ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகில் உள்ள கொளாநல்லியைச் சேர்ந்தவர் 60 வயதான வள்ளியம்மாள். வீட்டில் தனியாக வசித்து வரும் நிலையில், கடந்த 15 ம் தேதி மாலை வள்ளியம்மாள் வீட்டிற்குச் சென்ற இரண்டு நபர்கள் தங்களை செவிலியர் மற்றும் மருத்துவ உதவியாளர் என அறிமுகமாகியுள்ளனர்.
அரசின் அனைவருக்கும் இலவச மருத்துவத் திட்டம் மூலம் மருத்துவம் பார்க்க வந்திருப்பதாகக் கூறி அவருக்குப் போலியாக பரிசோதனை செய்துள்ளனர். வள்ளியம்மாளின் கால் வலிக்கு ஊசி செலுத்துவதாகக் கூறி மயக்க ஊசியைச் செலுத்தி மயக்கமடையச் செய்திருக்கிறார்கள். வள்ளியம்மாள் மயங்கியதும் அவரின் கழுத்தில் இருந்த 4 பவுன் தங்க சங்கிலியை அபகரித்துச் சென்றுள்ளனர்.
மயக்கம் தெளிந்ததும், ஏமாற்றப்பட்டதை அறிந்த வள்ளியம்மாள் போலீஸில் புகார் அளித்திருக்கிறார். கொடூரமான இந்தத் திருட்டு குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், குற்றறத்தில் ஈடுபட்டதாக நிசாலினி மற்றும் சுந்தர் ராஜன் ஆகிய இரண்டு பேரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

பின்னணி குறித்து தெரிவித்த காவல்துறையினர், “ஈரோடு, மரப்பாலம் பகுதியைச் சேர்ந்த சுந்தர் ராஜன்(26) மற்றும் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியைச் சேர்ந்த நிசாலினி(24) இருவரும் காரில் சென்று செவிலியர்கள் போல வெள்ளை நிற கோட் அணிந்து நூதன திருட்டில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
சி.சி.டி.வி கோமரா பதிவுகளைப் பார்த்து தீவிரமாகத் தேடி வந்த நிலையில், நேற்று காலை 9 மணியளவில் நடுப்பாளையத்தை அடுத்த அண்ணாமார் கோயில் அருகில் மலையம்பாளையம் போலீஸார் சோதனையில் ஈடுபட்ட போது இருவரும் காரில் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து 3 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவர்களின் குற்றப்பின்னணி குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்றனர்.