வணிக மென்பொருட்களைத் தயாரிக்கும் இந்திய பன்னாட்டு நிறுவனமான ஸோஹோவில் கிட்டத்தட்ட 10,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை கடந்த பல மாதங்களாக அதிகரிக்கப்படவில்லை என்றும், இந்தாண்டு வழக்கமாக வழங்கப்படும் ஊதிய உயர்வும் கிடையாது என்றும் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
ஏன் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை என்பது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:
“மென்பொருள் துறையின் வணிகக் கண்ணோட்டம் நிச்சயமற்றதாக உள்ளது. மேலும், செயற்கை நுண்ணறிவு செலவுகளை அதிகரித்துள்ளது. தரவு மையங்களுக்குத் தேவைப்படும் சர்வர்களின் விலை 4 மடங்கு அதிகரித்துள்ளது. செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு வேகமாக அதிகரித்து, மிக அதிக செலவுகளுக்கு வழிவகுக்கிறது. இதனைக் கட்டுப்படுத்த நாங்கள் முயற்சித்து வருகிறோம்.
இவை அனைத்துக்கும் மேலாக, சவாலான புவிசார் அரசியல் பின்னணியும் உள்ளது.
எங்களின் சந்தைப்படுத்தல் பட்ஜெட்டைக் குறைத்துள்ளோம். இந்தாண்டு எங்களால் வழக்கமான சம்பள உயர்வை வழங்க முடியாது என்று எங்கள் ஊழியர்களிடம் கூறியுள்ளோம். இதைத் தவிர்க்க முடியாததற்கு நான் மன்னிப்புக் கேட்டுள்ளேன்.
பெரும் ஆட்குறைப்புகளைத் தவிர்க்க நாங்கள் கடுமையாக உழைப்போம். ஆனால், மென்பொருள் வேலைகளுக்கான கண்ணோட்டம் இருண்டதாகவே உள்ளது. கடந்த 18 மாதங்களாக நாங்கள் எங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவில்லை.
எங்கள் ஊழியர்களில் பெரும்பாலானோர் இந்தச் சூழ்நிலையைப் புரிந்துகொள்கிறார்கள். அவர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன்.
நாங்கள் எங்களைப் புதுப்பித்துக் கொள்ளும் பணியில் இருக்கிறோம். எங்களின் இந்தப் புதுப்பித்தல் எவ்வாறு செயல்பட்டுள்ளது என்பதை அடுத்த 3 முதல் 5 ஆண்டுகள் தீர்மானிக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீதர் வேம்புவின் இந்தப் பதிவை நெட்டிசன்கள் பலரும் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். அமெரிக்காவில் சாஃப்ட்வேர் துறையில் பணியாற்றும் இந்தியர்கள் அங்கிருந்து உடனடியாக இந்தியாவுக்குத் திரும்பி வர வேண்டும் என்றும், புதிய இந்தியாவைப் படைப்போம் என்றும் சில நாட்களுக்கு முன்புதான் ஸ்ரீதர் வேம்பு பதிவிட்டிருந்தார்.
ஆனால், தற்போது தனது நிறுவன ஊழியர்களுக்கு இந்த ஆண்டு சம்பள உயர்வு இல்லை என்று அறிவித்துள்ளார். இதனால், பலரும் கோபமடைந்து ஸ்ரீதர் வேம்புவைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

