“செத்த பாம்பை அடிச்சதாலதான் கருநாகம் உள்ளே வந்துருச்சி" – என்ன சொல்கிறார் ஆர்.எஸ். பாரதி?

Spread the love

காமராஜன் பிறந்தநாளை முன்னிட்டு ஆலந்தூரில் உள்ள அவரது சிலைக்கு திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, தி.மு.க அமைப்பு செயலாளருமான ஆர்.எஸ் பாரதி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, “காமராஜருக்கும் திமுகவிற்கும் உள்ள தொடர்பு மிக நெடியது. டெல்லியில் காமராஜரின் வீட்டிற்குத் தீ வைக்கப்பட்டபோது அவர் உள்ளே உறங்கிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில், கோதண்டபாணி என்ற தி.மு.க தொண்டர் காமராஜரைப் பத்திரமாக வெளியே மீட்டார்.

காமராஜர், கருணாநிதி
காமராஜர், கருணாநிதி

மிசா அவசரநிலைச் சட்டம் அமலில் இருந்தபோது, அவரைக் கைது செய்யக் கோரி வந்த உத்தரவை அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி திட்டவட்டமாக மறுத்தார். 2006-ல் தி.மு.க ஆட்சியில், காமராஜரின் பிறந்தநாளை ‘கல்வி வளர்ச்சி நாளாக’ அறிவித்ததோடு, அடுத்தடுத்து வரும் ஆட்சிகள் இதனை மாற்றிவிடக் கூடாது என்பதற்காக அரசாணையோடு நிறுத்தாமல், அதற்குச் சட்ட வடிவமும் கொடுத்தார் கலைஞர்.

தமிழ்நாட்டில் நடக்கும் குதிரைப் பேர அரசியல் மற்றும் கட்சித் தாவல் முயற்சிகள் குறித்து ஆளுநரிடமும், லஞ்ச ஒழிப்புத் துறையிடமும் (DVAC) புகார் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.

இது ஒரு ‘அரசியல் நாடகம்’ என்றும், ஏன் காவல்துறையிடம் புகார் அளிக்கவில்லை என்றும் மாணிக் தாகூர் விமர்சித்துள்ளார். ஆனால், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கு முன்னால் தகுதியான அதிகாரியிடம் புகார் அளித்தீர்களா என்ற சட்ட ரீதியான நடைமுறை கேள்விக்கு விடையளிக்கும் விதமாகவே ஆளுநரிடம் மனு கொடுக்கப்பட்டது.

மற்றொரு விவகாரமாக, கரூரில் விஜய் உள்ளிட்டவர்கள் பேசிய பேச்சு தொடர்பாக, உச்ச நீதிமன்றம் நியமித்த நீதிபதியிடமும் சிபிஐ-யிடமும் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் ஆனந்த வெங்கடேஷ், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் அக்யூஸ்டுகளாக இருக்கும்போது, சிபிஐ விசாரணை நடக்கும் வேளையில் இதுபோன்று பேசுவது தவறு என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விஜய், எடப்பாடி பழனிசாமி
விஜய், எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் தற்போதைய ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. சிறையிலேயே மாற்றுத்திறனாளி ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட நிகழ்வு போன்ற சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. மாற்றுத்திறனாளி ஒருவர் சமூக வலைத்தளத்தில் ஒரு வார்த்தை பதிவிட்டதற்காக இரவோடு இரவாகக் கைது செய்யப்படுகிறார்.

மேலும், அரசியல் ரீதியாக தி.மு.க இனி மற்ற சிறிய கட்சிகளைப் பற்றி விமர்சித்து விவாதிக்கப் போவதில்லை. ஏற்கெனவே செத்த பாம்பை அடிச்சதாலதான் இப்போது கருநாகம் உள்ளே வந்துவிட்டது. எனவே, எங்களின் முதன்மை எதிரி த.வெ.க மட்டுமே.

பெரம்பூர் பகுதியை சிங்கப்பூர் ஆக்குவேன் என்று கூறுபவர்கள், தி.மு.க ஆட்சிக் காலத்தில் அங்கு கட்டப்பட்ட அலுவலகங்கள், திருமண மண்டபங்கள் மற்றும் கொளத்தூர், வட சென்னை பகுதிகளில் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட அசுர வளர்ச்சியைத் திறந்த மனதோடு நேரில் வந்து பார்க்க வேண்டும்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *