
“தி.மு.கவை நல்லா வெச்சு வெளுத்துவிடுங்க மக்களே!” என கரூர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியிலேயே, இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு த.வெ.க. தலைவர் விஜய் அச்சாரம் போட்ட அடுத்த சில நிமிடங்களிலேயே இடைத்தேர்தலுக்கு தடைவிதித்து விஜய்க்கு ஷாக் கொடுத்திருக்கிறது உயர் நீதிமன்றம். அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே, பிற மூன்று மாநிலங்களுக்கு இடைத்தேர்தல்களை அறிவித்த தேர்தல் ஆணையம், தமிழகத்தை சட்டையே செய்யவில்லை. இதன் பின்னணியில் டெல்லியின் சூட்சுமக் கணக்குகள் இருப்பதாக சொல்லப்படும் நிலையில், விஜய் சேர்த்துவைத்திருக்கும் ‘இலை’ படைக்கு இடைத்தேர்தலில் வாய்ப்பு கிடைக்குமா என்பதுதான் கோட்டை வட்டாரத்தில் தொங்கும் மிகப்பெரிய கொக்கி!
இதுகுறித்து மூத்த அரசியல் பார்வையாளர் ஒருவரிடம் பேசினோம். “ஆட்சி மாறி, காட்சிகளும் மாறி விஜய் முதல்வரானதும் அதிமுக எம்.எல்.ஏக்களான பெருந்துறை ஜெயக்குமார், மதுராந்தகம் மரகதம் குமாரவேல், தாராபுரம் சத்தியபாமா, அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, விராலிமலை சி.விஜயபாஸ்கர், கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் அடுத்தடுத்து தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் ஐக்கியமாகினர். அவர்கள் ராஜினாமா கடிதம் கொடுத்தவுடனேயே, அவர்கள் வென்ற சட்டமன்றத் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது.
தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி, ஒரு சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதில் இருந்து ஆறு மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். தேர்தல் தொடர்பான வழக்குகள் இருந்தாலோ, பதவிக்காலம் ஓராண்டுக்கு குறைவாக இருந்தாலோ மட்டும் இந்த காலவரம்பு பொருந்தாது. அதன்படி இடைத்தேர்தலுக்கான முன்தயாரிப்பு வேலைகள் முடுக்கிவிடப்பட்டது. இதுகுறித்து சட்டப்பேரவைச் செயலகம், முறைப்படி தேர்தல் ஆணையத்திற்கு ஜூன் மாத இறுதியிலேயே தகவலும் கொடுத்திருந்தது. எனவே, எப்போது வேண்டுமானாலும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
இடைத்தேர்தல்… தமிழகத்துக்கு ஏன் அறிவிப்பில்லை?
இந்த நிலையில், இடைத்தேர்தல் நடப்பது என்பதே தற்போது கடும் பிரச்னை ஆகியிருக்கிறது. கடந்த ஜூன் 2ம் தேதி மத்தியபிரதேசம், குஜராத், பீகார் ஆகிய மாநிலங்களில் உள்ள தொகுதிகளுக்கு ஜூலை 30ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்த தேர்தல் ஆணையம், தமிழகத்துக்கு மட்டும் அறிவிக்கவில்லை. இதன் பின்னணியில் டெல்லியின் பல்வேறு கணக்குகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
கட்சிமாறி வாக்களித்தது, குதிரை பேர புகார், ‘எங்கள் எம்.எல்.ஏ.க்களை இடைத்தேர்தலில் ஜெயிக்கவைப்பதாக விஜய் சொன்னார்’ என்று வைகோ சொன்னது ஆகியவற்றை மையப்படுத்தி எழுந்த புகார்களை வைத்துக்கொண்டு, இதுவரை தவெக. அரசை ஒரு ஓரமாக நின்று வேடிக்கை பார்த்த டெல்லி மேலிடம், தற்போது தேர்தல் ஆணையம் மூலமாகவும், நீதிமன்ற வழக்குகள் மூலமாகவும் ‘செக்’ வைத்து ஆட ஆரம்பித்துவிட்டது என சொல்லப்படுகிறது.
அணைபோடும் அ.தி.மு.க. வழக்கு!
குறிப்பாக, கடந்த மே மாதம் 30ம் தேதி, ‘அதி.மு.க எம்.எல்.ஏ.க்களிடம் தவெ.க. நடத்தும் குதிரை பேரத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆளுநர் அர்லேகரிடம் புகார் அளித்திருந்தது. தொடர்ந்து, அக்கட்சியின் கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜூன் 15ம் தேதி இடைத்தேர்தல் நடத்த தடை கோரி வழக்கு தொடர்ந்தார்.
ஜூலை 2ம் தேதி அதி.மு.க சார்பாக பதிவுசெய்து வைத்திருக்கிறாகள். எம்பி. இன்பதுரை இந்திய தேர்தல் ஆணையத்திடம், ‘அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தக் கூடாது. குதிரைபேர குற்றச்சாட்டு தொடர்பாகத் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும்’ என புகார் அளித்தார்.
