சமூக வலைதளங்களை மையமாகக் கொண்டு இளைஞர்கள் தங்களது எதிர்ப்பையும் கருத்துகளையும் வெளிப்படுத்தும் புதிய போக்கு தெற்காசிய நாடுகளில் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (Cockroach Janata Party), நேபாளத்தின் ‘ஜெனரல் இசட்’ (Gen-Z) இயக்கத்தைத் தொடர்ந்து, தற்போது வங்கதேசத்திலும் ‘பிராய்லர் சிக்கன் பார்ட்டி’ (Broiler Chicken Party) என்ற பெயரில் புதிய முகநூல் பக்கம் உருவாகி கவனம் பெற்றுள்ளது.
இந்தியாவில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், வேலை தேடும் இளைஞர்களை “கரப்பான் பூச்சிகள்” என்று ஒப்பிட்டு பேசியதாக சமூக வலைதளங்களில் சர்ச்சை எழுந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல்கலைக்கழக மாணவர் அபிஜித் திப்கே தலைமையில் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ என்ற நையாண்டி சமூக வலைதள இயக்கம் தொடங்கப்பட்டது. குறுகிய காலத்திலேயே இந்தப் பக்கம் சமூக ஊடகங்களில் அதிக கவனம் பெற்று, ஆயிரக்கணக்கான பின்தொடர்பவர்களைப் பெற்றது.
அதேபோல், நேபாளத்திலும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் ஆதரவுடன் ‘ஜெனரல் இசட்’ (Gen-Z) என்ற இளைஞர் அரசியல் இயக்கம் உருவாகி, புதிய தலைமுறையின் அரசியல் பங்கேற்பை வெளிப்படுத்தும் இயக்கமாக பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள மாணவர் போராட்டம் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக HSC பொதுத்தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், கல்வி அமைச்சர் ஏ.என்.எம். எஹ்சானுல் ஹொக் மிலோன், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை “பண்ணைக் கோழிகள்” என்று குறிப்பிட்டதாகக் கூறப்படும் தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாணவர்கள் ‘பிராய்லர் சிக்கன் பார்ட்டி’ என்ற பெயரில் முகநூல் பக்கத்தை தொடங்கியுள்ளனர். “நீங்கள் யார்? நாங்கள் யார்? பண்ணைக் கோழிகள்” என்ற முழக்கமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த ஜூலை 13-ஆம் தேதி உருவாக்கப்பட்ட இந்த முகநூல் பக்கம், அடுத்த நாளே ஆயிரக்கணக்கான பின்தொடர்பவர்களைப் பெற்றது. இந்தியா, நேபாளத்தைத் தொடர்ந்து வங்கதேசத்திலும் சமூக வலைதளங்களை எதிர்ப்புக் களமாக பயன்படுத்தும் இளைஞர்களின் போக்கு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

