கல்லால இலை வைத்து வழிபடுவது எப்படி?
குரு ஸ்தலங்களில் வழிபாடு, குலத்தின் பரம்பரை குரு பூஜை, சித்தர்களை குருவாக எண்ணி யோக வழிபாடு செய்வது, குரு தொடர்பான விருட்ச வழிபாடு ஆகியவற்றால் குருவருள் கைகூடும் என்பார்கள். இவற்றில், கல்லால இலை வழிபாடு 4-வது வகை.
வியாழக்கிழமையுடன் இணைந்து வரும் சுபமுகூர்த்த தினத்திலோ, பஞ்சாங்க சுத்தியுள்ள நாளிலோ விஷய ஞானம் நிறைந்த குருமார்களிடம் இருந்து பெண்வகையைச் சேர்ந்த கல்லால இலையைப் பெற்று வரவேண்டும்.
சில இடங்களில், சப்போட்டா மர இலைகளை லக்ஷ்மி மூலிகை என்று கொண்டு வந்து வைக்கிறார்கள் சிலர். அதன் இலையும் பெண் வகை கல்லாலம் போன்றே இருக்கும்; கவனம் தேவை. ஆகவே குருமார்களின் வழிகாட்டலுடன் இந்த இலையைப் பெற்று வருவது சிறப்பு.
வீட்டுக்குக் கொண்டு வந்ததும் பால் மற்றும் சந்தனத்தால் கழுவி சுத்தம் செய்து, சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும். தொடர்ந்து, மஞ்சள் மற்றும் சிவப்பு மலர்களைச் சமர்ப்பித்து, அன்றைய திதி- வாரம்- நட்சத்திரம் சொல்லி, ‘மம சீக்கிர தனதான்ய விருத்தியர்த்தம் குடும்ப க்ஷேமார்த்தம்’ என்று வேண்டிக்கொள்ளவேண்டும்.
தொடர்ந்து விநாயகரை வழிபடவேண்டும். பின்னர், மணைப் பலகை ஒன்றில் குருபகவானின் யந்திர எண் கட்டத்தை வரைந்து வைக்க வேண்டும் (மேலே படத்தில் உள்ளது).
அடுத்ததாக…
‘அநர்க்க ரத்ந சம்பூர்ணோ மல்லிகா குஸுமப்ரியா:
தப்தசாமி கராகாரோ ஜிததாவா நலாக்ருதி:
என மூன்று முறை சொல்லி வணங்கிவிட்டு, பின்வரும் பாடலைப் பாடித் துதிக்கவேண்டும்.
கல்லாலின் புடையமர்ந்து நான்மறை
ஆறங்க முதல் கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த
பூரணமாய் மறைக்கு அப்பாலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை
இருந்தபடி இருந்து காட்டிச்
சொல்லாமல் சொன்னவரை நினையாமல்
நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்
இந்தத் துதியையும் மூன்று முறை சொல்லி வணங்கவேண்டும்.