தி.மு.க. மற்றும் பா.ஜ.க. வழக்கு
இந்த சூழலில், ம.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா தொடர்பாக, வைகோ வெளிப்படையாக பேசியதைக் குறிப்பிட்டு, ஜூலை 1ம் தேதி ஆளுநரிடம் தி.மு.க. அமைப்புச் செயலளார் ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்தார். அதேபோல, திருநெல்வேலியைச் சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகி வெங்கடாஜலபதி என்பவரும், இதுபோன்ற வழக்குகளில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை மேற்கோள் காட்டி, இடைத்தேர்தலுக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில்
பொதுநல மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த புகார்கள் அனைத்தும் அதனதன் பாதையில் ஒருசேர வேகமெடுத்தன. குறிப்பாக, தேர்தல் ஆணையம் வரை குதிரை பேர புகார் வந்துவிட்டதால், டெல்லி உத்தரவுப்படி தமிழகத்துக்கு இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிடாமல் நிறுத்திவிட்டது தேர்தல் ஆணையம். அதாவது, த.வெ.க. ஆட்சியை மைனாரிட்டி அரசாக வைத்திருக்கவே டெல்லி தலைமை விரும்புகிறது.
இந்த நிலையில்தான், பா.ஜ.க. நிர்வாகி வெங்கடாஜலபதி தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம், தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு உள்ளிட்ட ஐந்து தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. இதற்கிடையே, அ.தி.மு.க. தொடர்ந்த வழக்கு விசாரணையும் ஜூலை 13ம் தேதி விசாரணைக்கு வந்தது.
க்ளீன் இமேஜ்…
ஜானின் நிறைவேறாத விருப்பம்!
இதனால், பனையூர் தலைமை படு அப்செட்டில் மூழ்கியிருக்கிறது. அதாவது, உடனே இடைத்தேர்தல் நடந்தால் தவெகவுக்கு தற்போது இருக்கும் கிரேஸ் மூலம் எளிதில் வெற்றியை அறுவடை செய்துவிடலாம் என கணக்கு போட்டார் விஜய், தவிர, தி.மு.க.வின் வியூகங்களை அடித்து நொறுக்கவும், தி.மு.க.வுக்கு டஃப் ஃபைட் கொடுக்கவும் அ.தி.மு.கவில் கோலோச்சிய புள்ளிகளால்தான் முடியும். அவர்களை வைத்தே கட்சியை அடுத்தகட்டத்துக்கும் நகர்த்திவிடலாம் என்ற மனக்கணக்கில் இருந்தார் விஜய்.
ஆதவ் தனிக்கணக்கு!
இதில் ஆதவ் தரப்பில் தனிக்கணக்கும் இருக்கிறது. அதாவது, ‘இன்று தவெ.க. நிர்வாகிகள் மொத்தமாக புஸ்ஸி ஆனந்த் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறார்கள். அ.தி.மு.க.வில் ஒவ்வொரு ஏரியாவிலும் செல்வாக்குடன் இருப்பவர்களை கொண்டுவந்துவிட்டால், ஆனந்தின் ஆதரவாளர்களை புறந்தள்ளிவிட்டு கட்சியை நம் கட்டுப்பாட்டில் எடுத்துவிடலாம்’ என்பது ஆதவ் எண்ணம். அதில் இடி விழுவதுபோலத்தான் தற்போது இடைத்தேர்தலுக்கு தடை எனும் உயர் நீதிமன்ற தீர்ப்பு வந்திருக்கிறது.
அலறும் 6 பேர்!
அப்படியே தேர்தல் நடந்தாலும், அ.தி.மு.க. வேட்பாளராக வென்றவர்கள் தற்போது த.வெ.க. வேட்பாளராக களமிறங்கும்போது அவர்களிடம் தோற்ற தவெ.க வேட்பாளர்களோ அல்லது அக்கட்சியின் நிர்வாகிகள் ஒத்துழைப்பு அளிப்பார்களா என்பது கேள்விக்குறி. மேலும், ஏற்கெனவே இலைக்கு வாக்களித்த வாக்காளர்களும் அவர்களுக்கு மீண்டும் வாக்களிப்பார்களா என்பதும் சந்தேகம். இவர்களில் அதிக ஊழல் கறைபடிந்த சிலருக்கு, சீட் கொடுக்கவேண்டாம் எனவும் தலைமை யோசிப்பதாக தெரிகிறது. இவர்களின் இந்த நிலையைப் பார்த்த த.வெ.கவுக்கு தாவும் முடிவில் இருந்த சில அதி.மு.க எம்.எல்.ஏக்கள், ‘அப்பாடா.. தப்பித்தோம்’ என்று பெருமூச்சு விடுகின்றனர்” என விரிவாக சொல்லி முடித்தார்.
இடைத்தேர்தலுக்கு தடை கொடுக்கப்பட்ட வழக்கின் மனுதாரரான வெங்கடாஜலபதியிடம் பேசினோம். “நான் பா.ஜ.க. மாநில பட்டியல் அணி துணைத் தலைவர். ஆனாலும், இந்த வழக்கிற்கும் நான் சார்ந்துள்ள கட்சிக்கும் சம்பந்தம் இல்லை, எம்.எல்.ஏ.வாக தேர்வுபெற்ற ஒருவர், அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேர்தல் களத்திற்கு வருவது ஜனநாயக விரோதம். மக்கள் வரிப்பணம் வீணாகக் கூடாது என்று ஒரு வழக்கறிஞராக இந்த வழக்கை தொடுத்துள்ளேன்” என்றார்.
அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையா இல்லை இருக்கு!