சுதந்திரத்திற்குப் பிறகு ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக, வறுமையை ஒழிப்பது என்பது நிறைவேறாத வாக்குறுதியாகவே இருந்தது. 2010-களின் தொடக்கத்தில் கூட, சுகாதாரம், ஊட்டச்சத்து, தூய சமையல் எரிபொருள் மற்றும் வங்கிச் சேவைகள் ஆகியவற்றில் பின்தங்கிய, தீராத வறுமையின் இருப்பிடமாகவே இந்தியா வெளிநாடுகளில் சித்தரிக்கப்பட்டது.
ஏழைகளின் கைகளில் பணத்தைக் கொடுத்தால் போதும், வறுமை தானாகவே சரியாகிவிடும் என்பதுதான் அன்றைய காலகட்டத்தில் நிலவிய பொதுவான அணுகுமுறையாக இருந்தது.
கடந்த பத்தாண்டுகள் அந்த நம்பிக்கையைத் தலைகீழாக மாற்றியமைத்துள்ளன.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், தற்காலிக நிவாரணம் என்ற நிலையிலிருந்து மாறி, வறுமையை நிரந்தரமாக்கும் தடைகளை வேரோடு அகற்றும் அடிப்படை மாற்றத்தை இந்தியா கண்டுள்ளது. வரிசையில் கடைசியாக நிற்கும் மனிதனின் நலனே முக்கியம் என்ற ‘அந்தியோதயா’ தத்துவத்தால் வழிநடத்தப்பட்ட நமது அரசு, ஒவ்வொரு குடும்பமாகச் சென்று அவர்களின் அடிப்படைத் தேவைகளையும் குறைகளையும் தீர்க்கும் கடினமான பாதையைத் தேர்ந்தெடுத்தது; இதன் மூலம் வளர்ச்சி மிகவும் தேவைப்படுபவர்களைச் சென்றடைவதை உறுதி செய்தது.
இலக்கு நிர்ணயிக்கப்பட்ட, துல்லியமான அணுகுமுறை
வறுமை என்பது வெறும் வருமானம் அல்லது கூலிப் பற்றாக்குறை மட்டுமல்ல. பாதுகாப்பான வீடு, சுத்தமான குடிநீர், கழிப்பறை வசதி அல்லது மருத்துவ வசதி இல்லாத ஒரு குடும்பம், வருமானம் உயர்ந்தாலும் பாதுகாப்பற்ற நிலையிலேயே இருக்கும். ஒரேயொரு உடல்நலக் குறைவு கூட அந்தக் குடும்பத்தின் மொத்த சேமிப்பையும் கரைத்து, அவர்களை மீண்டும் வறுமைக்குள் தள்ளிவிடும்.
எனவே, நமது அரசு ஒவ்வொரு திட்டத்தையும் தேவைப்படுபவர்களைச் சரியாகச் சென்றடையும் வகையிலும், அளவிடக்கூடிய பலன்களைத் தரும் வகையிலும், எந்தக் குறையைப் போக்க வேண்டுமோ அதற்கு ஏற்றவாறும் வடிவமைத்தது.