இடைத்தேர்தலில் விஜய்யை காலி செய்ய வேண்டும்.. 7 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட திமுக மெகா பிளான்! | DMK to start a massive solo Groundwork against TVK alliance in All 7 Assembly Seats

Spread the love

Tamilnadu

oi-Shyamsundar I

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ள போதிலும், திமுக தரப்பு தேர்தல் பணிகளில் குதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர் (விராலிமலை தொகுதி), எம்.ஆர். விஜயபாஸ்கர் (கரூர் தொகுதி) ஆகியோருடன் மரகதம் குமாரவேல் (மதுராந்தகம்), எஸ். ஜெயகுமார் (பெருந்துறை), பி. சத்யபாமா (தாராபுரம்) மற்றும் இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகிய 6 பேரும் தங்களது பதவிக் காலத்திற்கு முன்பே விலகி, அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்தனர். இது போக விஜய்யின் திருச்சி கிழக்கு தொகுதியில் ஏற்கனவே அவர் ராஜினாமா செய்துவிட்டார்.

வழக்கு

நெல்லையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசரப் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அந்த மனுவில் அவர் மிக முக்கியமான சட்ட அம்சங்களைச் சுட்டிக்காட்டியிருந்தார்.

DMK to start a massive solo Groundwork against TVK alliance in All 7 Assembly Seats

ராஜினாமா செய்த முன்னாள் எம்எல்ஏக்களான சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட 5 பேரின் கடந்த சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்கு எதிராக, ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் பல்வேறு தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதை அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இவர்களுக்கு எதிரான தேர்தல் முறைகேடு மற்றும் வெற்றிக்கு எதிரான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, இவர்கள் ராஜினாமா செய்துவிட்டார்கள் என்பதற்காக அந்தத் தொகுதிகளுக்கு அவசரமாக இடைத்தேர்தல் தேதியை அறிவிக்கக் கூடாது என்று மனுதாரர் தரப்பில் மிக வலுவான கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனையடுத்து, தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை மற்றும் கரூர் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான தேதியை அறிவிக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மொத்தமுள்ள இந்த 7 தொகுதிகளில் 5 தொகுதிகளில் தேர்தல் நடத்த நீதிமன்றம் தற்காலிக முட்டுக்கட்டை போட்டுள்ளது. ஆனால் இப்படிப்பட்ட நிலையிலும், திமுக தற்போதே தனது தேர்தல் களப்பணிகளை தொடங்கியுள்ளது.

திமுகவின் புதிய சவால்

இந்த முறை தேர்தல் களம் வழக்கமானதாக இல்லை. இதுவரை திமுகவின் பலமாக இருந்த கூட்டணிக் கட்சிகள் இல்லாத ஒரு சூழலில், அரசியல் மாற்றங்களால் திமுக தனித்து களம் காண வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, மிகக் குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி பெற்று, பிரதான தலைவர்களைத் தன் வசம் இழுத்துள்ள முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் திமுகவிற்கு நேரடியாகப் சவால் விடுத்துள்ளது.

கூட்டணி பலம் இல்லாத இந்தச் சூழலை ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டுள்ள திமுக தலைமை, தனது சொந்தக் கட்சியின் பலத்தையும், வாக்கு வங்கியையும் நிரூபிக்க இதுவே சரியான தருணம் என்று முடிவு செய்துள்ளது. இதன் காரணமாகவே தேர்தல் அறிவிப்பு வரும் வரை காத்திருக்காமல் இப்போதே களப்பணிகளை முடுக்கிவிட அக்கட்சியின் தலைமை உத்தரவிட்டுள்ளது.

7 தொகுதிகளிலும் டார்கெட் விஜய்

திருச்சி கிழக்கு, விராலிமலை, கரூர், பெருந்துறை, அம்பாசமுத்திரம், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 7 தொகுதிகளிலும் திமுகவின் முழுக் கவனமும் இப்போது தவெகவை நோக்கியே திரும்பியுள்ளது. இடைத்தேர்தல் எப்போது நடந்தாலும், அங்கு பிரதானப் போட்டி திமுகவிற்கும் தவெகவிற்கும் இடையே தான் இருக்கப் போகிறது என்பதை உணர்ந்து, அதற்கேற்ற வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.

7 தொகுதிகளிலும் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் திமுகவின் அடிமட்டத் தொண்டர்களை ஒருங்கிணைத்து, பூத் கமிட்டிகள் உடனடியாகப் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த கால ஆட்சி சாதனைகள் மற்றும் கடந்த கால் மக்கள் நலத்திட்டங்களை வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்கள் மூலம் விளக்குவதற்குத் தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

விஜய் தலைமையிலான ஆட்சியின் அவலங்கள், மின்சார தடை, பெண்களுக்கு எதிரான கொடுமைகள், முதலீடுகள் வராதது என்று பல விஷயங்களை பற்றி பேச உள்ளனர்.

விஜய் கட்சிக்கு இளைஞர்கள் மத்தியில் எழுந்துள்ள அலையை எதிர்கொள்ளும் வகையில், திமுகவின் இளைஞரணி மற்றும் மாணவரணி நிர்வாகிகள் இந்த 7 தொகுதிகளிலும் முகாமிடத் தொடங்கியுள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் தடை உத்தரவு என்பது தற்காலிகமானது தான் என்றும், தேர்தல் வழக்குகள் முடிவுக்கு வந்ததும் அல்லது சட்டச் சிக்கல்கள் தீர்ந்ததும் நிச்சயம் தேர்தல் நடத்தப்படும் என்றும் திமுக தலைமை நம்புகிறது. எனவே, நீதிமன்றத் தடையால் கிடைத்துள்ள இந்த கூடுதல் கால அவகாசத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள திமுக திட்டமிட்டுள்ளது. மற்ற கட்சிகள் தேர்தல் தேதி அறிவிப்பு வந்தவுடன் பணிகளைத் தொடங்கலாம் என்று மெத்தனமாக இருக்கும் வேளையில், திமுக இப்போதே களத்தில் இறங்கி முன்னிலை பெற நினைக்கிறது.

அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோரின் சொந்தத் தொகுதிகளான விராலிமலை மற்றும் கரூரில் திமுக கூடுதல் கவனம் செலுத்துகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *