இந்தியாவின் 100-வது கிராண்ட்மாஸ்டர் அனுஜ் ஸ்ரீவத்ரி: செஸ் உலகில் வரலாற்றுச் சாதனை!

Spread the love

64 கட்ட சதுரங்கக் களத்தில் இந்தியா தனது 100-வது கிராண்ட்மாஸ்டரைப் பெற்று, உலகச் செஸ் அரங்கில் தனக்கான சிம்மாசனத்தை உறுதி செய்துள்ளது. பிலிப்பைன்ஸில் (8.11.2026) நடைபெற்ற 7-வது ஆசியான் பிளஸ் தனிநபர் ஓபன் செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிச் சுற்றில் வெற்றி பெற்று, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த “அனுஜ் ஸ்ரீவத்ரி’ இந்தியாவின் 100-வது கிராண்ட்மாஸ்டராக வரலாற்றுப் புத்தகங்களில் இடம்பெற்றுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்து உருவான முதல் கிராண்ட்மாஸ்டர் என்ற பெருமையும் இவருக்குச் சேர்ந்துள்ளது.

1988-ல் தமிழகத்தின் செஸ் புயல் விஸ்வநாதன் ஆனந்த் இந்தியாவின் முதல் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தைக் கைப்பற்றியபோது தொடங்கிய இந்தச் செஸ் பயணம், இன்றைக்கு 100 என்ற இலக்கை தொட்டுள்ளது. ஆனந்த் விதைத்த விதை, இன்று உலகையே வியக்க வைக்கும் ஆலமரமாக விருட்சமடைந்துள்ளது. முதல் 50 கிராண்ட்மாஸ்டர்களை உருவாக்க இந்தியாவுக்கு 30 ஆண்டுகள் தேவைப்பட்டன. ஆனால், அடுத்த 50 கிராண்ட்மாஸ்டர்கள் வெறும் 7 ஆண்டுகளுக்குள் உருவாகியுள்ளனர் என்பது இந்தியச் செஸ்ஸின் அசுர வளர்ச்சியைத் தெளிவாகக் காட்டுகிறது.

அனுஜ் ஸ்ரீவத்ரி

அனுஜ் ஸ்ரீவத்ரி

இந்த வரலாற்றுச் சாதனையின் நாயகனான அனுஜின் பயணம் எளிதானதாக இருக்கவில்லை. அனுஜின் தந்தை அசோக் ஸ்ரீவத்ரிக்கு செஸ் விளையாட்டின் மீது தீராத காதல் உண்டு. தன் கனவை மகன்கள் மூலமாக நனவாக்க விரும்பிய அவர், கட்னி பகுதியில் உள்ள ஒரு மரத்தூள் ஆலையின் உரிமையாளரும், சிறந்த செஸ் பயிற்சியாளருமான பிரேந்திர குமார் திவாரியிடம் அனுஜை அழைத்துச் சென்றார். சிறுவன் அனுஜின் திறமையை சோதிக்க வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொண்ட அந்தப் பயிற்சியாளர், அடுத்த நொடியே அவனுக்குப் பயிற்சி அளிக்கப் பச்சைக்கொடி காட்டினார். அப்படி 7 வயதில், ஒரு மரத்தூள் ஆலையின் சிறிய அறையில் தொடங்கிய அந்தச் சதுரங்கப் பயணத்திற்காக, தந்தை அசோக் முழு ஈடுபாட்டுடன் அனுஜை பல டோர்னமென்ட்டுகளுக்கு அழைத்துச் சென்று நிழலாக நின்று உழைத்துள்ளார். 

 2020-ல் சர்வதேச மாஸ்டர் பட்டம் வென்ற இவருக்குக் கொரோனா பெருந்தொற்றுப் பெரிய சவாலாக அமைந்தது. தொடர்கள் முடங்கியதால், எதிர்காலம் கருதி பி.டெக் முடித்து ஜெர்மன் நிறுவனத்தில் கைநிறைய சம்பளத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் வேலையில் சேர்ந்தார்.

அனுஜ் ஸ்ரீவத்ரி

அனுஜ் ஸ்ரீவத்ரி

ஆனால், சொகுசான வேலையிலும் செஸ் கனவு அவரைத் தூங்கவிடவில்லை. இதனால் வேலைக்கும் செஸ்ஸிற்குமான தவிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணி, அந்தச் சாப்ட்வேர் வேலையைத் தைரியமாக ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் முழுநேரமாக செஸ் களத்தில் குதித்தார். பிலிப்பைன்ஸ் தொடரின் முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வியைத் தழுவினாலும், பீனிக்ஸ் பறவையாக மீண்டெழுந்து சாம்பியன் பட்டம் வென்று நாட்டின் 100-வது கிராண்ட்மாஸ்டராக மகுடம் சூடினார்.

தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ், பிரக்ஞானந்தா போன்ற இளம் தலைமுறையினரின் தொடர் சர்வதேச வெற்றிகளுடன், அனுஜ் ஸ்ரீவத்ரியின் இந்த உழைப்பும் தியாகமும் நிறைந்த இந்த மைல்கல்,இந்தியாவை உலகின் ‘செஸ் தலைநகரமாக’ மாற்றி வருகிறது. “100 கிராண்ட்மாஸ்டர்கள் என்பது ஒரு தொடக்கம் தான், இனி இந்தியாவின் அடுத்த இலக்கு 200!” என்ற முழக்கத்தோடு இந்திய செஸ் உலகம் அடுத்த கட்டப் பாய்ச்சலுக்குத் தயாராகிவிட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *