ஆஸ்கர் விருதின் “சிறந்த சர்வதேசத் திரைப்படம்’ பிரிவுக்காக இந்தியாவின் அதிகாரப்பூர்வத் தேர்வாக மராத்தி படமான ‘கோந்தல்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், இந்தப் பரிந்துரை குறித்துப் பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் தெரிவித்த விமர்சனம் தற்போது மிகப்பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இந்தப் படம் குறித்து அனுராக் காஷ்யப், “ஆஸ்கர் விருதுப் போட்டிக்கு இந்தியா தொடர்ந்து முற்றிலும் தவறான படங்களையே தேர்வு செய்து வருகிறது. தகுதியான சிறந்த படங்களைத் தேர்வு செய்ய வாய்ப்பு இருந்தும், அதை நாமே கெடுத்துக் கொண்டோம்.
இந்தத் தேர்வுக் குழுவின் முடிவுகளில் அளவுக்கு அதிகமான அரசியலும் விழிப்புணர்வின்மையும் இருக்கின்றன. தற்போது தேர்வாகியுள்ள ‘கோந்தல்’ படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை, அதனால் அதைப் பற்றி இப்போதே எதுவும் கருத்துச் சொல்ல முடியாது.
ஆனால், ஆஸ்கருக்கு அனுப்பப்படும் படங்கள் சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டிருக்க வேண்டும். அதைச் செய்யாமல் விளம்பரங்களுக்காகப் பணத்தை வீணடிப்பது தேவையில்லாதது” எனக் காட்டமாகக் குறிப்பிட்டிருந்தார்.