காமராஜர் மக்கள் கட்சியை தமிழ் மாநில காங்கிரஸுடன் இணைத்த பிறகு தமிழருவி மணியனின் பேச்சை எங்கும் கேட்க முடியவில்லை.
தமிழருவி மணியன் காந்தி, காமராஜரால் ஈர்க்கப்பட்டு காங்கிரஸ் கட்சிக்கு வந்தவர். இருந்தாலும் ஒருகட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் அவரால் தொடர முடியாத நிலை உருவாக, காந்திய மக்கள் இயக்கம் என ஆரம்பித்து நடத்தி வந்தார்.
தமிழகத்தில் இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்றாக ஒரு புதிய அரசு அமைய வேண்டுமென விரும்பி, அதற்கான முயற்சிகளை முன்னெடுத்தவர்.
இதனாலேயே திமுகவினரின் விமர்சனங்களைச் சம்பாதித்தார்.
விஜயகாந்த் அரசியலுக்கு வந்த போதும், அவரும் குடும்ப அரசியலை முன் நிறுத்துகிறார் என விமர்சனம் செய்தார்.
அதேநேரம் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டுமென வலியுறுத்தி, அது தொடர்பாக ரஜினியிடம் பேசியும் வந்தார்.

அந்த முயற்சிகள் பலனளிக்காமல் போன நிலையில் கட்சியை காமராஜர் மக்கள் கட்சி எனப் பெயர் மாற்றினார். தேர்தல் நேரங்களில் திராவிடக் கட்சிகளின் ஊழலைக் கடுமையாக விமர்சித்து மேடைகளில் பேசி வந்தார்.
பேச்சு தூய தமிழில் தெளிவான தரவுகளோடும் நாகரிமானதாகவும் இருக்குமென்பதாலேயே இவரது பேச்சைக் கேட்பதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கும்.
இந்தச் சூழலில் சில மாதங்களுக்கு முன் இவரது மனைவி காலமாகி விட காமராஜர் மக்கள் கட்சியை ஜி.கே. வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் இனைத்தார்.
அடுத்த வாரம் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில், இந்தத் தேர்தலில் அவரைப் பிரசாரக் களத்தில் எங்கும் பார்க்க முடியாததால், தொடர்பு கொண்டு கேட்டோம்.
”’இன்னைக்கு இருக்கிற அரசியல் சூழல் உங்களுக்குச் சரியா இருக்காது. நல்ல மாற்றம் வரணுமென நீங்க ஆசைப்பட்டீங்க. ஆனா அது நடந்ததா? அதனால் அரசியலை விட்டு விலகி, புத்தக வாசிப்பு, ஆன்மிகம்னு உங்களுக்குப் பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்துங்க’ என என் மனைவி தன்னுடைய கடைசி நாள்களில் சொன்னாங்க.
‘அப்படியே செய்யறேன்’னு நானும் பதில் வாக்கு தந்துட்டேன். அதனால் இனி என் பயணம் அந்தப் பாதையில்தான் போகும். தமிழ், இலக்கியம், ஆன்மிகம் என மீதமிருக்கிற காலத்தை நகர்த்த வேண்டியதுதான். பிரசாரமென நான் எங்கும் போகாதது திமுகவினருக்கு மகிழ்ச்சியையே தருமென நினைக்கிறேன்” என முடித்துக் கொண்டார் மணியன்.