சினிமாக்கள் இல்லாத காலங்களில் மக்கள் நாடகங்களையே விரும்பி ரசித்து பார்த்து வந்தனர். பம்மல் சம்பந்த முதலியார், சங்கரதாஸ் சுவாமிகள், சபாபதி முதலியார் போன்றோரின் நாடகப் பணி அளப்பரியது. நடிக்கும் நாடகக் கலைஞர்கள் நடிப்பை உள்வாங்கி நடிப்பதோடு மட்டுமல்லாமல் பார்த்து ரசிக்கும் மக்களையும் ஒவ்வோர் உணர்வுகளாலும் ஈர்த்துவிடுவார்கள், நாடகக் கலைஞர்கள். இன்று நாடகத் துறை நலிவடைந்ததுபோல் காணப்பட்டாலும் நிறைய நாடகக் கலைஞர்கள் நாடகத்துறைக்கு புதுப்பொலிவு கொடுத்து வருகின்றனர்.
அதில் முக்கியமானவர் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ். இவர் ஈரோட்டில் உள்ள அம்மன் கலைக் கல்லூரியில் படித்து வரும்போதே மாணவர்களை வைத்து அம்மன் கானா மற்றும் கலைக்குழுவை கல்லூரியிலேயே அமைத்து விழிப்புணர்வு வீதி நாடகங்களை, ஈரோடு சுற்றுவட்டாரத்தில் நடத்தி அசத்தி வந்தார். படிப்பு நிறைவடைந்ததும் இவர் சென்னை கூத்துப்பட்டறையில் சேர்ந்து மூன்றாண்டுகள் பயிற்சி பெற்றார். பின்னர் ஈரோடு நாடகக் கொட்டகை என்னும் சிறு குழுவை அமைத்து மாணவர்களுக்கு இலவசமாக நாடகம் கற்றுத் தருகிறார்.
இது குறித்து ஈரோடு நாடகக் கொட்டகையில் உள்ள நாடகக் கலைஞர் பிரனேஷ் முருகேசனிடம் நாடகக் கொட்டகையின் செயல்பாடுகள் குறித்து உரையாடினோம்.
“இங்கு மாதம் இரண்டு, மூன்று நாடகங்களை நிகழ்த்துவோம். ஈரோடு, புதுச்சேரி, மதுரை, கோவை, கேரளா, சென்னை போன்ற இடங்களில் நடைபெறும் “தியேட்டர் ஃபெஸ்டிவல்ஸ்’ போன்ற நிகழ்வுகளிலும் மற்றும் பல இடங்களிலும் வீதி நாடகங்கள் நிறைய நிகழ்த்துவோம். மேலும் சதீஷ் அவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ‘தியேட்டர் இன் எஜுகேஷன்’ என்ற பெயரில் மாணவர்களுக்கு நாடகக் கலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அரசு நிகழ்ச்சிகளிலும் வீதி நாடகங்களாக நடிப்பதற்கு அழைப்பார்கள். அதற்கும் நாடகங்கள் தயாரித்து நடிப்போம். ஈரோடு நாடகக் கொட்டகையில் நாங்கள் நடத்தும் நாடகங்களுக்கு நல்ல வரவேற்பு உண்டு. எழுத்தாளர்கள் மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த பலரும் இங்கு வந்து நாடகங்களைப் பார்த்துச் செல்வார்கள். போன வாரம்கூட மதுரையில் உள்ள ‘திகழ் ப்ரோடக்ஷ்ன்’ என்னும் நாடகக் குழுவிலிருந்து வந்து நாடகம் நிகழ்த்தினார்கள்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தில் உள்ள எழுத்தாளர்களின் நாடகங்கள், பத்ம ஶ்ரீ.ந.முத்துசாமி அய்யாவின் நாடகங்கள் என பல்வேறு வகையான நாடகங்களையும் நடித்து வருகிறோம். ‘உடல்மொழி நாடகம்’ என்ற வகையிலும் நாடகம் நிகழ்த்துகிறோம். ஒரு சில நாடகங்கள் 50 ஷோக்களுக்கும் மேலாகச் சென்றிருக்கிறது. ஈரோடு மட்டுமல்லாமல் மக்கள் வரவேற்பு பெற்ற பல நாடங்களை வெளியூரிலும் நிகழ்த்துகிறோம்.
2021-ல் ‘டக்குனு ஒரு கதை’ 70 ஷோக்கும் மேலாகச் சென்றிருக்கிறது. சமூக வலைதளங்களில் நாங்கள் எங்கள் செயல்பாடுகளைப் பதிவு செய்வதால் அதன் மூலம் நிறைய பேர் எங்களை அறிந்து நாடகம் போட அழைப்பார்கள். மேலும் சென்னை கலைக்குழு தயாரிப்பில் நடிகை ரோகினியின் ‘வனப்பேச்சி’ என்னும் நாடகத்தை நாடகவியலாளர் பிரளயன் அவர்கள் இயக்கியிருந்தார். அந்நாடகத்தை ஈரோட்டில் ஒருங்கிணைத்தோம்.” என்றார்.