட அலுவல் ஆய்வுக் குழுவில், இக்கூட்டத்தொடர் 3 நாள்கள் நடைபெறும் என பேரவைத் தலைவர் அறிவித்திருக்கிறார். ஆளுநர் உரை முடிந்ததும் சட்டப்பேரவைக்கு வெளியே எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

விஜய்
விஜய்

அப்போது, “பொதுவாக ஆளுநர் உரை என்பது அரசின் எதிர்காலக் கொள்கை விளக்க வரைபடமாக (புளூ பிரின்ட்) இருக்க வேண்டும். ஆனால், இன்றைய உரை ஆளுங்கட்சியினர் ‘ரீல்ஸ்’ போடுவதற்கான கன்டென்ட் மெட்டீரியலாகவும், முதலமைச்சர் தன் சுயபுராணம் பாடிக்கொள்ளும் உரையாகவுமே அமைந்திருக்கிறது.

கடந்த திராவிட மாடல் அரசின் கீழ் கொண்டுவரப்பட்ட ஒலிம்பிக் மையங்கள், திறன் பயிற்சி மையங்கள், 69 சதவீத இட ஒதுக்கீடு, இருமொழிக் கொள்கை, தேசியக் கல்விக் கொள்கை எதிர்ப்பு மற்றும் கீழடி அகழாய்வு போன்ற சாதனைகளையே இந்த அரசும் மீண்டும் ஆளுநர் உரையில் குறிப்பிட்டுள்ளது.

தி.மு.க அரசின் திட்டங்கள் மீது ‘ஸ்டிக்கர்’ ஒட்டிவிட்டு, தங்களின் தோல்விகளுக்கான பழியை மட்டும் கடந்த ஆட்சியின் மீது போடுகின்றனர். மேலும், கடந்த வாரம் டெல்லி நிதி ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் பேசிய பொருளாதாரச் சாதனைகள் அனைத்தும் முன்னாள் முதலமைச்சரின் உழைப்பால் வந்ததே தவிர, இந்த ஒரு மாத கால ஆட்சியின் சாதனை அல்ல.

கடந்த ஐந்து ஆண்டுகளில் தி.மு.க அரசு தயாரித்துக் கொடுத்த உரையை முழுமையாக வாசிக்காத ஆளுநர், இந்த முறை ஒரு வரி, ஒரு எழுத்து கூட மாற்றாமல் அப்படியே வாசித்திருப்பதன் மூலம், தற்போதைய ஆளுங்கட்சிக்கும், பா.ஜ.க-விற்கும் இடையே ஒரு மறைமுக இணக்கமான ‘கனெக்ஷன்’ இருக்கிறதோ என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. அத்துடன், சட்டமன்ற மரபுகளை மீறி இரண்டு முறை தேசிய கீதம் இசைக்கப்பட்டதும் இந்த சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறது.

உதயநிதி ஸ்டாலின்

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தமிழகத்தில் சுமார் 175 பாலியல் வன்கொடுமைகளும், 65 கொலைகளும், 4 சாதிய ஆணவப் படுகொலைகளும் நடந்துள்ளன. தேர்தல் நேரத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்து வீரவசனம் பேசிய இன்றைய முதலமைச்சர், தற்போது தன் சொந்தக் கட்சியினரே குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்கத் தவறிவிட்டார். இதற்குப் பயந்துதான் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களை இழுக்கும் ‘பேனிக் பையிங்’ (Panic Buying) அரசியலில் முதலமைச்சர் ஈடுபட்டு வருகிறார்.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான எந்தவொரு தெளிவான திட்டமும் ஆளுநர் உரையில் இல்லை. வாக்குறுதிகளில் இருந்து தப்பிப்பதற்காகவே கடந்த சில நாள்களுக்கு முன்பு ஒரு போலியான வெள்ளை அறிக்கையை இந்த அரசு வெளியிட்டது. அதற்கு முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கொடுத்த பதிலடிக்கு அரசிடம் இதுவரை எந்தப் பதிலும் இல்லை.

அரசின் முத்திரை திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டத்தின் பெயரை மாற்றியதோடு, அது தொடர்பான வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் இருந்து நீக்கியுள்ளனர்.

ஸ்டாலின் - திமுக
ஸ்டாலின் – திமுக

‘முதல்வன்’ என்றாலே மக்களுக்குத் தி.மு.க தலைவரின் நினைவு வந்துவிடும் என்ற குறுகிய எண்ணத்தில்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் சந்திக்கும் முக்கியப் பிரச்னைகளைப் பற்றிப் பேசாமல், முதலமைச்சரின் உடை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களை மட்டுமே ஆளுங்கட்சியினர் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். உண்மையான மக்கள் பிரச்னைகளுக்கு முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே “தயவுசெய்து வாயைத் திறங்க சிஎம் சார்!” என்ற பேட்ஜ்களை (Badge) அணிந்து இன்று சட்டமன்றத்திற்கு வந்தோம்.” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *