இன்னும் இயங்கும் மேனுவல் லிப்ட்; 1911-ல் கட்டிய திருநெல்வேலி 'தளவாய் ஹால்' மாளிகையின் கம்பீரம்!

Spread the love

திருநெல்வேலி என்றதும் பலரின் நினைவிற்கு வருவது அல்வாவும், நெல்லையப்பர் கோவிலும். ஆனால், இந்த நகரத்திற்கு மேலும் ஒரு பெருமை சேர்க்கும் வரலாற்றுச் சின்னம் ஒன்று உள்ளது. அது திருநெல்வேலி டவுன், மேலரதவீதியில் அமைந்துள்ள “தளவாய் ஹால்” எனப்படும் தெற்கு அரண்மனை.

ராவ்சாகிப் மேடை தளவாய் திருமலையப்ப முதலியார் அவர்களால் 1911-ல் கட்டப்பட்ட இந்த மாளிகை, நூற்றாண்டைக் கடந்தும் தனது கம்பீரத்தையும் பாரம்பர்யத்தையும் இழக்காமல் இன்று வரை காட்சியளிக்கிறது.

இது வெறும் பழமையான கட்டிடம் மட்டுமல்ல; ஒரு குடும்பத்தின் நினைவுகளையும், ஒரு நகரத்தின் வரலாறையும், ஒரு காலத்தின் வாழ்க்கை முறையையும் தலைமுறைகளுக்கு எடுத்துச் சொல்லும் உயிருள்ள வரலாற்று ஆவணமாகத் திகழ்கிறது.

1911-ல் கட்டப்பட்ட பாரம்பர்ய இல்லம்

1911-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மாளிகை, அக்கால கட்டிடக்கலையின் நேர்த்தியையும் பொறியியல் திறனையும் வெளிப்படுத்துகிறது.

சுண்ணாம்பு, கடுக்காய், கருப்பட்டி போன்ற இயற்கை மூலப்பொருட்களைக் கொண்டு கட்டப்பட்ட இந்த இல்லம், நூற்றாண்டைக் கடந்தும் உறுதியாக நிற்பது அதன் கட்டுமானத் தரத்திற்குச் சிறந்த சான்றாகும்.

தளவாய் ஹால்
தளவாய் ஹால்

இத்தாலிய மார்பிள் தரை, பெல்ஜியம் கண்ணாடிகள், வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட அலங்கார டைல்ஸ் உள்ளிட்ட பல அரிய அம்சங்கள் இங்கு இடம்பெற்றுள்ளன. குறிப்பிடத்தக்க வகையில், ஒவ்வொரு அறையிலும் தனித்தனி வடிவமைப்பில் டைல்ஸ் பதிக்கப்பட்டிருப்பதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

நூற்றாண்டைக் கடந்தும் இயங்கும் மேனுவல் லிப்ட்

இந்த மாளிகையின் மற்றொரு வியப்பூட்டும் அம்சம், நூற்றாண்டைக் கடந்த மேனுவல் (கைமுறை) லிப்ட் ஆகும்.

அக்காலத்தில் பொருத்தப்பட்ட இந்த லிப்ட் இன்றும் முழுமையாக இயங்கும் நிலையில் இருப்பது பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்துகிறது.

இதன் செயல்முறையை விளக்கும் குடும்பத்தினர், “இந்தச் சக்கரத்தைக் கைமுறையில் சுழற்றினால், எதிர் எடை (Counterweight) அமைப்பின் உதவியுடன் லிப்ட் மேலே அல்லது கீழே நகரும். இது முழுக்க முழுக்க கைமுறையில் இயங்கும் அமைப்பு,” எனக் கூறுகின்றனர்.

மேலும், இந்த லிப்ட் குடும்பத்தினரின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காகவே அமைக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

தளவாய் ஹால்
தளவாய் ஹால்

மின்சார லிப்ட்கள் பரவலாகப் பயன்படும் இன்றைய காலத்திலும், நூற்றாண்டைக் கடந்த இந்தக் கைமுறை லிப்ட் இன்னும் செயல்பாட்டில் இருப்பது அக்கால பொறியியல் திறனுக்கும் கட்டுமானத் தரத்திற்கும் சிறந்த சான்றாக விளங்குகிறது.

