Business
oi-Vigneshkumar
சென்னை: தமிழகத்தின் பிரபலமான ஹோட்டல் நிறுவனங்களில் ஒன்றான அடையாறு ஆனந்த பவன் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை அமெரிக்காவைச் சேர்ந்த போதி ட்ரீ சிஸ்டம்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. சுமார் 180 மில்லியன் டாலர் மதிப்பிலான இந்த டீல், இந்திய ஹோட்டல் துறையில் நடைபெற்றுள்ள மிக பெரிய முதலீட்டு ஒப்பந்தங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. அடையாறு ஆனந்த பவனை வாங்கியுள்ள இந்த போதி ட்ரீ சிஸ்டம்ஸ் குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் உள்ள மிக முக்கியமான ஹோட்டல்களில் ஒன்று அடையாறு ஆனந்த பவன். குறிப்பாக சைவ உணவு சாப்பிடுவோரின் முதல் சாய்ஸாக எப்போதும் அடையாறு ஆனந்த பவன் இருந்து வந்துள்ளது. இந்த சூழலில் தான் அடையாறு ஆனந்த பவன் நிறுவனத்தா அதன் உரிமையாளர்கள் விற்பனை செய்துள்ளனர்.

அதன் பெரும்பான்மை பங்குகள் ட்ரீ சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கு விற்கப்பட்டுள்ளது. அப்படியானால் இனி A2B யாருக்கு சொந்தம்? அதை வாங்கிய போதி ட்ரீ சிஸ்டம்ஸ் நிறுவனம் யாருடையது? என்ற கேள்விகளுக்கு நாம் பதிலை பார்க்கலாம்.
போதி ட்ரீ சிஸ்டம்ஸ்
போதி ட்ரீ சிஸ்டம்ஸ் நிறுவனத்தை 2021ம் ஆண்டு ஜேம்ஸ் முர்டோக் மற்றும் உதய் சங்கர் ஆகியோர் இணைந்து தொடங்கினர். ஜேம்ஸ் முர்டோக், உலக புகழ்பெற்ற ஊடக தொழிலதிபர் ரூபர்ட் முர்டோக்கின் இளைய மகன் ஆவார். இவர் லூபா சிஸ்டம்ஸ் நிறுவனத்தையும் நிறுவியவர். மற்றொரு இணை நிறுவனர் உதய் சங்கர், ஸ்டார் இந்தியா மற்றும் டிஸ்னி நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளை வகித்தவர். இந்திய ஊடக மற்றும் பொழுதுபோக்குத் துறையில் நீண்ட அனுபவம் கொண்டவர்.
முக்கிய முதலீடுகள்
இந்த இருவரும் இணைந்து உருவாக்கிய போதி ட்ரீ சிஸ்டம்ஸ் முக்கிய முதலீட்டு நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இவர்கள் வளர்ச்சி வாய்ப்புகள் அதிகமுள்ள நிறுவனங்களில் முதலீடு செய்வதுடன், அதன் ஆபரேஷனை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுகிறது. மேலும், A2B நிறுவனத்தில் முதலீடு செய்வது போதி ட்ரீயின் மூன்றாவது முக்கிய முதலீடாகும். இதற்கு முன்பு 2022ம் ஆண்டு ஆலன் கேரியர் இன்ஸ்டிடியூட்டில் 36 சதவீத பங்குகளை 600 மில்லியன் டாலருக்கு வாங்கியது. 2023ம் ஆண்டு ஜியோஸ்டார் நிறுவனத்திலும் முக்கிய முதலீட்டாளராக இணைந்தது.
A2B நிறுவனம்
A2B நிறுவனம் இந்த ஒப்பந்தத்தின் மூலம் போதி ட்ரீயுடன் இணைந்து நிறுவனத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியை எதிர்நோக்கி இருக்கிறது.. அதற்காக இணை நிறுவனர்களான கே.டி. ஸ்ரீனிவாச ராஜா மற்றும் கே.டி. வெங்கடேசன் முழுமையாக A2Bல் இருந்து வெளியேறி விட்டார்கள் என சொல்ல முடியாது. அவர்களிடமும் கணிசமான பங்குகள் இருக்கவே செய்கிறது.
இப்போது A2Bயின் புதிய இயக்குநர் குழுவின் தலைவராக உதய் சங்கர் பொறுப்பேற்க உள்ளார். வரும் காலத்தில் A2B நிறுவனத்தை பங்குச் சந்தையில் பட்டியலிடும் வகையில் மாற்றுவதே முக்கிய நோக்கமாக இருக்கும் என்று இணை நிறுவனர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
160 உணவகங்கள்
தற்போது A2B நிறுவனத்துக்கு இந்தியாவில் சுமார் 160 உணவகங்கள் உள்ளன. வெளிநாடுகளில் சிங்கப்பூர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் 30க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. இந்நிறுவனத்தில் 15,000க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் வலுவான மார்கெட்டை கொண்டுள்ள A2B, இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் தனது பிஸ்னஸை விரிவுபடுத்தி வருகிறது. உணவகங்கள் மட்டுமின்றி, பேக்கேஜ் செய்யப்பட்ட இனிப்புகள் மற்றும் கார வகைகளையும் விற்பனை செய்து வருகிறது.

