“இந்தியாவில் இருப்பது ஒரு வரம்..” நைட் 10 மணிக்கு திடீர் உடல்நல பாதிப்பு.. இளம்பெண் பகிர்ந்த அனுபவம் | 24-Hour Pharmacies in India: Doctor Explains Why This Everyday Convenience Matters on emergency

Spread the love

International

oi-Vigneshkumar

டெல்லி: அன்றாட வாழ்க்கையில் நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் சில விஷயங்களின் உண்மையான மதிப்பு, அவை அவசரமாக தேவைப்படும் நேரத்தில் தான் புரியும். இந்தியாவில் இரவு நேரத்திலும் மருந்துகள் எளிதாகக் கிடைப்பதை நாம் பெரிதாக எடுத்து கொண்டிருக்க மாட்டோம்.. ஆனால், வெளிநாடுகளில் இதுவே மிக பெரிய விஷயம் என்கிறார் மருத்துவர் தீபாஞ்சலி சர்மா! இது தொடர்பாக அவர் பகிர்ந்த அனுபவம் தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது.

நம்மில் பலரும் வெளிநாடுகளில் இருக்கும் வசதிகள் இந்தியாவில் இருப்பதில்லை என புலம்புவோம். சமூக வலைத்தளங்களில் கூட இதுபோல புலம்புவோரை நாம் பார்த்திருப்போம். ஆனால், எல்லா விஷயங்களிலும் வெளிநாடுகள் தான் பெஸ்ட் என சொல்லிவிட முடியாது. இதை உணர்த்தும் சம்பவங்களும் அவ்வப்போது நடக்கும். அப்படியொரு சம்பவம் தான் இப்போதும் நடந்துள்ளது.

24-Hour Pharmacies in India India Pharmacies

மருத்துவர்

தீபாஞ்சலி சர்மா மற்றும் அவரது கணவரும் மருத்துவர்களாக உள்ளனர். ஒரு நாள் மாலை தீபாஞ்சலியின் கணவருக்கு திடீரென தலைவலி ஏற்பட்டுள்ளது. அதை தொடர்ந்து அவர் தொடர்ந்து வாந்தி எடுத்ததால், அவருக்குத் தேவையான மருந்துகள் மற்றும் ஐவி ஊசிகளை வாங்குவதற்காக தீபாஞ்சலி இரவு 10 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது தான் இந்தியாவில் இருப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்ததாக அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர், “என் கணவருக்கு தேவையான மருந்துகள் மற்றும் ஐவி ஊசிகளை வாங்குவதற்காக இப்போது வெளியே செல்கிறேன். இப்படிப்பட்ட தருணங்களில் தான் இந்தியாவில் இருப்பது ஒரு வரம் என்பதை உணர்கிறேன்” என்றார். மேலும், தனது அனுபவத்தை இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் உள்ள சூழலுடன் ஒப்பிட்ட அவர், அங்கு இரவு நேரத்தில் உடனடியாக மருத்துவ உதவியை பெறுவது மிகவும் சிரமமாக இருக்கும் என்று கூறினார்.

வெளிநாடு

அவர் மேலும், “நான் இப்போது இங்கிலாந்திலோ அல்லது வேறு ஏதேனும் மேற்கத்திய நாட்டிலோ இருந்திருந்தால், வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கும். அங்குள்ள அவசர சிகிச்சைப் பிரிவுகள் ஏற்கனவே அதிக நெரிசலில் இருக்கும் நிலையில், என் கணவருக்கு உடனடியாக உதவி கிடைத்திருக்குமா என்பது தெரியாது. மருத்துவ சிகிச்சை என வரும்போது இந்தியாவில் இருப்பதே சாதகமாக இருக்கிறது. இரவு நேரத்திலும் வீட்டை விட்டு வெளியே சென்று தேவையான மருந்துகளை வாங்கிவிட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பி கணவரை கவனித்து கொள்ள முடிந்தது.

மருந்தகங்கள்

இந்தியாவில் உள்ள 24 மணி நேர மருந்தகங்கள் உள்ளன. மருத்துவர்களையும் ஒப்பீட்டளவில் எளிதாக அணுக முடிகிறது. தேவையான மருந்துகளை சீக்கிரம் வாங்க முடிகிறது. இதுபோல பல சாதகமான விஷயங்கள் நமக்கு இருக்கிறது. அதேநேரம் இந்தியாவின் மருத்துவ அமைப்பு குறைபாடுகளே இல்லை என சொல்லிவிட முடியாது. நம் நாட்டில் மேம்படுத்தப்பட வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால் எந்த நாடும் 100க்கு 100 சிறந்த அனுபவத்தை வழங்காது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது” என்று அவர் தெரிவித்தார்.

இந்தியா

அதேநேரம் தனது வசதியும் வாய்ப்பும் கூட இதுபோல தேவையான நேரத்தில் சிகிச்சை கிடைக்க உதவியாக இருப்பதை ஒப்புக்கொள்ளும் அவர், இந்தியாவில் அனைவருக்கும் இதுபோன்ற எளிதான சிகிச்சை கிடைக்கும் என சொல்லிவிட முடியாது எனவும் அவர் தெரிவித்தார். அவரது இந்த போஸ்ட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. வெளிநாடு சென்றால் வாழ்க்கையே மாறிவிடும். நமக்கு தேவையான எல்லா வசதிகளும் கிடைக்கும் என பலரும் கருதும் நிலையில், அதையே அவர் கேள்விக்குள்ளாக்கினார். இந்தியாவில் நாம் பெரிதாக கவனிக்காத சில வசதிகள், வெளிநாடுகளில் சவால்களாக மாறக்கூடும் என்பதே அவரது கருத்து!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *