இதுவரை இந்திய ரூபாய் நோட்டுகளைத் தாள்களில் தானே பார்த்திருக்கிறோம். இனி பிளாஸ்டிக்கில் பார்த்தாலும் பார்ப்போம். இந்திய ரிசர்வ் வங்கி இதற்கான யோசனையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தற்போது புழக்கத்தில் இருக்கும் தாள், எளிதாக கிழிந்துவிடுகிறது. இதனால் மீண்டும் அச்சிடும் செலவும் அதிகமாக உள்ளது.
இதையெல்லாம் தவிர்க்கத் தான், பாலிமரில் ரூபாய் நோட்டை அச்சிடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இந்திய ரூபாயை தாளில் இல்லாமல், பாலிமரில் அச்சிடுவதால்…
> 2025-ம் ஆண்டில், மத்திய அரசுக்கு இந்திய ரூபாயை அச்சிடுவதற்கு சுமார் ரூ.5 ஆயிரம் கோடி ஆகியிருக்கிறது. பாலிமரில் ரூபாய் தாள்களை அச்சிட்டால், இந்தச் செலவு குறையும்.
> அடுத்ததாக, பாலிமரில் அச்சிடும் ரூபாய் கிழியாமல், பாழாகாமல் நீண்ட காலத்திற்கு பயன்படும் என்பதால், அதிலும் கணிசமான செலவு மிச்சமாகும்.
> இந்தியாவில் ஏ.டி.எம்கள் அப்கிரேட் செய்யப்பட்டுவிட்டன. அதனால், பாலிமரில் ரூபாய் அச்சிடப்பட்டாலும், அதில் சிக்கல் எழாது.
முன்பே…
2012-ம் ஆண்டு, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோதே, பாலிமரில் ரூபாயை அச்சிடுவதற்கான பிளான் கொண்டுவரப்பட்டது. ஆனால், தொழில்நுட்பப் பிரச்னைகளால் இந்த முடிவு கைவிடப்பட்டது.
ஆனால், இப்போது அந்தப் பிரச்னைகள் எட்டிப்பார்ப்பதற்கான வாய்ப்புகள் இல்லை.
தற்போது உலக அளவில் 60 நாடுகள் பாலிமர் பணத்தைப் பயன்படுத்தி வருகின்றன. 1988-ம் ஆண்டு ஆஸ்திரேலியா முதன் முறையாக இந்த வகையான பணத்தை அறிமுகப்படுத்தியது.
அதன் பின், சிங்கப்பூர், இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகள் பாலிமர் பணத்தைப் பயன்படுத்தி வருகிறது.
இந்தப் பட்டியலில் விரைவில் இந்தியாவும் இணையுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.