பழமையை மாற்றாமல் பாதுகாக்கும் குடும்பம்

பல பழமையான வீடுகள் காலத்தின் தேவைக்கேற்ப நவீனமயமாக்கப்பட்டு வரும் நிலையில், இந்த மாளிகையில் மரச்சாமான்கள், கதவுகள், ஜன்னல்கள், பழைய லிப்ட், அலங்காரப் பொருள்கள் உள்ளிட்ட பெரும்பாலான அம்சங்கள் மாற்றமின்றி பாதுகாக்கப்பட்டுள்ளன.

“புதிதாக மாற்றுவது எளிது. ஆனால், பழமையைப் பாதுகாப்பதே எங்களின் நோக்கம்,” என்று குடும்பத்தினர் பெருமையுடன் கூறுகின்றனர்.

பராமரிப்பே மிகப்பெரிய சவால்

நூற்றாண்டு பழமையான கட்டிடத்தைப் பாதுகாப்பது எளிதான பணி அல்ல. குறிப்பாக பழைய டைல்களில் விரிசல் ஏற்பட்டால், அதே வடிவமைப்பிலான டைல்களை மீண்டும் தயாரிக்கவோ, கண்டுபிடிக்கவோ முடியாது. இதற்காக பாரம்பர்யக் கட்டிடப் பாதுகாப்பு நிபுணர்களின் உதவியை நாட வேண்டிய நிலை உள்ளது.

தளவாய் ஹால்
தளவாய் ஹால்

குடும்பத்தினர் கூறுகையில், ”ஒரு சிறிய விரிசலைச் சரிசெய்வதற்கே சுமார் ₹50,000 வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஒரு பகுதியை மட்டும் சீரமைப்பது போதாது; முழுக் கட்டிடத்தின் வலிமையையும் கருத்தில் கொண்டு பராமரிக்க வேண்டியிருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

தளவாய் ஹால்
தளவாய் ஹால்

“பழைய கட்டிடங்கள் மிகவும் வலிமையானவை. சரியான நேரத்தில் பராமரித்தால் பல தலைமுறைகள் நிலைத்திருக்கும். பராமரிப்பைத் தாமதப்படுத்தினால் விரிசல்கள் அதிகரித்து அடித்தளம் வரை பாதிக்கக்கூடும்,” என அவர்கள் கூறுகின்றனர்.

நூற்றாண்டு பழமையான கிராமஃபோன்

இந்த மாளிகையில் பாதுகாக்கப்பட்டுள்ள அரிய பொருள்களில் முக்கியமானது His Master’s Voice (HMV) நிறுவனத்தின் பழமையான கிராமஃபோன்.

His Master's Voice (HMV) நிறுவனத்தின் பழமையான கிராமஃபோன்
His Master’s Voice (HMV) நிறுவனத்தின் பழமையான கிராமஃபோன்

ஒவ்வொரு இசைத்தட்டையும் இயக்கும்போது தனித்தனியாக ஊசியை மாற்ற வேண்டும். மேலும், கருவியைக் கைமுறையில் வைண்டிங் செய்து இயக்க வேண்டியிருக்கும்.

தற்போது அதன் ஸ்பிரிங் மற்றும் சவுண்ட் பாக்ஸ் சேதமடைந்துள்ளதால் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தாலும், பாரம்பர்ய நினைவுச் சின்னமாக குடும்பத்தினர் அதைப் பாதுகாத்து வருகின்றனர்.

