தனியாரிடம் ஒரு யூனிட் மின்சாரத்தை 35 ரூபாய்க்குக் கொள்முதல் செய்யப்பட்டுள்ள விவகாரத்தில் தவெக அரசுக்கு எதிராக அரசியல் தலைவர்கள் கண்டம் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மீண்டும் தனியாரிடம் மின்சாரம் வாங்குவது கையூட்டிற்காகவா? என்று விமர்சித்திருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மக்களிடம் ஏற்கனவே பன்மடங்கு அதிகமாக மின்கட்டணம் வசூலித்து வரும் நிலையில், ஓர் அலகு மின்சாரம் 35 ரூபாய்க்கு தனியாரிடம் வாங்கினால் இன்னும் எத்தனை மடங்கு அதிகமாகக் கட்டணத்தை உயர்த்தப்போகிறீர்கள்? மீண்டும் தனியாரிடம் மின்சாரம் வாங்குவது கையூட்டிற்காகவா?
தமிழ்நாட்டில் நிலவும் மின்பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காத் தனியார் நிறுவனங்களிடமிருந்து ஓர் அலகு மின்சாரத்தைச் சுமார் 35 ரூபாய்க்குக் கொள்முதல் செய்ய தவெக அரசு முடிவெடுத்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. அரசின் சொந்த மின் உற்பத்தி திட்டங்களை வலுப்படுத்தாமல், அதிக விலை கொடுத்து தனியாரிடம் மின் கொள்முதல் செய்வது வன்மையான கண்டனத்திற்குரியது.

தவிர்க்க முடியாத அடிப்படைத் தேவையாக உள்ள மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் நீண்டகாலமாக பெரிய முதலீடு ஏதும் செய்யாமல் முந்தைய திமுக, அதிமுக அரசுகள் அதிக விலை கொடுத்து தனியாரிடம் மின்சாரம் வாங்கியதால் அரசுக்குப் பல்லாயிரம் கோடிகள் இழப்பு ஏற்பட்டு, மின்வாரியம் 2 இலட்சம் கோடிகள் அளவிற்கு கடனில் மூழ்கியுள்ளது. அதையே தவெக அரசும் தொடர்ந்தால் மேலும் மேலும் கடன்தான் அதிகமாகும்.
உற்பத்தியில் முதலீடு செய்வதுதானே நிலையான தீர்வை நோக்கி நகரும். ஒவ்வொரு முறையும் தனியாரிடம் மின்சாரம் வாங்குவதையே தீர்வாகக் கூறிக்கொண்டிருந்தால், தமிழ்நாடு மின் உற்பத்தியில் தன்னிறைவு அடைவது எப்போது? இந்தப் பிரச்னைக்கு நிலையான தீர்வு எப்போது வரும்? அதற்கான திட்டமும் காலக்கெடுவும் எங்கே? மின் உற்பத்திக்கு அணு மின் திட்டமும், அனல் மின் திட்டமும் மட்டும்தான் உள்ளதா? சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத சூரிய ஒளி, காற்றாலை, கடல் அலை உள்ளிட்ட மாற்று மின்பெருக்கத் திட்டங்களே இல்லையா? அவற்றில் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்தாதது ஏன்?