Mumbai woman hires 15-year-old boy to sell drugs for Rs 200-போதைப்பொருள் விற்பனை செய்ய ரூ.200 சம்பளத்திற்கு 15 வயது சிறுவனை வேலைக்கு நியமித்த மும்பை பெண்

Spread the love

மும்பையில் சிறுவர்களைக்கூட போதைப்பொருள் விற்பனை செய்ய பயன்படுத்தும் சம்பவங்கள் அதிகரிக்க தொடங்கிவிட்டது. மும்பை தேவ்னார் பகுதியில் இரவு நேரத்தில் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். கோவண்டி பகுதியில் ரோந்து வாகனம் சென்ற போது 15 வயது சிறுவனின் செயல் சந்தேகப்படும் படியாக இருந்தது. உடனே அவனை கான்ஸ்டபிள் அசோக் பிடித்து விசாரித்தார். அந்த சிறுவன் பிளாஸ்டி பேக்குடன் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றான். போலீசார் அவனை தடுத்து நிறுத்தி பையில் இருந்த பொருட்கள் குறித்து விசாரித்தனர்.

அதில் போதைக்கு பயன்படுத்தப்படும் மாத்திரைகள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில் சிறுவனின் உறவினர்களில் ஒருவரை கண்டுபிடித்தனர். அப்பெண் மைனர் சிறுவனின் அத்தை என அடையாளம் கண்டு, அவர் முன்னிலையில் சோதனை நடத்தினர்.

பிளாஸ்டிக் பேக்கில் நூற்றுக்கும் மேற்பட்ட போதைப்பொருள் மாத்திரைகள் இருந்தது. விசாரணையின் போது, ​​அந்தச் சிறுவன், போதைக்காக மாத்திரைகளை உட்கொள்பவர்களுக்கு அவற்றை விற்று வந்ததாக போலீஸாரிடம் தெரிவித்தான்.

மேலும், அருகில் உள்ள குடிசைப்பகுதியில் வசிக்கும் பானோ காலா என்ற பெண், அந்த மாத்திரைகளை விற்பதற்காகத் தன்னிடம் கொடுத்து, அதற்காக 200 ரூபாய் சம்பளம் கொடுத்ததாகவும் அவன் கூறினான். இதையடுத்து போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் பானோகாலாவை கைது செய்தனர். அதோடு போதைப்பொருள் வைத்திருந்த மைனர் சிறுவனை சிறுவர் சீர்திருத்த முகாமிற்கு அனுப்பி வைத்தனர். பள்ளிக்கு செல்ல வேண்டிய சிறுவனை போதைப்பொருள் விற்பனை செய்ய பயன்படுத்தியது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *