சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் துவாரபாலகர்கள் சிலையில் 2019-ம் ஆண்டு தங்க முலாம் பூசியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே தடினமாக இருந்த தங்கப் பூச்சைத் திருடிவிட்டு மெல்லியதாக தங்கம் பூசி மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சென்னையைச் சேர்ந்த “ஸ்மார்ட் கிரியேஷன்ஸ்’ நிறுவனத்தின் உரிமையாளரும் தலைமைச் செயல் அதிகாரியுமான பங்கஜ் பண்டாரி 9-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
‘ஸ்மார்ட் கிரியேஷன்ஸ்’ நிறுவனத்தில்தான் தங்கம் பிரிக்கப்பட்டதாக சிறப்பு புலனாய்வுக் குழு கண்டறிந்தது. இந்த வழக்கில் ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் வழக்கறிஞராக கே.பி.பிரதீப் செயல்பட்டார்.
தொடக்கக் காலத்தில், பங்கஜ் பண்டாரி மற்றும் அவரது நிறுவனத்திற்காக ஊடகங்களிடம் பேசியது வழக்கறிஞர் கே.பி.பிரதீப் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வி.டி.சதீசன் தலைமையிலான காங்கிரஸ் அரசு சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில் அரசு வழக்கறிஞராக கே.பி.பிரதீப்பை நியமித்தது. இதன் மூலம் அரசு தரப்பு தகவல்கள் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்குக் கைமாற வாய்ப்பு உள்ளதாக விமர்சனம் எழுந்தது.

தேவசம்போர்டு தொடர்பான வழக்குகளில் ஆஜராகி வந்த அனுபவத்தின் அடிப்படையில் அவருக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக வாதாடிய ஒருவரை, அரசுத் தரப்பு வழக்கறிஞராக நியமிப்பது முறையானதுதானா என்ற கேள்வி எழுந்தது.