திரைப்பட இயக்குநர்களின் கவனத்தை ஈர்த்த அரண்மனை

இந்த மாளிகையின் தனித்துவமான கட்டிட அமைப்பு தமிழ்த் திரைப்பட உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

குடும்பத்தினர் கூறுகையில், குற்றாலத்தில் இந்தக் குடும்பத்தினருக்குச் சொந்தமான விடுதியில் இந்த மாளிகையின் புகைப்படத்தை இயக்குநர் பி. வாசு முதன்முதலில் பார்த்துள்ளார். அந்தப் புகைப்படம் அவரைக் கவர்ந்ததைத் தொடர்ந்து, நேரில் வந்து மாளிகையை ஆய்வு செய்த பிறகே தனது திரைப்படத்தின் சில காட்சிகளை இங்கு படமாக்க முடிவு செய்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

தளவாய் ஹால்
தளவாய் ஹால்

அதன் தொடர்ச்சியாக, “வேலை கிடைச்சுடுச்சு, டும் டும் டும், சாது, சுந்தர புருஷன்” உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களின் சில காட்சிகள் இந்த மாளிகையில் படமாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், இந்தப் பாரம்பர்ய மாளிகை வரலாற்றுச் சின்னமாக மட்டுமல்லாமல், தமிழ் திரையுலகின் நினைவுகளைத் தாங்கிய முக்கியமான படப்பிடிப்புத் தளமாகவும் விளங்குகிறது.

அரிய பழமையான கார்கள்

இந்தக் குடும்பத்திற்குப் பழமையான கார்கள் மீது தனி ஆர்வம் உள்ளது.

மெர்சிடீஸ்-பென்ஸ் மற்றும் ஃபியட் பிரீமியர் பத்மினி உள்ளிட்ட பழமையான வாகனங்களை அவர்கள் பாதுகாத்து வருகின்றனர். உலகிலேயே அரிதாகக் காணப்படும் சில பழைய மாடல் கார்களை மீண்டும் வாங்கி பாதுகாக்க வேண்டும் என்பதும் அவர்களின் நீண்டநாள் விருப்பமாக உள்ளது.

தளவாய் ஹால்
தளவாய் ஹால்

பிரிட்டிஷ் கால நினைவுகளைச் சுமக்கும் தர்பார் ஹால்

இந்த மாளிகையின் முக்கியமான பகுதிகளில் ஒன்று தர்பார் ஹால்.

குடும்ப மரபின்படி, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் புதிய மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்பேற்கும் முன் இந்த இல்லத்தில் விருந்துண்டு மரியாதை செலுத்திய பின்னரே அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றதாகக் கூறப்படுகிறது.

அந்தக் காலத்தில் இந்த மாளிகை சமூக மற்றும் நிர்வாக நிகழ்வுகளின் முக்கிய மையமாக விளங்கியதாகவும் குடும்பத்தினர் நினைவுகூர்கின்றனர்.

தளவாய் ஹால்
தளவாய் ஹால்

நெல்லையப்பர் கோவிலுடன் தொடரும் உறவு

இந்தக் குடும்பத்திற்கும் நெல்லையப்பர் கோவிலுக்கும் பல தலைமுறைகளாக ஆன்மிகத் தொடர்பு இருந்து வருகிறது.

திருக்கல்யாண விழாவின்போது அம்மனுக்கான முதல் தாலி, வேட்டி, சேலை உள்ளிட்ட காணிக்கைகள் இன்றும் இந்த இல்லத்திலிருந்தே எடுத்துச் செல்லப்படுகின்றன. மேலும், சில முக்கிய திருவிழாக்களில் கோவில் பல்லக்கு இந்த இல்லத்தின் முன் நின்று மரியாதை செலுத்தும் பாரம்பர்யமும் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

தளவாய் ஹால்
தளவாய் ஹால்

“தளவாய்ஹால்” ஒரு குடும்பத்தின் சொத்தாக மட்டுமல்லாமல், கட்டிடக்கலை, கலாசாரம், கோவில் மரபுகள், பிரிட்டிஷ் கால வரலாறு மற்றும் திரைப்பட நினைவுகளைத் தாங்கி நிற்கும் அரிய பாரம்பர்யச் சின்னமாக விளங்குகிறது.

காலம் மாறலாம். வாழ்க்கை முறை மாறலாம். ஆனால், வரலாற்றைப் பாதுகாக்கும் மனம் இருந்தால், நூற்றாண்டுகளைக் கடந்தும் ஒரு வீடு பேசிக்கொண்டே இருக்கும் என்பதை இந்த மாளிகை உணர்த்துகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *