இசக்கி சுப்பையாவுக்கு மீண்டும் எம்.எல்.ஏ. பதவியா? நீதிமன்றம் சொன்ன அதிரடி பதில்! – Kumudam

Spread the love

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரத்தில் திடீர் திருப்பமாக, அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக மீண்டும் செயல்பட அனுமதி கோரி இசக்கி சுப்பையா சபாநாயகரிடம் மனு அளித்துள்ளார். மேலும், தான் அளித்த ராஜினாமா கடிதத்தைத் திரும்பப் பெற அனுமதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்திலும் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அம்பாசமுத்திரம் தொகுதியில் தற்போது எம்.எல்.ஏ. இல்லாததால் மக்கள் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வருவதாகக் குறிப்பிட்ட இசக்கி சுப்பையா, மீண்டும் தொகுதி எம்.எல்.ஏ.வாக செயல்பட அனுமதிக்கக் கோரி கடந்த 28-ஆம் தேதி சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் மனு அளித்திருந்தார்.

மேலும், இடைத்தேர்தல் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வெளியாகும் வரை எம்.எல்.ஏ.வாகத் தொடர அனுமதிக்க வேண்டும் என்றும், ஏற்கெனவே அளித்திருந்த தனது ராஜினாமா கடிதத்தைத் திரும்பப் பெற விரும்புவதாகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இதனிடையே, அதிமுகவில் இருந்து வெற்றி பெற்ற 6 எம்.எல்.ஏ.க்கள் ஆளும் தவெகவில் இணைந்தனர். இதையடுத்து, அவர்கள் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்த நிலையில், அவர்களின் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்றுக்கொண்டார்.

ஆனால், 6 எம்.எல்.ஏ.க்கள் மீதும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அதிமுக வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பாக அதிமுக சார்பில் சபாநாயகரிடம் புகார் மனுக்களும் அளிக்கப்பட்டன.

தகுதி நீக்க நடவடிக்கை தொடர்பான புகார்கள் நிலுவையில் இருந்த நிலையில், 6 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதற்கு அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இதனை எதிர்த்து அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் எம்.எல். ரவி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இந்த நிலையில், அதிமுக சார்பில் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்று, பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்த இசக்கி சுப்பையா தவெகவில் இணைந்தார். தற்போது, தேர்தல் வழக்கில் தீர்ப்பு வரும் வரை மீண்டும் எம்.எல்.ஏ.வாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்திருந்தார்.

ஆனால், இசக்கி சுப்பையாவின் கோரிக்கையை ஏற்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதனால், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா மற்றும் தகுதி நீக்க விவகாரத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *