விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில், திருவண்ணாமலையில் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு மண்டலக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
அதில் உரையாற்றிய விசிக தலைவர் திருமாவளவன், “தமிழ்நாட்டு அரசியலில் நாம் குறி வைக்கப்படுகிறோம் என்பதை கட்சியின் தோழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் எங்கே இருந்தாலும், அந்த இடத்தில் எப்போதும் நேர்மையாகவே இருந்திருக்கிறோம்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நான் கொடுத்த பேட்டியின் முன்னும் பின்னும் வெட்டிவிட்டு, “தி.மு.க கூட்டணி தொடர்கிறது’ என்பதை மட்டும் பரப்புகிறார்கள்.
தி.மு.க கூட்டணியில் இருந்தபோது தவெக-வின் அரசியல் மற்றும் கருத்துக்கள் முரணாக இருந்ததால் விமர்சித்தது உண்மைதான்.
ஆனால், ஆட்சி அமைப்பதற்கு நெருக்கடியான ஒரு சூழலில், அந்த விமர்சனங்களை எல்லாம் கடந்து அவர்கள் நம்முடன் உறவை விரும்பும்போது, நாமும் அந்த உறவைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறோம். இதில் என்ன அரசியல் பிழை இருக்கிறது?
தி.மு.க தலைமையிலான கூட்டணி ஏன் நிலைக்கவில்லை என்பதை ஒரு சுயவிமர்சனமாக, சிந்தனைக்காக நான் முன்வைக்கிறேன். திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் மிக வேகமாக அதிலிருந்து வெளியேறி, தவெக-விற்கு ஆதரவு கொடுக்கும் அளவு அந்த உறவு ஏன் கசந்து போனது என்பதை தி.மு.க தலைவர்கள் யோசிக்க வேண்டும்.