Tamilnadu
oi-Velmurugan P
சென்னை: பட்டினப்பாக்கம் தலைமைச் செயலக அரசாணை ரத்து, ஆர்டிஐ (RTI) சட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பிரிவைச் சேர்த்த அரசாணை ரத்து, செய்யாறு நில எடுப்பு அரசாணை ரத்து, பைக் டாக்ஸி தொடர்பான முடிவுகள் ரத்து, கலைக்கல்லூரி மாணவர்கள் போராட்டக் கட்டுப்பாடு சுற்றறிக்கை ரத்து என அடுத்தடுத்து தமிழக அரசின் அரசாணைகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இப்படி ரத்து செய்யப்படும் அரசாணைகளை விமர்சிக்கும் நெட்டிசன்கள், “இதுக்கு பேசாம பருத்தி மூட்டை குடோன்லயே இருக்கலாமே” என்று கலாய்த்து வருகின்றனர்.
பட்டினப்பாக்கம் தலைமைச் செயலக அரசாணை ரத்து:
தமிழகத் தலைமைச் செயலகத்திற்குப் புதிய கட்டிடம் கட்டப்படும் என்று முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு அறிவித்திருந்தது. ₹1,200 கோடி செலவில் 25.55 ஏக்கர் பரப்பளவில் சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தொடர்பாக செப்டம்பர் 8-ம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதியில் உள்ள கடற்கரையை முள்ளிக்குப்பம், முள்ளிமாநகர் உள்ளிட்ட 9 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் தங்கள் படகுகளை நிறுத்தவும், மீன் வலைகளை உலர்த்தவும் பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் தங்கள் வாழ்வாதாரம் பறிபோகும் என மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், அரசியல் கட்சிகளும்கூடக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் கட்ட வெளியிடப்பட்ட அரசாணை, மீனவ அமைப்புகள் மற்றும் சூழலியலாளர்களின் கடும் எதிர்ப்பால் திரும்பப் பெறப்பட்டது.
ஆர்டிஐ (RTI) சட்ட சட்டம்-ஒழுங்கு பிரிவு விலக்கு அரசாணை ரத்து:
சட்டம்-ஒழுங்கு தொடர்பான பல முக்கிய விவரங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கப்படாது என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வரம்பிலிருந்து பொது சட்டம்-ஒழுங்கு துறைக்கு அரசு விலக்கு அளித்தது. “தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ், தமிழ்நாடு அரசின் உளவு மற்றும் பாதுகாப்பு அமைப்பான ‘பொது (சட்டம் மற்றும் ஒழுங்கு) துறை’ குறித்து கேட்கப்படும் கேள்விகளுக்கு இனி பதில் அளிக்கப்படாது” என அந்த அரசாணையில் கூறப்பட்டிருந்தது.
இதற்குப் பரவலாகக் கடும் எதிர்ப்பு எழுந்த காரணத்தால் அந்த அரசாணை ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்துத் தமிழகச் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், “தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 24 உட்பிரிவு (4)-ன் கீழ், தமிழக அரசின் பொது சட்டம்-ஒழுங்கு துறைக்கு விலக்கு அளித்து, மனிதவள மேலாண்மைத் துறையால் வெளியிடப்பட்டிருந்த அரசாணை விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.
செய்யாறு சிப்காட் நில எடுப்பு அரசாணை ரத்து:
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கத் தமிழக அரசு திட்டமிட்டது. இதற்காக மேல்மா உட்பட 11 கிராமங்களில் சுமார் 3,000 ஏக்கர் விவசாய நிலங்களைத் தமிழ்நாடு அரசு கையகப்படுத்த நடவடிக்கை எடுத்தது. இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், போராட்டங்களையும் மீறி நிலம் எடுப்பு தொடர்பான அரசாங்க ஆணையைத் தவெக அரசு வெளியிட்டது. இதனால் அரசுக்கு எதிராக அப்பகுதி மக்கள் கொதித்தெழுந்தனர். இதையடுத்து மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாகச் செய்யாறு பகுதியில் விவசாய நிலங்களைக் கையகப்படுத்த வெளியிடப்பட்ட அரசாணை கைவிடப்பட்டது.
கலைக்கல்லூரி மாணவர்கள் போராட்டக் கட்டுப்பாடு சுற்றறிக்கை ரத்து:
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் அரசியல் கட்சிகள் நடத்தும் போராட்டங்கள் மற்றும் கிளர்ச்சிகளில் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. இதற்கு மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடையே கடும் எதிர்ப்பு எழுந்த காரணத்தால், தமிழகக் கல்லூரிக் கல்வி இயக்ககத்தால் அச்ச his சுற்றறிக்கை உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டது.
பைக் டாக்ஸி அனுமதி வழிகாட்டு நெறிமுறைகள் நிறுத்தம்:
பைக் டாக்ஸிகளுக்கு அனுமதி அளிப்பது மற்றும் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக வெளியிடப்பட்ட சில வரைவு விதிமுறைகள், ஆட்டோ ஓட்டுநர் சங்கங்களின் தொடர் எதிர்ப்பால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பைக் டாக்ஸிகளை முறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்யப் போக்குவரத்துத் துறை, நிதித் துறை மற்றும் ‘கும்டா’ (CUMTA) பிரதிநிதிகள் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இவ்விவகாரத்தில் அரசு விரிவான கொள்கை முடிவு எடுக்க வேண்டியுள்ளதால், கொள்கை முடிவு எடுக்கப்படும் வரை தமிழகத்தில் பைக் டாக்ஸிகளுக்கு அனுமதி கிடையாது என்றும்; விதிகளை மீறி யாரேனும் பைக் டாக்ஸி இயக்கினால் தொடர்ந்து அபராதம் மற்றும் சட்டப்பூர்வ நடவடிக்கை தொடரும் என்றும் தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஆட்டோ ஓட்டுநர்களின் எதிர்ப்பு காரணமாகப் பைக் டாக்ஸியை அனுமதிப்பதில் அரசு தயக்கம் காட்டி வருகிறது.
இப்படி அரசு பல்வேறு முடிவுகளை எடுத்துவிட்டுப் பின்னர் அதைத் திரும்பப் பெறுவது தொடர்கதையாகிவிட்டதாக நெட்டிசன்கள் இணையத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

