15. உங்கள் நிதி இலக்குகளுக்கு காலக்கெடு முக்கியம்!
வீடு வாங்குவது, குழந்தைகளின் கல்வி, திருமணம், ஓய்வுக்காலம் என ஒவ்வொரு இலக்குக்கும் எவ்வளவு பணம் தேவை, எத்தனை ஆண்டுகளில் தேவை என்பதைக் கணக்கிடுங்கள். அதற்கேற்ப முதலீட்டுத் திட்டத்தைத் தேர்வு செய்யுங்கள்.
16. நாமினி விவரங்களைச் சரியாகப் பதிவு செய்யுங்கள்!
நிறைய பேர் செய்யும் தவறு நாமினி விவரங்களை சரியாக பதிவு செய்யாமல் அலட்சியமாக இருப்பதுதான். வங்கிக் கணக்கு, பி.எஃப், மியூச்சுவல் ஃபண்ட், காப்பீடு என எல்லாவற்றிலும் நாமினி விவரங்களைச் சரியாகப் பதிவு செய்யுங்கள். திருமணம், குழந்தைப் பிறப்பு போன்ற நேரங்களில் அவற்றைப் புதுப்பிக்கவும்.
17. ஆண்டுக்கு ஒருமுறை மதிப்பீடு செய்யுங்கள்!
உங்கள் சொத்துகள் எவ்வளவு, கடன்கள் எவ்வளவு, முதலீடுகள் எந்த நிலையில் உள்ளன, காப்பீடு போதுமானதாக இருக்கிறதா என்பதையெல்லாம் ஆண்டுக்கு ஒருமுறை ஆய்வு செய்யுங்கள். தேவைக்கேற்ப முதலீடுகளை மறுசீரமைப்பு செய்யுங்கள்.
18. வருமான வரியை முறையாகத் திட்டமிடுங்கள்!
பலரும் வரியைச் சேமிக்கிறேன் என்ற பெயரில் தேவையில்லாத முதலீடுகளைச் செய்கிறார்கள். உங்கள் வருமானத்துக்கு ஏற்ற வரி முறையைத் தேர்ந்தெடுத்து, அவசியமான வகையில் லாபகரமான வகையில் வரிச் சலுகைகளைப் பயன்படுத்துங்கள்.
19. குழந்தைகளுக்கு பணத்தின் மதிப்பைக் கற்றுக்கொடுங்கள்!
பணத்தை சம்பாதிப்பதும், சேர்ப்பதும் எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு முக்கியம் அதைக் காப்பாற்றுவதும். உங்கள் பிள்ளைகளுக்கு சரியான நிதி அறிவு இல்லை எனில், நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தைக் கரைத்துவிடுவார்கள். சம்பாதிப்பது, சேமிப்பது, செலவழிப்பது, முதலீடு செய்வது ஆகியவற்றின் அடிப்படைகளை குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள். அப்போதுதான் உங்கள் செல்வத்தைப் பாதுகாப்பார்கள், மேலும் பெருக்குவார்கள்.
20. உங்கள் நிதி ஆவணங்களை ஒழுங்காகப் பராமரியுங்கள்!
நிறைய பேர் சொத்து சேர்ப்பதில் காட்டும் ஆர்வத்தையும், அக்கறையையும் சொத்து ஆவணங்களை நிர்வகிப்பதில் காட்டத் தவறுகிறார்கள். முதலீட்டு ஆவணங்களைப் பராமரிப்பதில் சரியான வழிமுறையைப் பின்பற்றுகிறவர்கள் குறைவு. வங்கிக் கணக்கு விவரங்கள், காப்பீட்டுப் பத்திரங்கள், முதலீட்டு ஆவணங்கள், கடன் விவரங்கள், சொத்துப் பத்திரங்கள், நாமினி தகவல்கள் என அனைத்தையும் பாதுகாப்பாகப் பராமரிப்பது அவசியம். குடும்பத்தில் நம்பிக்கைக்குரியவர்களிடம் அந்த விவரங்களைத் தெரியப்படுத்துவது மிக அவசியம்.
இந்த நிதி சார்ந்த விஷயங்களில் கவனமாக இருப்பதுடன், சம்பள உயர்வு கிடைத்தால் அதற்கேற்ப வாழ்க்கைச் செலவுகளை உயர்த்தாமல் முதலீட்டை அதிகரியுங்கள்; முதலீடு செய்யும் முன் அதன் ரிஸ்க்கைப் புரிந்துகொள்ளுங்கள்; கடன் வாங்கி ஆடம்பரப் பொருள்களை வாங்குவதைத் தவிருங்கள். நிதி நிர்வாகத்தில் நாம் காட்டும் அக்கறைதான் நம்மை விரைவில் பணக்காரர் ஆக்கும்!